அன்பு நட்புக்களே வணக்கம். நமது வாழ்க்கையில் முனேற்றங்களும், பண வரவுகளும் அனேக நேரங்களில் தடைபடுவதற்கு நமது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளும் மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. வார்த்தையின் சக்தி . இது எத்தனை பேருக்கு தெரியும்?
வார்த்தைக்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு
ஆம் நட்புக்களே ! மனிதரின் வாயிலிருந்து வெளிவரும் மிக சாதாரணமான வார்த்தைகள் சிலரை உச்சத்திற்கும், சிலரை நோயாளியாகவும், இன்னும் பலரையும் வறுமையின் கடைசி எல்லை வரைக்கும் கொண்டு விடுகின்றது. எனவே வார்த்தையை எப்படி பயன்படுத்தி வெற்றி பெறமுடியும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும் என்று சுவாமி. விவேகானந்தர் சொல்லி வைத்துள்ளார். நமது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளே காரணமாகி விடுகின்றது. ஆம்… வார்த்தைக்கும் நம் வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
ஒருமுறை சொன்னால் அது வார்த்தை. பலமுறை சொன்னால் மந்திரம். “யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்க பட்டு” என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது “ஒருவர் எதை காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்கு காரணம் ஆகிவிடும்.” ஆக மனிதகுலம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் வார்த்தைகள் காரணமாகி விடுகின்றன.
உற்சாகமான வார்த்தைகளை பேசுவோம்
“இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று” .அதாவது “இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களை கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களை பறித்து தின்பது போன்றது.” என வள்ளுவர் எழுதி வைத்திருக்கிறார்.
உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளை பேசுவதற்கு வாய்ப்புகள் இருந்தும் தொடர்ந்து கடும்சொற்களையே வீசி வருகின்றீர்களா? ரசத்தில வாசனைக்கு கூட எதையும் போடல. ஆனா, சூப்பரா இருக்குப்பா…. என்ற கணவனின் பாராட்டு வார்த்தைகள் மனைவிக்கு உற்சாகத்தை தந்து இன்னும் நன்றாக சமைப்பதற்கு ஊக்கத்தை தருகிறது என்பதை எத்தனை கணவர்கள் அறிவீர்கள்?
உன்னால் முடியும்டா …… என்ற ஆசிரியரின் ஊக்கமூட்டும் வார்த்தைதான் மாணவனை மலையளவு சாதிக்க வைக்கின்றது. இதை எத்தனை ஆசிரியர்கள் உணர்ந்திருக்கிறீர்கள்? மருந்தை விட, மருத்துவரின் நம்பிக்கையான வார்த்தைகள் தான் ஒரு நோயாளியை முழுமையாக குணப்படுத்துகின்றது என்பதை எத்தனை மருத்துவர்கள் அறிந்திருகின்றீர்கள்? இப்படி வாழ்வின் எல்லா நிலைகளிலும் வார்த்தைகள் மனித சமூகத்தை, வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை பலரும் அறியாமலே உள்ளனர்.
வார்த்தையின் சக்தையை உணர்த்தும் ஓர் கதை
வார்த்தையின் சக்தியினை தொடர்ந்துவரும் கதை ஓன்று விளக்குகின்றது. ஒருவர் வெகு நாள்களாக மிகக் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் அவரை பார்க்க சமயகுரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மிகவும் சோர்ந்து காணப்பட்டார் நோயுற்றுயிருந்தவர். இதை பார்த்த சமயகுரு நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என கூறி அவருக்காக மனமுருகி வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு சேர்ந்து கடவுளை வேண்டத் தொடங்கினர். பிறகு அந்த சமய குரு பாதிக்கப் பட்டவரை பார்த்து இறைவன் அருளால் நிச்சயமாக நீங்கள் நலம் அடைவீர்கள். இத்தனை பேரும் என்னோடு இணைந்து இறைவனிடம் உங்களுக்காக வேண்டி இருக்கிறார்கள். நிச்சயம் உங்களது உடல் நலம்பெறும் என கூறினார். அந்த கூட்டத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் இருந்தான்.
