“வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு, சமூக வளர்ச்சியில் இளைஞர்கள் நிச்சயம் ஈடுபாடு காட்டவேண்டும். மரணம் என்னும் முடிவு வருவதற்குள் அதனை சமுக நலனுக்காக செலவு செய்வதே சிறப்பு”.
சமூக ஈடுபாட்டில் இளைஞர்கள்
விதை ஒன்று செடியாக வேண்டுமெனில், அது மடிந்து, அதன் இயல்பு நிலை அழிந்து, சார்ந்து இருக்கும் மண்ணை முட்டி, மோதி, கிழித்து, உருமாற்றம் அடைந்து, இளந்தளிராகி, செடியாகி, மரமாகி, வளர்ந்து பூவாகி, காயாகி, கனியாகி மக்களுக்கு பலன் கொடுத்து வாழ்வதே மடிந்து போன விதைக்கு அழகு.
இதேப் போன்று வாழ்வின் முக்கியமானப் பருவமாம் இளமைப் பருவத்தில் எவர் ஒருவர் தன்னையே சமூகத்தோடு இணைத்துக் கொண்டு, சமூக அழுக்குகள் களையப்பட, சமூகப் பணிகளை முன்னெடுக்கின்றாரோ, அது இளைஞனுக்கு, அந்த இளமைப் பருவத்திற்கு அழகு.
“பொது நலம் இல்லாத கொள்கைகள்
செயல்பாடுகள் இல்லாத அமைப்புக்கள்
இயக்கமில்லா இயக்கங்கள்
வாழ்வாக்கப் படாத செயல்பாடுகள்”.
இவை எல்லாம் வேரறுக்கப்பட்டு கொள்கைத் தெளிவும், இலட்சியப் பிடிப்பும் உள்ள அமைப்புக்களே நமக்குத் தேவை. அதற்கு சமூக அமைப்புக்களில் நாம் இணைவதும், நமது பங்கேற்பை உறுதிப் படுத்துவதும் உண்மைக்காய் குரல் கொடுப்பதுமே தலையாய பணி ஆகும்.
இதனை மனக்கண் கொண்டு, நமது சமூகத்தில் இளைஞர்களின் இன்றைய நிலை என்ன? நமது பங்கேற்பு அமைப்புக்கள் அவர்களில் வாழ்வுக்கான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளதா? இளைஞர்களுக்கான எதிர்பார்ப்புக்கள் என்னென்ன? தடைகளைத் தாண்ட, நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு சிறிது காண்போம்.
மனித சமூகத்தின் ஒற்றுமை
நாட்டில் மனித சமூகம் அனைத்தும் சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றாக இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக இயங்கும் அமைப்புகளோடு இணைந்து பங்கேற்க வேண்டும். அரசியல் தலைவர்களும், பொது பொது மக்களும் இணைந்து பணி செய்கின்ற ஓர் உன்னதத் தளம் தான் இந்த நாடு என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு நிலமை உருவாக வேண்டும்.
“சமூக வளர்ச்சி, அது தேங்கிக் கிடக்கின்ற குட்டை அல்ல, மாறாக, வற்றாத, ஜீவநதியாக பாய்ந்து ஓடி ஓடுகின்ற இடமெல்லாம் வளம் கொழிக்கச் செய்கின்ற, ஓர் உன்னத பணியாக மாறவேண்டும்.”
வாழ்வோடு இணைந்த சமூகப்பணி
மனித வாழ்வு என்பது சமுகப் பணிகளோடு இணைந்தவையாக மாற வேண்டுமெனில், நாடுகள் காலத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொள்வதும், அதன் சமூக அமைப்புகளின் பணிகளை அலசி ஆராய்வதும் பங்கேற்பாளர்களின் கடமைகளை தெளிவாக்குவதும் அரசின் அல்லது சமூக அமைப்புகளின் கடமை ஆகும். இளைஞர்களும் சுயநலங்களை களைந்து களத்தில் கால் பதிக்கவேண்டும்.
