கருவிலிருந்து கல்லறை வரை

உயிர்கள் தோன்றும் இடம் தான் தாயின் கருவறை. கருவிலிருந்து கல்லறை வரை மனிதன் செல்லும் முன் சந்திக்கும் சில்லறை பிரச்சனைகள் ஏராளம், ஏராளம் . கருவுக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட நாட்களில் மனிதனின் வாழ்க்கைப் பயணம் எவ்வாறு இருக்கின்றது என்பதை அலசுகின்றது இந்த பதிவு.

மழலைப் பருவ வாழ்க்கை

ஒரு குழந்தையானது, தனது மனதில் உதிக்கும் எண்ணங்களை தனக்கு புரிந்த மொழி வடிவில் இந்த உலகுகிற்கு வெளிப்படுத்த முயலும் போது, அதை கேட்கும் நமக்கு மிகவும் அருமையாக இருக்கும். அதே நேரம் அந்த பெற்றோருக்கு காதில் ஆனந்த ராகமாக ஒலிக்கும். குழந்தையின் வயது இரண்டை தாண்டும்போது தனது தாய் மொழியில் தனக்கு புரிந்ததை  வைத்து பேசப்  பழகும்.

அந்த மழலை வார்த்தைகள் கேட்போர் அனைவரையும் ஆனந்த கூத்தாட வைக்கும். இன்னும் சற்று ஆறு அல்லது ஏழு வயது வரை குழந்தைகள் தனக்கே உரித்தான மழலை மொழிகளில் பேசுவது, பாடுவது, கதை சொல்வது, சண்டை இடுவது என மழலை மொழிகளின் அட்டகாசங்கள் அனைத்தும் ரசிக்கத் தூண்டும் விதத்தில் அமையும்.

இந்த பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பில் வாழும் குழந்தைகள், பெற்றோரின்  எந்த சிரமங்களையும் உணரத்தெரியாமல் ஜாலியாக வாழும் ஒரு அருமையான பருவம். குழந்தைகள் இந்தப் பருவத்தில் தான் பல கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ள ஆரம்பிக்கும். +

.இந்த மலைப்பருவதில் தான் குழந்தைகள் வெள்ளை மனதுடன் இருப்பார்கள். அதாவது கள்ளமில்லா உள்ளத்துடன் இருப்பார்கள்.

ADVERTISEMENT

குழந்தையும் தெய்வமும் ஓன்று என்ன சொல்ல கேட்டருப்பீர்கள் அல்லவா? அது இந்த மழலை பருவம் தான். இந்த காலகட்டங்களில் குழந்தைகள் உலக போக்குகளை கவனிக்க துவங்கும். இந்த வெள்ளை உள்ளங்கள் இன்றைய சமூகங்களால் அல்லது வளரும் குடும்பங்களால் கறைபடிய ஆரம்பிக்கின்றது என்பது வேதனைக்குரியது.

சிறுவார்ப் பருவ வாழ்க்கை

சிறுவர் பருவம் என்பது அடுத்த கட்டம். இந்த பருவமும் ஏறக்குறைய மழலை பருவமும் கலந்த கலவை தான். இந்த சிறுவர் பருவத்தில் தேடல்கள் என்பது சற்று விரிவடைய தொடங்கும். உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் விடை காண விளையும்.

இந்த நேரத்தில் தொடர்புடைய குழந்தை அல்லது சிறுவர் சிறுமியர் விடை காண விரும்பும் வினாக்களுக்கு தெளிவான முறையில் பதில் வழங்க முன் வர வேண்டும். அப்படி என்றால் எல்லா வினாக்களுக்கும் பச்சையாக பதில் சொல்லி விடக்கூடாது.

உதாரணமாக தனது தாயிடம் ஒரு சிறுவன் அல்லது சிறுமி எங்களை போன்ற குழந்தைகள் எப்படி அம்மாவின் வயிற்றில் உருவாகி பிறக்கின்றார்கள்? என கேட்டால் உடனடியாக பச்சையாக சொல்லி விடாதீர்கள். அதை இலைமறைக்  கனியாக அதே நேரம் தவறில்லாமல் புரிய வையுங்கள்.