சமய குருவின் சமயோஜிதம்
சமய குரு சொன்னதைக் கேட்டதும், எல்லாம் அறிந்தவனைப் போல நக்கலாய் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் போய் அவனை குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா? என கூறி ஏளனமாக சிரித்தான். அதற்கு அந்த சமய குரு இந்த கூட்டத்திலே மிகப்பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீதான் எனச் சொன்னார். இதை கேட்டதும். அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. சீறி எழுந்த அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள்.
இல்லையேல் உங்களை அடித்து கொன்று விடுவேன் என்றபடி அடிக்கப் பாய்ந்தான். பதட்டமே இல்லாத அந்த சமய குரு, பொறுடா ! முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள்தானே! அவை உன்னை இப்படி மாற்றிவிட்டதே! எப்படி? இந்த சொற்களால் உன்னை எப்படி தூண்ட முடிந்ததோ, அதே போலத்தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை உருவாக்க முடியும் என்றார். அவன் வெட்கி தலை குனிந்தான். இப்போது புரிகிறதா? வார்த்தையின் சக்திகளை.!
எமது முந்தய பதிவை வாசிக்க: நீங்களும் ஆல்ஃபா தியானம் பழகலாம்
வார்த்தைகளே நம்மை ஆழ்கின்றன
வார்த்தைகளின் சக்திகளை மேற்கண்ட கதையின் வழியாக நன்றாக உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன் . ஆக நாம் பேசும் வார்த்தைகளே நம்முடைய வாழ்வாக மாறுகிறது. எனவே பேசுவதில் மிக கவனமாக இருக்கவேண்டும். உங்களது நெருங்கிய நண்பர் ஒருவர், உங்களது வளர்ச்சியிலும், தளர்ச்சியிலும் உங்களோடு இருக்கின்றவர் என நினைத்துக் கொள்ளுங்கள். எந்த காரியமாக இருந்தாலும் அவரை அறியாமல் நீங்கள் ஒன்றும் செய்வதில்லை.
அதுபோல் அவரும் உங்களை அறியாமல் ஒன்றும் செய்வதில்லை. அந்த அளவுக்கு உங்களுள் இருப்பது ஓர் ஆழமான நட்புறவு. திடீர் என ஒருநாள், அந்த நண்பர் ஒரு சின்ன விஷயத்தில் உங்களை புரிந்து கொள்ளாமல் கோபப்படுகிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், நீ ஒரு பச்சைத் துரோகி. உன்னை நம்பியதற்கு எனக்கு இதுவும் வேண்டும்.
இன்னும் வேண்டும். இன்று முதல் நீ என் முகத்தில் முழிக்கவே கூடாது. “நீ எல்லாம் இருப்பதற்குப் பதிலாக போய் ஒருமுழம் கயிறு வாங்கி தூங்கிச் சாகுடா” என கோபத்தின் உச்சக்கட்டத்தில் உங்களை திட்டி தீர்க்கிறார் என வைத்துக் கொள்வோம்.
காயப்படுத்தும் வார்த்தைகள்
இப்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும்? அந்த காட்டமான வார்த்தைகள் உங்கள் மனதை கடுமையாய் காயப்படுத்தி, விரக்தியின் உச்சகட்டத்திற்கே கொண்டு போய்விடாதா? அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய ரணங்கள் உங்களைவிட்டு எளிதில் மாறிவிடுமா? பார்த்தீர்களா, வார்த்தைகள் ஏற்படுத்திய காயத்தை! இதற்கு என்ன தீர்வு?
