வெற்றிக்குத் தேவை இலட்சியமே
இன்றைய சமூகத்தில் சாதிக்க விரும்பும் நபர்களுக்கு அடிப்படை தேவை இலட்சங்கள் அல்ல. வெற்றிக்குத் தேவை இலட்சியமே. வெற்றி பெற பணம்தான் முக்கியம் என்றால் இந்த சமூகம் இந்த அளவு வளர்ந்திருக்காது.
வெற்றி என்றால் என்ன?
வெற்றி என்பது ஒரு இனிமையான அனுபவம். ஒருவருக்கு முதல் வெற்றி என்பது ஆரோக்கியமான உடல் நிலையும், மகிழ்ச்சியான மனநிலையும் தான். இவை மட்டும் ஒருவருக்கு சரியாக அமைந்து விட்டால் எல்லா வெற்றி அனுபவமும் நம்மை தேடி வரும். வெற்றி அனுபவம் என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். காரணம் ஒவ்வொரு நபரும் வெற்றி என கருதுவது அவரவர் எண்ணங்களை பொறுத்து மாறுபடுகின்றது.
சிலருக்கு அன்றைக்கு செலவுக்காக பணம் கிடைத்தால் வெற்றி என எண்ணுகின்றார்கள். சிறிய அளவில் வணிகம் செய்யும் நபர்கள் தனது பொருட்கள் விற்று தீர்ந்தாலே வெற்றி என நினைக்கிறார்கள். சிலர் நேற்றை விட இன்று அதிக லாபம் கிடைத்தால் வெற்றி என நினைக்கின்றார்கள். ஒரு மாணவர் நினைக்கின்றார் தான் எல்லா பாடத்திலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றாலே வெற்றி என்று.
அதே நேரம் எல்லா பாடத்திலும் 100% மதிப்பெண்கள் பெற்றாலே வெற்றி என எண்ணுகின்றார் இன்னொரு மாணவர். ஏதாவது சிறு தொழில் செய்யும் நபர்களை கேட்டால் அவர்கள் சொல்வது, நான் இந்த வருடம் இத்தனை இலட்சத்திற்கு அல்லது இத்தனை கோடிக்கு வணிகம் செய்தால் அவர்களை பொறுத்தவரைக்கும் அது வெற்றியாக அமைந்து விடுகின்றது.
பெரிய தொழிலதிபர்களை பொறுத்தவரையில் சில கோடிகளை ஒரு வருடத்தில் லாபம் கிடைத்தால் அதுதான் வெற்றி. ஆக நபரை பொறுத்து வெற்றியின் அளவுகோல் மாறுபடுகின்றது என்பது உண்மை. சரி, எது எப்படி இருந்தாலும் வெற்றி என்பது தான் அடைய வேண்டும் என்று நினைப்பதை அடைவது ஆகும்.
நினைத்தபடி வெற்றி பெற தெளிந்த மனநிலை இருக்க வேண்டும். அதோடு இதை அடைந்தே தீருவேன் என்ற உறுதியான எண்ணம் தேவை. ஒரு விதத்தில் வெற்றி பெறுவது எளிது. அதை தக்க வைப்பது என்பது தான் மிகவும் சிரமம். இந்த பதிவில் வெற்றி பெறுவதற்கான பத்து ஆலோசனைகள் தரப்பட்டுள்ளது.
ஏன் வெற்றி தள்ளிப் போகின்றது?
வெற்றி என்பது ஒரு சிலருக்கு கை வந்த கலையாகவும் இன்னும் பலருக்கு அது எட்டாக் கனியாகவும் தகிழ்கின்றது. காரணம் என்ன என்று சிந்தித்தால் பல உண்டு. வெற்றி என்பது ஒரு மனநிலைதான். வாழ்வில் அல்லது தொழிலில் தோல்வியுற்ற நபர்களை கேட்டுப்பார்த்தால் இது புரியும். உதாரணமாக தொடர்ந்து தோல்வியுற்ற ஒரு நபரை சந்தித்து கேட்டுப் பாருங்கள் அவரது அனுபவத்தை.
அவர் எப்போதும் தோல்வி உணர்வோடுதான் வாழ்ந்திருப்பார். உதாரணமாக, எதைச் செய்தாலும் இது நடக்குமா? ஒருவேளை நடக்காவிட்டால் என்ன செய்வது? முதலீடு செய்த பணம் இழப்பு ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது? எப்படி வாழ்வது? எப்படி கடனை திருப்பி கொடுப்பது? அவமானங்கள் மத்தியில் எப்படி வாழ்வது? போன்ற எதிர்மறையான எண்ணங்கள் தான் இவர்கள் மனதில் உலவிக்கொண்டு இருக்கும்.