தற்போது , நிலவி வரும் காலச் சூழல்களுக்கு ஏற்ப, உலகளாவிய நிலையில் ஊடுருவி நிற்கும் மனிதநேயம் மிக்க இளைஞர்கள் நாளைய தலைவர்களாய், நம்பிக்கை நட்சத்திரங்களாய், திரு நாட்டின் தூண்களாய் , உருவாக வேண்டும்.
நல்ல சமூக பங்கேற்பு அமைப்புகளில் இளைஞர்களின் பங்கு அதிகமாகிட, விழிப்புணர்வு பயிற்சிகள் பரவலாகிட பொறுப்புக்கள், கடமை உ ணர்வுகள் மேலோங்கிட, வழிகாட்ட வேண்டியது மிக, மிக அவசியம்.
இளைஞர்களுக்கு வழிகாட்டல்
‘சமூக அமைப்பு என்பது ஆகாயத்தில் தொங்கும் அமைப்பு அல்ல’. ‘நாம் தான் அந்த அமைப்பு’. நாம் ஒவ்வொருவரும் அதன் அங்கத்தினர்கள் என்ற எண்ணம் நம்மிடம் மேலோங்கி நிற்க வேண்டும். கலங்கரை விளக்கு இருந்தால் தான் கப்பல்கள் கரை சேர முடியும்.
அதேப் போன்று இளைஞர்களுக்கு நல்வழி காட்டக்கூடிய பங்கேற்பு அமைப்புகள் இருந்தால் மட்டுமே இளைஞர்கள் சீரிய வழியில் பயணிக்க முடியும், அல்லது பிறருக்கு பாதை காட்டி வாழ முடியும். ஆக, இளைஞர்களின் தடம் புரளா பயண வாழ்விற்கு மிகமிகத் தேவை சமூக பங்கேற்பு அமைப்புகளே!.
எமது முந்தய பதிவை வாசிக்க: மாமியார் மருமகள் உறவு சிறக்க
யார் இளைஞர்கள்?
“18 வயதிற்கு மேல் 35 வயதிற்கு உட்பட்ட திருமணம் ஆகாத ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இளைஞர்களே”.
இவர்கள்
- துடிப்பானவர்கள்
- எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருப்பவர்கள்
- கனவுகளில் மிதப்பவர்கள்
- சவால்களை சாதித்துக் கட்டுபவர்கள்
- சங்கடங்களை சாதனைகளாக மாற்றுபவர்கள்
- எதையும் செய்யும் மனநிலை படைத்தவர்கள்
- சிந்தனை சிறகுகளை அகல விரிப்பவர்கள்
- வாழ்வில் கற்களும்,முட்களும் மட்டுமல்ல,மணம் வீசும் மலர்களும் உண்டு என நிரூபிப்பவர்கள்.
- போராட்ட குணம் கொண்டவர்கள்
- எடுத்ததை முடிக்கும் மிடுக்கானவர்கள்
- பலசாலிகள்,பலமானவர்கள்
- நாளைய உலகின் விடிவெள்ளிகள்
என இன்னும் பல.
இத்தகு சிறப்புமிகு இளைஞர் சக்தியை ஒருங்கிணைப்பதும், அவர்களுக்கான தளங்களை உருவாக்குவதும், பயிற்சிப்பட்டறைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும், தலையாய கடமை.
இங்ஙனம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கற்கால இளைஞர்களுள் பலர் ,
- அவசர உலகில் சிக்கித் தவிப்பவர்கள்
- உள்ளங்கையில் அடங்கும் அலைபேசியை உலகமென நினைப்பவர்கள்
- பல வேளைகளில் இலட்சிய தெளிவில்லாதவர்கள்
- காலத்தின் சூழ்நிலைகளை அறியாதவர்கள்
- நட்பு வட்டத்திற்குள் அதிகமாக தங்களை முடக்குபவர்கள்
- திரைவசனங்களை அதிகம் நம்புபவர்கள்.