ஒரு முள்ளை இன்னொரு முள் போன்ற பொருளால் தான் எடுக்க முடியும் என்பதை போல, இந்த வார்த்தையால் ஏற்பட்ட காயத்தை அதே போன்ற வார்த்தைகளால் தான் மாற்ற முடியும். இந்த சூழ்நிலையில் உங்களை காயப்படுத்திய நண்பர் தான் செய்த தவறை உணர்ந்துகொண்டு உங்களை சந்திக்கிறார். அவர் நண்பா, என்னை மன்னித்துவிடு.
நான் உன்னை தவறாக புரிந்துகொண்டேன். ஆனால், இவானா இப்படி செய்தான்! என்ற எண்ணம் என்னை ஆட்டிப்படைக்க, கோபம் எனது தலைக்கு ஏறிவிட்டது. அவசரப் பட்டுவிட்டேன்.நான் கொஞ்சம் பொறுமையாக இருந்து உன்னிடம் இந்த விஷயத்தை பேசி தீர்த்திருக்கலாம். நான் பேசிய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்.
என்னை மன்னித்துவிடு. என்று உங்களிடம் சரணாகதி ஆகின்றார். இப்போது உங்களது உணர்வு எப்படி இருக்கிறது? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், ஒரே நபர். ஆனால் பேசிய வார்த்தைகள் இரண்டு விதம். ஒரு விதம் உள்ளத்தை உடைத்துவிட்டது. இனொரு விதம் உடைந்த உள்ளத்தை ஒட்டி விட்டது.
ஆறுதல் தரும் வார்த்தைகள்
உங்களுக்கு தெரிந்த ஒரு நபர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் மருத்துவமனையில் இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் சென்று, நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களது நோய் நிச்சயம் குணமாகும், உங்களை விட மிகவும் கடுமையான நோயியினால் பதித்திருந்த எனக்கு தெரிந்த நபர் ஒருவர், இந்த மருத்துவமனையில், இதே மருத்துவரின் சிகிட்சையில் இன்று நலமாக உள்ளார்.
இதுபோன்ற வார்த்தைகளை சொல்கிறீர்கள். இந்த வார்த்தைகளை அவர் நம்புவரா? ஆம். நம்பிக்கை தரும் இதுபோன்ற வார்த்தைகள் அவரது ஆழ்மனதில் விழுந்து ஓரளவு பலன்தர அதிக வாய்ப்புகள் உண்டு. அதே போல் ஒரு மருத்துவர் அவரை சந்தித்து, உங்கள் உடல்நலம் தேறி வருகிறது. விரைவில் நீங்கள் நலம் அடைவீர்கள் என சொன்னால் அதை அந்த நோயாளி உடனே நம்பி விடுவார். இங்கு மருந்து மாத்திரைகளை விட, மருத்துவரின் வார்த்தைகள் தான் நோயாளியினை நம்பிக்கை கொள்ள வைக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
வார்த்தைகளின் தன்மை
சில வளர்ந்த நாடுகளில் விசித்திரமான பழக்கங்கள் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நோயாளிகளை பார்க்கச் சென்றால், “நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்” “நீங்கள் குணமடைய நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” போன்ற ஆறுதலும், நம்பிகையும் தரும் வார்த்தைகளை கூறுகின்றார்கள்.
அப்போது அந்த நோயாளியின் மனதில் இந்த வார்த்தைகள் சென்று நல்ல மாற்றத்தை உருவாக்குகின்றது. அதே நேரம் நமது இந்திய திரு நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் இதுபோன்ற நோயாளிகளை பார்க்கச் செல்லும்போது அனேகர் நோயாளிகளின் அருகில் இருந்து என்னுடைய வீட்டின் அருகில் ஒரு நபர் இதே நோயினால் தான் பாதிக்கப்பட்டு, இறுதியில் பெரும் துன்பப்பட்டு இறந்தார்.