இந்த எண்ணங்கள் மனதை நிரப்பியுள்ளதால் தெளிவாக இவர்களால் சிந்திக்க இயலாது. இதனால் இவர்களது எண்ணப்படியே தோல்வியை அடைகின்றார்கள். ஆனால் வெற்றியாளர்களை கேட்டுப் பாருங்கள். அவர்களது உள்ளம் பூந்தோட்டத்தைப் போல நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன்னரே அந்த தொழில் கிடைக்கும் வெற்றியை, அந்த வெற்றியின் பயனாக கிடைக்கும் பலன்களை நினைத்து அவர்கள் மனது ஆனந்த ராகம் பாடும்.
செல்வச் செழிப்பில் அவர்களது மனம் மகிழ்ந்திருக்கும். ஒரு துளிகூட எதிர்மறை எண்ணம் இருக்காது. இதனால் அவர்கள் விரும்பியவாறே வெற்றிகளை அவர்கள் மனது கொண்டு சேர்க்கும். எனவே உங்கள் வெற்றி தள்ளி போகின்றது என்றால் அதற்கு உங்கள் மனநிலைதான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே உங்கள் மனதை மகிழ்ச்சி நிறைந்ததாய் வைத்திருங்கள். வெற்றி உங்கள் வசமாகும்.
எமது முந்தய பதிவை வாசிக்க: மாமியார் மருமகள் உறவு சிறக்க
வெற்றியாளர்களின் ரகசியங்கள்
உலகில் மாபெரும் வெற்றிகளை சந்தித்தவர்கள் எல்லாரும் சில விஷயங்களை கடைபிடித்திருக்கின்றார்கள். அவற்றில் மிக முக்கியமான பத்து ரகசியங்களை இங்கே பார்க்கலாம். ஒரு இலக்கை உருவாக்கி அதை நோக்கி ஓடி வெற்றி பெற முயற்சிக்கும் நபர் நீங்கள் என்றாலும் அல்லது இனிதான் இலக்கை உருவாக்கி ஓடவேண்டும் என நீங்கள் நினைத்தாலும் இந்த பத்து முறைகளையும் நீங்களும் கடைபிடியுங்கள். உங்களது வெற்றி மிக அருகில்.
அதிகாலையில் துயில் எழுப்புங்கள்
உலகெங்கும் வெற்றி பெற்ற நபர்களில் 90% திற்கும் அதிகமான நபர்களை பார்த்தோமென்றால் அவர்கள் அனைவரும் அதிகாலை எழும்பும் பழக்கம் உடையவர்களே. அதற்காக அதிகாலை எழும்பும் பழக்கம் உள்ள அனைவரும் வெற்றியாளர்களும் அல்ல. தாமதித்து எழும்பிய அனைவரும் தோல்வியாளர்களும் அல்ல. எல்லாவற்றிலும் விதிவிலக்கு என்று ஓன்று உண்டு.
அதிகாலை எழும்பும் நபர்கள் ஏன் வெற்றியாளர்களாக தகிழ்கின்றனர் என நீங்கள் கேட்கலாம். ஆம் அதிகாலை நேரம் என்பது மிகவும் அமைதியான நேரம். இந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் இருந்து நல்ல எண்ண அலைகள் இந்த பூமியை நிரப்பி இருக்கும் நேரம். இந்த நேரத்தில் ஒரு நபர் எழுந்து இறை வேண்டலுடன் அவரது கடமையை குறித்து நேர்மறையாக சிந்திப்பது, செயலாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
பொறுமை அதிகம் தேவை
வெற்றி பொறுமை உள்ளவரிடம் மட்டுமே வரும். எவ்வாறு ஒரு கொக்கு மீன் வரும் வரை பொறுமை காத்து தனக்கு வேண்டிய மீன் வந்தவுடன் அதை கொத்தி எடுத்து செல்கின்றதோ, அதுபோல வெற்றி பெற பொறுமை மிக அவசியம். உதாரணமாக ஒரு விதையை விதைத்த மறுநாளோ அல்லது ஒரு வாரத்திலோ அது முளைத்து வளர்ந்து பலன் தரும் என எதிர்பார்ப்பது பெரிய முட்டாள்தனம் அல்லவா?