- நடிகர்கள் தான் வாழ்வின் முன்மாதிரி என தப்புக்கணக்கு போடுபவர்கள் .
- கல்லூரிக்குள் கால் வைத்தாலே காதல் மாயைக்குள் சிக்கித் தவிப்பவர்கள்
- மறுக்கப்படும் உரிமைகளைக் கூட கேட்கத் தயங்குபவர்கள்.
- அரசியல் தளங்களில் பங்கேற்க தயங்குபவர்கள்
- ஒதுங்கு மனப்பாண்மை அதிகம் உள்ளவர்கள் .
இங்ஙனம்,பல்வேறு பாதிப்புகளுக்கும், அவல நிலைகளுக்கும் உள்ளாகி இருக்கும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதும்,உரிய பயிற்சிகள் வழங்குவதும், இவர்கள் பால் கரிசனை காட்டுவதும் நமது பொறுப்பும்,கடமையும் ஆகும்.
சமூக அமைப்புகளில் பங்கேற்பு
இளைஞர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும், பங்கேற்கும் அமைப்புகளாக – குடும்பம் , அரசியல், கல்வி, ஊடகங்கள், சமூக அமைப்புகள் எனப் பலவற்றை அடுக்கிக் கொண்டேப் போகலாம். அதிலும் குறிப்பாக, இளைஞர்களுக்கு அடிப்படையில் வழிகாட்டியாக திகழ்வது குடும்பம், மற்றும் கல்வி அமைப்புக்களே !
- உள்ளாட்சி அமைப்புகளில்
- தன்னார்வக் குழுக்கள்
- இரத்த தான குழுக்கள்
- கண் தான குழுக்கள்
- ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அமைப்பு
- சமாதான குழுக்கள்
- தொழிலாளர் நல இயக்கம்
- இளைஞர் இயக்கம்
- இளம் மாணவர் இயக்கம்
எனப் பலவற்றை இளைஞர்கள் பங்கேற்க வாய்ப்புள்ள அமைப்புக்களாக சுட்டிக்காட்டலாம்.
பங்கேற்பு அமைப்புகளின் நோக்கங்கள் கீழ் கண்டவாறு அமையவேண்டும்.
- இலக்கு நோக்கிய பயணம்
- சீர்மிகு இலட்சியம்
- முற்போக்கு சிந்தனைகளை விதைத்தல்
- இளைஞர்களின் தனித்தன்மைகள் பேணப்படல்
- மனித மாண்புகள் மதிக்கப்படல்
- நல்ல தலைமைகள் உருவாக்கல்
- அரசியல் பங்கேற்புகள் அதிகரித்திடச் செய்தல்
எதற்காக அமைப்புகள்?
நமது நாட்டில் இளைஞர்களின் இன்றைய நிலை என்ன? நாட்டில் பங்கேற்புத் தளங்கள் எந்நிலையில் அவர்களுக்கு வழிகாட்டி நிற்கின்றது? கடமைக்காக, சடங்கிற்காக , சம்பிரதாயத்திற்காக, சுயநலப் போக்கிற்காக, பதவிக்காக, பதவி சுகத்திற்காக அமைப்புகள் இல்லை.
மாறாக திறமைகள் கட்டியெழுப்பப்பட, வாழ்வில் உணர்வுகள் தூண்டி எழுப்பப்பட, உரிமைகள் கிடைக்கப் பெற, சமூக நலப் பணிகள் அரங்கேற, பெண்கள் நிலை உயர, தொழிலாளர்கள் நிலை மேம்பட,கடமைகள் நிறைவேற்றப்பட, ஊழலும், இலஞ்சமும் ஒழிந்திட ………இவற்றிற்காகவே அமைப்புகள் மிகத் தேவை.
இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் :
- வேலையில்லா திண்டாட்டம்
- உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை
- புரிந்து கொள்ளாமைகள் ( குடும்பம் ,சமூகம்)
- அடிமைத் தனங்கள்
- கல்வி வியாபாரம்
- வேலை வியாபாரம்
- ஊழல் – இலஞ்சம்
- கட்டாய திணிப்புகள்
- ஊடக மயம்
- பயிற்சிகள் பற்றாக்குறை
- உளவியல் மாற்றங்கள்
- சமூக பகுப்பாய்வின்மை
- போட்டி நிறைந்த உலகு
- பாரபட்சம் காட்டும் சமூக அமைப்புக்கள்
- பிற்போக்கு சக்திகளின் ஊடுருவல்கள் …………..
என்ன செய்வது?
“மேலோட்டமான வாழ்வு என்பது
உயிரோட்டமற்ற உடம்பு”
“வேரோட்டமான வாழ்வு என்பது
ஒப்பற்ற கடல் பற்றி விடு ”
சவால்களை சாதனைகளாக மாற்றுவதும், அதற்காக உழைப்பதும், போராடுவதும், இவற்றை வென்றெடுப்பதும் இளைஞர்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும். இவற்றிற்கு நல்ல வழிகாட்டுதல்களை கொடுத்து ,இளைஞர் சக்தியை மீண்டெடுத்து ஒளிரச் செய்வது சமூக பங்கேற்பு அமைப்புகளின் பொறுப்பாகும்.
இன்றைய சமூகத்தில்
- பலவேளைகளில் இளைஞர்கள் ஒரு எதிர்க்கப்படும் அருங்குறியாக கருதப் படுகின்றனர்.
- சமூக சிந்தனைகளை உரமூட்டுவதற்கு பதிலாக, நடிகர்களுக்கும்,பல போலி அரசியல் தலைவர்களுக்கும் சுவர்ககளில் வெள்ளையடிக்க, விளம்பரப்படுத்த இளைஞர் சக்தி விரயமாக்கப் படுகின்றது.
- மாற்று சிந்தனைகளோ, மன மாற்று சிந்தனைகளோ இல்லாதவர்களாக உருவாக்குகின்றது இன்றைய கல்வி முறை.
- இங்ஙனம் வலம் வரும் இளைஞர்கள் மீண்டெழ நாம் என்ன செய்ய வேண்டும். சிந்திப்போம் .
நில் ! கவனி ! செல்.
- நமது நாட்டில் எந்தெந்த தளங்களில் இளைஞர்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றது?
- சமூக அமைப்புகளில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படுகின்றதா?
- இளைஞர்களின் நலனில் நாட்டின் தலைவர்கள் சிறப்பு கரிசனை செலுத்துகின்றனரா?
- தன்னை தயார் படுத்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றதா?
- இளைஞர் இயக்கங்களுக்கு வழிகாட்ட, முறையாக அனுபவம் மிக்க இயக்கத்தை சமூகப் பார்வையில் வழி நடத்த, தேவையின் அடிப்படையில் இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிட, வழிகாட்டிகள் உண்டா?
- இட ஒதுக்கீடு என்றப்பெயரில் அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இளைஞர்கள் பங்கேற்கின்ற நிலைகள்.
- குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுபவர்களாக கிணற்றுத் தவளைகளாக வீடுகளில் 4 சுவருக்குள் முடங்கும் பரிதாப நிலைகள் .
- இவர்கள் சமூகப் பணிகளில் கால் தடம் பதிப்பது எப்போது?
- இவர்களை உயர்கல்வி வேலைவாய்ப்பு நிலைகளில் உந்தித்தள்ளுவது யார்?
- அறிவிப்புகளும், ஒதுக்கீடுகளும் வெறும் பக்க காட்சிகளா?
- இளைஞர்கள் ஏதேனும் புதுமையாக செய்ய முன்வந்தால் கிண்டலும், கேலியுமா?
இந்நிலை மாறுவது எப்போது? மாற்றுவதெப்படி?
- இளைஞர்களின் தகுதியையும், திறமையையும் கருத்தில் கொண்டு, தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல்.