பல் முளைக்காத குழந்தைகளுக்கு திரவ முறையில் உணவு கொடுப்பது தானே சிறப்பு. அப்போது தான் சரியாக ஜீரணம் நடக்கும்.அதே போன்று சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி தரப் படவேண்டும்.

ADVERTISEMENT

ஆக இந்த சிறுவர் பருவமும் மிக்க அழகான பருவம் தான். வாழ்க்கையில் பெற்றோர் அனுபவிக்கும் பொருளாதார சிரமங்களாய்  இருக்கலாம், அல்லது நோய் நொடிகளாக இருக்கலாம். எதுவும் இந்த பருவத்தினருக்கு கவலை இல்லை என்றே  சொல்லலாம்.

எல்லாம் தாயும் தந்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்ற கண்முடித் தனமான நம்பிகை தான். இந்த நம்பிகையில் அந்த குழந்தையின் சிறுவர் பருவம் சிறப்பாக கடந்து அடுத்த பருவத்தை தொடுகின்றது.

எமது முந்தய பதிவை வாசிக்க: உறவுகளைப் பேணுவோம்

மாணவரப் பருவ வாழ்க்கை

அடுத்த பருவம் மாணவர் பருவம். இந்த பருவம் ஒரு இனிமையான பருவம். இன்பங்கள் எங்கே என தேடி அடைய துடிக்கும் பருவம் எனலாம். அதாவது இந்த பருவத்தில் தான் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ பருவ மாறுதலை சந்திக்கின்றார்கள்.

அதாவது தன்னை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாமல், கவர்ச்சிகளை உண்மை என நம்பி பலவிதமான மனப் போராட்டங்களுக்கு  உட்பட்டு சீரழிந்து போகின்றார்கள். கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய  பல விடலையர்கள், பலவற்றுக்கும் விடை தேடி அலைவது வாடிக்கையாகி விட்டது.

ADVERTISEMENT

வசந்தமான, வளமான எதிர்காலம் சிறப்புற அமைய சரியான, உறுதியான அடித்தளம் இடவேண்டியது இந்த மாணவர் பருவத்தில் தான். சில மாணவர்கள் தங்களது குடும்பத்தினரின் வளர்ப்பு முறையினால், இந்த மாயைகளில் சிக்கிக் கொள்ளாமல், தனது கடமைகளில் சரியாக இருந்து வாழ்வில் பெரிய நிலைகளை அடைகின்றனர்.

ஆனால் அனேக மாணவர்களோ, வளர்ப்பு முறை சரியாக இருந்த போதிலும் சில ஹார்மோன்களின் சுரப்பிகளின் காரணமாக நெறி தவறி வாழ்வை சிதைத்து விடுகின்றனர்.எது எப்படி இருந்தாலும் இந்த பருவம் தன்னை ஒரு பெரிய நபர் என நிரூபிக்க துடிக்கும் பருவம். சமூகம் இவர்களின் குரலுக்கு மதிப்பு தரவேண்டும் என எதிர்பார்க்கும் பருவம். இந்த பருவம் ஒரு விளை நிலம் போன்றது.

இந்த பருவத்தில் நல்ல சிந்தனைகள் என்ற விதைகளை விதைத்தால் ஒவ்வொரு மாணவரும், மாணவியரும் நல்ல எதிர்காலம் என்ற பயிரை அறுவடை  செய்ய முடியும். தேவையற்ற சிந்தனைகளை விதைத்தால் தீமைகள் என்ற பைரைத்தான் அறுவடை செய்ய இயலும். எனவே நமது வாழ்கை பயணம் இனிதாய் அமைய நல்லதை மட்டுமே செய்வோம்.

வாழத்துடிக்கும் வாலிபப் பருவம் 

வாலிப பருவம் என்பதை இளமை பருவம் எனவும் சொல்லலாம். இந்த பருவம்  வாழ்வை அனுபவிக்கத்  துடிக்கும் பருவம். இந்த காலகட்டம்   தான் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் நேரம். சுகமாய் சுற்றித் திரிந்த இளவல்கள் குடும்பதின் சுமைகளை தாங்கிப்பிடிக்கும் தங்கமான நேரம்.

இதுவரை பொறுப்பற்று இருந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் தனது உடன் பிறப்புகளை, தனது வாழ்கை துணையை அல்லது குடும்பத்தின் பெரியவர்களை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு கூடுகின்றது.வாகனங்கள் இயங்க எவ்வாறு எரிபொருள் தேவையோ அதுபோல வாழ்கை என்ற வண்டி இயங்க நல்ல பொருளாதாரம் தேவை.