கடந்த வாரம்தான் எனது சித்தப்பாவும் இதே நோயினால் பாதிக்கப்பட்டு, எந்த மருந்தும் பலன் தராமல் இறந்தார். இது போன்ற, மனதை தளர வைக்கும் வார்த்தைகளை கேட்க்கும் நோயாளிக்கு எப்படி இருக்கும்? எப்படியாவது இந்த நோயிலிருந்து விடுபடமாட்டேனா? என ஏங்கிக் தவித்துக் கொண்டிருக்கும் அவருக்கு கொஞ்சம்கூட பதட்டம் அதிகரித்து நோயின் தன்மைகள் அதிரிக்கும் அல்லவா? எனவே வார்த்தையின் மகத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள். எதிர்மறையான வார்த்தைகள் மிகவும் அபாயகரமானவை.
உங்களை நீங்கள் ஆய்வு செய்ய தயாரா?
எனவே உங்களை நீங்கள் இப்போதே ஆய்வு செய்யுங்கள். எனது வார்த்தைகள் எத்தனைபேரை காயப்படுத்தி இருக்கிறது? எத்தனை நபர்களுடைய வாழ்கையை எனது வார்த்தைகள் சூறையாடியிருக்கின்றன? அல்லது எனது வார்த்தை எத்தனைபேரை வாழ வைத்திருக்கிறது? சிந்தித்து செயல்படுங்கள். இது மட்டும் அல்ல, நமக்கு நாமே பேசிக்கொள்ளும் வார்த்தைகளிலும் மிக கவனமாக இருக்கவேண்டும். நமக்குள்ளே நாம் சதாகாலமும் உணர்வாலும், வாயாலும் பேசிக்கொண்டே இருக்கின்றோம்.
அந்த வார்த்தைகள் பெரும்பாலும் எதிர்மறையாய் இருக்கின்றன. உதாரணமாக, பொருளாதார சுமை, நோய்கள், உறவுச்சிக்கல்கள் போன்ற பிரச்சனை உள்ள நபர்கள், எனக்கு கடன் அதிகரிக்கிறது, எனக்கு கடன்தீர்க்க வழி ஒன்றும் தென்படவில்லை, ஒவ்வொரு நாளும் எனது கடன்சுமை அதிகரித்துக் கொண்டே போகின்றது.
எனக்கும் எனது குடும்பத்துக்கும் ஏனோ நோய்கள் அதிகமாக வருகின்றது. கடவுள் எங்கள் குடும்பத்தை மட்டும் ஏன் இப்படி சோதிக்கின்றார்? எப்ப பார்த்தாலும் எதிர் வீட்டுக்காரன் சண்டைக்கு வருகிறான், இது போன்ற வார்த்தைகளை அடிக்கடி நாம் நமக்குள்ளும் உச்சரிக்கின்றோம். பிறரிடமும் பகிர்ந்து கொள்கிறோம்.
நேர்மறையான வார்த்தைகள்
இவ்வாறு பேசப்பேச பிரச்சனைகள் குறையவே குறையாது. மாறாக நாம் உச்சரித்த வார்த்தைகளை ஆழ்மனமானது நமக்கு இது வேண்டும் என தவறாக புரிந்துகொண்டு மேற்கண்ட பிரச்சனைகளை அதிகப்படுத்தி கொடுத்துவிடும். எனவே என்ன சிரமங்கள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளை கொஞ்சம் மாற்றி வைத்துவிட்டு அதற்கு பதிலாக நான் நன்றாக இருக்கிறேன். எனது குடும்பம் ஆரோக்கியமாக இருக்கிறது.
தாராள பண வரவு எனது தேவையை பூர்த்தி செய்கிறது. நான் எல்லோரிடமும் உறவை பேணுகிறேன் போன்ற நேர்மறையான வார்த்தைகளை சொல்லி பழகுங்கள். இவ்வாறு நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தினால்தான் வெற்றி என்ற இமயத்தை தொட முடியும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், வார்த்தைகளே நம்மை ஆழ்கின்றன. எனவே நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே தேர்வுசெய்து பயன்படுத்துவோம். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
எமது அடுத்த பதிவை படிக்க: அபார வெற்றிபெற இலக்கை உருவாக்குங்கள்
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.