- இளைஞர்களின் நலனுக்காக தேவையின் அடிப்படையில் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கல்.
- இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கல்.
- இட ஒதுக்கீடு மட்டுமல்ல, திறமையின் அடிப்படையில் இளைஞர்களின் தலைமைத்துவம் வளர வழிகாணல்.
- அரசின் சார்பில் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்தல்.
- இரத்ததானம்/கண்தானம்/உடல்தானம்- உற்சாகப்படுத்துதல்.
- சமூக கரிசனை உள்ள இளைஞர்களாக உருவாக்கம்.
- உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்துதல்.
- சுய தொழில் குறித்த கருத்தமர்வுகள், பயிற்சிகள் வழங்கல்.
- இளைஞர்கள் சார்ந்த புள்ளிவிபரம் எடுத்தல்.
- படித்த இளைஞர்கள், அரசுவேலை, தனியார் துறை, இயக்கத்தில் இணைந்தவர்கள், ஒருங்கிணைக்கப் படாத இளைஞர்களின் நிலைகள் இவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு குறுகிய கால நீண்டகால திட்டங்கள் வகுத்தல்.
- தேசிய இளைஞர் தினம் ஜன-12 சிறப்பாக எழுச்சியோடு சிறப்பித்தல்.
- சமூகத்தில் இளைஞர்கள் சமூக கரிசனையோடு ஏதேனும் நற்பணிகள் புரிதல்
- செய்கின்ற நற்பணிகளை அங்கீகரித்தல், ஊக்கப்படுத்துதல்.
- இளைஞர்களிடம் புதுமையை வளர்க்க புதிய வியூகங்கள் கொண்டு வரல்.
- வேலை கொடுக்காமலே, வேலைக்கான முன் அனுபவ சான்றிதழ் கேட்கும் பரிதாப நிலைகள்- தவிர்த்தல்.
- ஓய்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்பதை முட்டுக்கட்டையாகிடச் செய்தல்.
இறுதியாக
முக்கியமான முடிவுகள் எடுக்கக் கூடிய தருணத்தில் இளைஞர்களுக்கு உரிய மதிப்பை வழங்குவோம்.
“பகுத்தறிவு இல்லா பண்பாடு” நம்மை வெறும் பார்வையாளர்களாகவே இருக்கச் செய்யும். பங்கேற்பாளர்களாக நாம் மாறும் போது மட்டுமே அகக் கண்கள் திறந்து பயனுறு நிலையை கண்டடையச் செய்வோம்.
இளைஞர்கள் நமக்கு என்னச் செய்தார்கள்? என்பதை, விட இளைஞர்களுக்கு நாம் என்னச் செய்தோம்? என்பதே முக்கியம். தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் இளையோரின் தனித்தன்மைகளை இனம் காண்போம்.
உரிய மதிப்பளிப்போம்! மாண்புடம் நடத்துவோம்! ஊடக, மற்றும் போதை அடிமைத் தனங்களில்
இருந்து விடுவிப்போம். இளையோர் ஒளிர, ஒளிச்சுடர் ஆகிட வாழ்வை அர்ப்பணிப்போம்.எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இளைஞர்களின் முன்னேற்றத்திற்க்காக பணி செய்வோம். புதிய சமூகம் படைப்போம்.
சமூக பங்கேற்ப்பு அமைப்புகள் புத்தெழுச்சியோடும் புதிய வேகத்தோடும், இலக்கு நோக்கி பயணத்தை தொடரட்டும். அது இளைஞர்களின் வாழ்வுக்கான உந்து சக்தியாக உருமாற்றம் பெறட்டும்.
நன்றே செய்வோம் – அது
இன்றே செய்வோம் – அதுவும்
இப்போதே செய்வோம்.
எமது முதல் பதிவை வாசிக்க:உன்னை நீ அறிவாய்
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.
ஒவ்வொரு இளைஞர்களும் இந்த பதிவை வாசித்து உணர வேண்டும்