அது போல ஒரு வேலைக்கு சென்றாலும் முப்பது நாள் பொறுமை காத்தால் மட்டும் தானே ஊதியம் கிடைக்கும். இல்லை நாளை ஒரு மாத ஊதியம் கொடுத்தால் மட்டுமே நான் வேலைக்கு வருவேன் எனச் சொன்னால் யார் உங்களுக்கு வேலை கொடுப்பார்? அது போல தொழில் செய்தாலும் வெற்றிக்கு பொறுமை மிக அவசியம். கடமையினை உண்மையாக சரியாக செயுங்கள். பலன் தானே வரும்.
பிறரை மனம்திறந்து பாராட்டுங்கள்.
பாராட்டுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். உங்களுக்கு வெற்றி வேண்டுமெனில் உங்களுக்கு தெரிந்த எந்த நபர்கள் ஆனாலும், அவர்கள் சிறு வெற்றி பெற்றாலும் அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். பாராட்டுவதில் கஞ்சத்தனம் வேண்டாம். அது போல் மற்றவரின் வெற்றியை கண்டு பொறாமை படவும் வேண்டாம்.
காரணம் எதை இந்த பிரபஞ்சத்துக்கு நாம் மனதார கொடுக்கின்றோமோ அது பல மடங்காக திருப்பி வரும் என்பது இயற்கையின் நியதி. நீங்கள் பிறரை வாழ்த்தினால் பதிலுக்கு அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லி, உங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துவார்கள். அந்த வாழ்தானது பிரபஞ்சத்தில் எதிரொலித்து உங்களிடம் பலமடங்காக ஈர்த்து வரும் வெற்றியை.
தோல்விகளுக்கு பொறுப்பெடுங்கள்
வெற்றி வரும்போது அனைவரும் அதை வாரி அணைத்துக் கொண்டு வரவேற்கின்றனர். அதே நேரம் அந்த வெற்றிக்கு பின்னால் துணை நின்றவர்களை மறந்து இந்த வெற்றி என்னால் தான் வந்தது என அதற்கு உரிமை கொண்டாடுகின்றனர். ஆனால் தோல்வி வந்தால் பின்னால் நின்று உழைத்தவர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.
வெற்றி வந்தால் நான். தோல்வி வந்தால் அவர்கள். இந்த மனநிலை மாறவேண்டும். தோல்வி வந்தால் அதற்கு நீங்கள் துணிந்து பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் எதனால் தோல்வி வந்தது என ஆராயவேண்டியே மனது வரும். எங்கே தவறு நடந்தது என அடையாளம் கண்டு அதை அடுத்த முறை வெற்றியாக மாற்ற முடியும்.
தெளிவான இலட்சியம் வேண்டும்
வெற்றியாளர்கள் தெளிவான இலக்கை வைத்திருப்பார்கள். எதை எப்போது செய்யவேண்டும், எந்த கால அளவுக்குள் இந்த வேலைகளை முடிக்கவேண்டும், அந்த பொருளை யாரிடம் விற்க வேண்டும் போன்ற அடிப்படை தவல்களை வைத்திருப்பர்.
இந்த வருடத்தில் உற்பத்தி எந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும், எத்தனை கோடிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் போன்ற இலக்கில் தெளிவாய் இருப்பர். நீங்களும் தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்
மாற்றம் என்ற சொல் ஓன்று மட்டுமே மாறாதது. தொழில் துறைகளில் அல்லது வாழ்க்கை முறைகளில் மாற்றம் என்பது நிச்சயம். உதாரணமாக பழைய காலங்களில் மிதிவண்டிகளை, காளை வண்டிகளை, குதிரை வண்டிகளை தொழிதுறைகளுக்கு பயன்படுத்தினர்.
காலம் மாறியபோது எரிபொருட்களால் இயங்கக் கூடிய வாகனம் வந்தபோது எல்லோரும் அதற்கு மாறினர். இல்லை நான் இன்றும் பழைய முறையினை தான் கையாள்வேன் என ஒருவர் பிடிவாதமாக இருந்தால் அவரால் எப்படி தொழில்துறையில் வெற்றிபெற இயலும்? எனவே மாற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி உணர்வுடன் இருங்கள்
வெற்றி பெற நன்றி உணர்வு என்பது மிகவும் முக்கியம். வெற்றியாளர்கள் அனைவரும் நன்றி உணர்வு மிகுந்தவர்கள். உங்களுக்கு யாராவது சிறு உதவி செய்தலும் அவர்களுக்கு மனதால் நன்றி சொல்லுங்கள். உங்களுக்கு வெற்றி கிடைத்தால் அதற்கும் நன்றி என்ற வார்த்தையினை உச்சரியுங்கள். நீங்கள் எதிர்பார்க்காத ஒரு தோல்வி உங்களுக்கு வந்தால் அதற்கும் பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்லுங்கள்.