ADVERTISEMENT

இந்த பொருளாதாரத்தை கண்டு பிடிக்க, கண்டுபிடித்த பொருளாதாரத்தை உரிய முறையில் செலவு செய்து குடும்பம் என்கின்ற வண்டியை இயக்க வாலிபம் படுகின்ற பாடு சொல்லி மாளாது. பல வாலிபர்கள் தங்களது குடும்பத்துக்கு தேவையான பொருளாதாரத்தை கடல் கடந்து சென்று சம்பாதிக்கின்றார்கள்.

ஒன்றாய் இணைந்து வாழவேண்டிய வயதில் உறவுகளை உதறி தள்ளிவிட்டு உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து பல தியாகங்களை  செய்து சம்பாதிக்கின்றார்கள். அதற்காக இந்திய திரு நாட்டில் இருக்கும் வாலிபர்கள் எல்லாம் ஒரு சிரமமும் இல்லாமல் சுகமாக வாழ்கின்றார்கள் என்று அர்த்தம் அல்ல.

ஒரு சிலர் எளிமையாய் அதே நேரம் நிறைவாய் சம்பாதிக்கின்றார்கள். மற்றவர்கள் அனைவரும், வாழ்கை வண்டியினை இயக்க சிரமப் படுகின்றார்கள் எனவே சொல்ல வேண்டும். அதாவது பல இடங்களில் அவமானப் பட்டு, குனிக் குறுகி நின்று தான் பணம் சம்பாதிக்கின்றனர். கருவறையில் இருந்து கல்லறைக்கு செல்லும் முன் மனித இனம் இந்த வாலிப வயதில் தான் அனேக சில்லறை பிரச்சனைகளை  சம்மாளிக்க வேண்டி உள்ளது.

குடும்பத் தலைமைப் பருவம்

இந்த பருவம்  வாலிப சிக்கல்களில் சிக்குண்டு, வாழ்வில் பல சுனாமி பேரலைகளைக்  கண்டு, பல வாழ்கை அனுபவங்களை சுமந்துகொண்டு தனது வாரிசுகள் , தன்னைப்  போல சிரமப்படாமல் நல்ல ஒரு வாழ்கை வாழவேண்டும் என ஆசைப் படுகின்ற வயது.

தனது மகனுக்காக அல்லது மகளுக்காக பல தியாகங்களை முன்னெடுக்கும் பருவம். தனக்கு நல்ல காலணிகள், துணிமணிகள் இல்லாவிட்டாலும் தனது பிள்ளைகள் கோடீஸ்வரரின் பிள்ளைகள் போல வாழ வைக்கவேண்டும் என நினைக்கின்ற பருவம் தான் குடும்ப தலைமைப் பருவம்.

ADVERTISEMENT

பல அப்பாக்கள் வேலைக்கு செல்ல ஒரு மிதிவண்டி கூட வைத்துக் கொள்வதில்லை.  ஆனால் தனது பிள்ளைகளுக்கு லட்சங்களுக்கு மேல் பண மதிப்புள்ள இரு சக்கர வாகனங்கள் வாங்கித் தருகின்றனர். தன்னிடம் பழைய மாடல் அலைபேசி ஓன்று சரியான பட்டன்கள் கூட இல்லாமல் இருக்கும்.

ஆனால் தனது மகனிடமும், மகளிடமும் புத்தம் புதிய, பல்லாயிரம் விலை பிடித்த அலைப் பேசிகள்  துலங்கும். தான் வசிப்பது வசதி வாய்ப்புகள் குறைந்த ஒரு சிறிய வீட்டில். ஆனால் தனது மகனுக்கோ நல்ல வசதி உள்ள மாட மளிகை ஒன்றை உருவாக்கி தருகின்றார்.

தனது மகளுக்கோ தங்க ஆபரணங்கள் புடை சூழ திருமணம் செய்து கொடுகின்றார். பல கணவன்மார்கள் தனது மனைவி வெளியில் சென்று கை ஏந்தி சம்பாதிப்பதை விரும்புவதில்லை. தனது மொத்த குடும்ப சுமையையும் தானே ஏற்று நடத்துகின்றார்கள்.