எதற்கு தெரியுமா? தலைக்கு வந்தது தலை பாகோடு போனதே! அந்த தோல்வியிலும் நீங்கள் பாதுகாக்கப் பட்டதற்கு பிரபஞ்சத்துக்கு மனதார நன்றி சொல்லுங்கள். நன்றி,நன்றி,நன்றி என்று தினமும் பலமுறை சொல்லிப் பாருங்கள் வெற்றி தேவதை உங்களை வரவேற்பதை நீங்கள் காண்பீர்கள்.
மன்னிப்பை மனதார வழங்குங்கள்
தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது என்பது இறைவனின் இயல்பு. ஆக மனதார மன்னிப்பவர்கள் இறைவனுக்கு சமம். வெற்றிக்கும் மனிப்புக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம்.தொடர்பு உண்டு. உங்கள் பணியாளரில் ஒருவர் பெரிய தவறை செய்தார் என வைத்துக் கொள்வோம். இதனால் உங்களுக்கு கொஞ்சம் பண இழப்பு வந்துவிட்டது.
நீங்கள் அவரது தவறை சுட்டிக்காட்டி அவரை தண்டித்தீர்கள் என்றால் அவரும் அவரை சார்ந்தவர்களும் மறுபடி சிறப்பாக செய்வார்கள் என்றா எண்ணுகின்றீர்கள்? எப்படி அடுத்தமுறை உங்களை தோற்கடிப்பது என திட்டம் தீட்டுவார்கள் அல்லவா? அதே நேரம் தவறு செய்தால் வரும் இழப்பைஎடுத்து கூறி இனி கவனமாக செயுங்கள் என கூறி மன்னித்துப் பாருங்கள். உங்கள் வெற்றிக்காக மறுபடியும் உழைப்பார்கள். ஆகவே மன்னியுங்கள்.
கற்பதை நிறுத்தாதீர்கள்
கல்வி என்பது ஏதோ பள்ளி, கல்லூரிகளில் படிப்பது மட்டும் அல்ல. வாழ்கை முழுவதும் அனுபவ கல்வியினை கற்றுக்கொண்டே இருங்கள். புதிதாய் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை கற்றுக் கொள்ளுங்கள்.
உதாரணமாக உங்களுக்கு தற்போதுள்ள டிஜிட்டல் முறை பணப்பரிமாற்றம் உங்களுக்கு தெரியாது என்றால் அதை கற்றுக்கொள்ள முன் வாருங்கள். அப்போது தான் உங்கள் தொழிலும் வளரும். வெற்றித் திருமகளும் உங்களை வரவேற்பாள்.
கருத்துக்களை விவாதியுங்கள்
மனிதர்களை அல்ல அவர்கள் பேசிய கருத்துக்களை மட்டுமே விவாதியுங்கள். ஒரு கருத்தை ஒரு மனிதர் பேசிவிட்டார் என்பதற்காக அவரது தனிப்பட்ட வாழ்வை கொச்சைப்படுத்தி விவாதிக்காதீர்கள். அவர் சொன்ன கருத்துக்களை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்துங்கள்.
மாறாக அந்த மனிதரை குறித்து விவாதித்தால் தேவையற்ற பகைதான் உருவாகும். அவரது கருத்தை விவாதித்தால் உங்கள் வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்கள் கிடைக்கலாம்.
நாமும் வெற்றி பெறுவோம்.
நம்மிடம் காணப்படும் தேவையற்ற களைகளை பிடுங்கி எறிந்துவிட்டு வெற்றியாளர்கள் செய்த செயல்களை நாமும் கடைபிடிப்போம். இலட்சம் இலட்சமாய் பணம் இருந்தால் மட்டும் வெற்றி வந்துவிடாது. இலட்சியம் ஓன்று மட்டும் உறுதியாய் இருந்துவிட்டால் வெற்றியும் பணமும் தானாய் வரும்.
எமது முதல் பதிவை வாசிக்க: இந்தியாவின் விடிவெள்ளி இளைஞர்களே