இது ஒரு நல்ல எண்ணம் என்றாலும், இது ஒரு மிகப்பெரிய தவறு. காரணம், ஒரு மனிதனுடை ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள் என்பது தெரியாது. தன் மேல் உள்ள நம்பிக்கையில் அவர் உளைகின்றார். ஒரு வேளை அந்த குடும்ப தலைவர் தவறி விட்டால், அந்த குடும்பத்தை எந்த  முன் அனுபவமும் இல்லாத அந்த மனைவி எவ்வாறு நடத்துவாள்?

ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள். உங்கள் மனைவியரை எதாவது ஒரு வேலைக்கு அனுப்புங்கள். அல்லது தொழில் செய்ய அனுமதியுங்கள். ஒரு வேளை நாம் தவறி விட்டால் அந்த குடும்பத்தை அந்த பெண்மணி தாங்குவாள்.

ADVERTISEMENT

அல்லது தனது குழந்தைகளை வாழவைக்க தெருவில் அலைய நேரிடலாம். வாகனம் வைத்திருப்பவர்கள் காப்பீடு செய்வது தனது வாகனம் மோதும் என்பதற்கு அல்ல. ஒரு பாதுகாப்புக்காகவே. அது போல மனைவியும் வேலைக்கு செல்வது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவே.

முதுமைப் பருவம்

இந்த பருவம் மனிதன் தனது வாழ்கை பயணத்தை முடித்துக் கொண்டு இறப்பை எதிர்பார்த்து இருக்கும் காலம் எனலாம். வாழ்வில் கடினமாக செயல்பட்ட பலரும், அதை விட்டு விட்டு மென்மையான மனதுக்கு சொந்தக்காரர் ஆகும் பருவம் தான் இந்த முதுமை பருவம்.

இறை நம்பிக்கை அதிகரித்து, தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வயது. துடிப்பாய் செயல்பட்ட காலத்தில் பலரது வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்த பலரும் அதை மறு பரிசீலனை செய்யும் காலம். காரணம் மனது குழந்தை பருவத்தை நோக்கி பயணிக்கும் காலகட்டம் இது.

செய்த தவறுகளுக்கு பரிகாரம் தேடும் வயதும் இதுதான். இளமை  பருவத்தில் நிரம்ப சம்பாதித்த பலர் தனது பிள்ளைகளால் புறம் தள்ளப்பட்டு, ஒதுக்கப்பட்டு சாலை ஓரங்களிலும், முதியோர் இல்லங்களிலும் அனாதைகளாய் இருப்பது  மிகுந்த வேதனைக்குரியது.

ஆனால் ஒரு சிலருடை வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டு வசதியான வாழ்க்கை அமைந்து விடுவதும் உண்டு.   கல்லறைக்கு செல்லும் முன் மனிதன் சந்திக்கும் சவால்கள் ஆயிரம்.

ADVERTISEMENT

கல்லறை நோக்கி

தாயின் கருவறையில் இருந்து வெளிவந்த மனிதன், கடந்து வரும் நாட்களில்  சில்லறை பிரச்சனைகளை   சந்தித்து தான் ஆகவேண்டும் என்பது நியதி. ஆக பிறந்த மனிதர்  நாம் அனைவரும் இறப்பை நோக்கிதான் பயணிக்கின்றோம்.

பிறக்கும் போது நாம் எதுவும் கொண்டு வரவும் இல்லை. கல்லறைக்கு செல்லும்போது  நாம் எதுவும் எடுத்து செல்வதும்  இல்லை. பின்னர்  ஏன் இதற்கிடையில் கோபங்கள்? வஞ்சகங்கள்? ஏமாற்றுக்கள்? துரோகங்கள்? சுயநலங்கள்? சண்டைகள்?

வேண்டாம்! வாழ்வது சில காலங்கள்.  வாழும்போது மனித மாண்போடு வாழ்வோம். நம்மால் ஒரு குடும்பம் அல்ல ஒரு சமூகமே வாழ்வடைந்தது என்ற மன நிறைவோடு வாழ்வை நிறைவு செய்வோம்.

எமது அடுத்த பதிவை படிக்க: வேலை இல்லா திண்டாட்டமும் தீர்வும்

One comment

Leave a Reply