நீங்கள் மனத்தைப்பற்றி முதன்முதலாய் தெரிந்துகொள்ளும் நபராய் இருந்தால், மனதும் அதன் ஒப்பற்ற சக்தியும் என்ற பதிவின் வழியாக மனமா? அப்படி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? போன்ற பல கேள்விகள் உங்களுள் எழும். இந்த பிரபஞ்சம் அல்லது இறை சக்தி உங்களை படைத்து இந்த உலகத்தில் வாழ விடும்போதே, நீங்கள் நினைத்ததை அடைந்து ஆனந்தமாய் வாழ உங்களுள் ஒரு மிகப்பெரிய பேராற்றலை மறைத்துவைத்தே அனுப்பி உள்ளது. அந்த மாபெரும் சக்தியின் பெயர் தான் மனம்.
மனதின் மூன்று படிநிலைகள்
உலக மக்கள்தொகையில் ஒரு சிறு பகுதியினரே இப்படிப்பட்ட மகத்தான சக்திவாய்ந்த மனதின் அருமை பெருமைகளை அறிந்து, புரிந்து, உணர்ந்து மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றனர். வெறுமையாய் இருந்த உலகத்தில் இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும், இந்த மனதின் ஒப்பற்ற சக்தியினை பயன்படுத்தியவர்களின் வழியாய் கிடைத்த பலன்களே. நாம் மனப்பூர்வமாக என்ன விரும்பினாலும் அது நிச்சயம் நடக்கும்.
ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள், தங்களது மனதில், கற்பனை சக்தியால் வறுமையான சிந்தனைகளுக்கு உயிர்கொடுத்து தோல்விகளை மனப்பூர்வமாக விரும்பி வரவேற்கின்றர்கள். அதனால் தான் இப்படிப்பட்ட அனேக மனிதிர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இன்றி தவிக்கின்றனர்.
ஆகவே மனதிற்கு உரிய பயிற்சி கொடுத்து, நேர்மறையாக சிந்தித்து, உயர்வை குறித்து சிந்திக்க தொடங்கினால் எல்லா மனிதர்களும் வளமாய் வாழ்வது திண்ணம். அதற்கு மனதின் படிநிலைகளை, அதன் செய்ல்பாடுகளை தெளிவாக அறிந்திருத்தல் அவசியம்.
இந்த மனதை உளவியல் நிபுணர்கள் மேல்மனம் (Peripharal Conscious Mind), நடுமனம், (Sub- Conscious Mind) ஆழ்மனம் (Super – Conscious Mind) என 3 வகையாக பிரித்துள்ளனர். இதில் ஆழ் மனமே வெற்றி என்ற இமயத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் கதா நாகயன். இருந்தாலும் நம்மை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமெனில் மனதின் மூன்று நிலைகளையும் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.
மேல்மனம் (Peripharal Conscious Mind)
இது அறிவு சார்ந்த மனம். ஐம்புலன்களின் தொடர்பில் இருக்கும் மனம். கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், ஒலிகள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொடுதல் வழியாக உணர்ந்து கொண்ட புரிதல்கள் போன்றவற்றை பதிவு செய்கின்ற மனம். பொதுவாக மனதை குரங்கிற்கு ஒப்பிடுவார்கள்.
அந்த சொல் இந்த மேல்மனதுக்கு 100% பொருந்தும். இது புற உலகுடன் தொடர்புடைது. இந்த மனதின் குணம், ஒன்றிலும் நிலையாக இருக்காது. இன்று நல்லது என தோன்றுவது நாளை நல்லது இல்லை என தோன்றும். நமது கையில் இருப்பதை விட அடுத்தவன் கையில் இருப்பது நல்லது என தோன்றும்.
உதாரணமாக, நாம் ஒரு வேலை அல்லது தொழில் செய்து சம்பாதித்து ஒரு வாழ்கை வாழ்ந்துகொண்டு இருபோம். நமது பக்கத்து வீட்டில் உள்ள நபர் வேறு ஒரு வேலை அல்லது தொழில் செய்து வாழ்கை நடத்திக் கொண்டிருப்பார்.
இப்போது நாம் வாழ்த்து கொண்டுடிருக்கும் தொடர் வாழ்க்கையில் ஒரு சலிப்பு அல்லது வணிகத்தில் பின்னடைவு ஆரம்பிக்கும்போது “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” என்ற பழமொழிக்கு ஏற்ப பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்த நபரின் வாழ்கை முறை இதைவிட சிறப்பாக இருப்பதாக நமக்கு தோன்றும். ஒரு சிலர் இவ்வாறு உணர்வுகள் மாறுகையில் அந்த நபர் செய்யும் வேலையை இவர் செய்ய ஆரம்பிப்பார்.
உதாரணமாக, ஒருவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு பல பெரிய, சிறிய கடைகள் போட்டிக்கு வருகின்றன. இதனால் வணிகம் சற்று பின்னடைவை சந்திக்கிறது. இவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு தேநீர் கடை நடத்தி வருகிறார். அவர் அதில் நன்றாக சம்பாதிக்கிறார். எனவே நாமும் ஒரு தேநீர் கடை ஆரம்பிபோம் என தனது முடிவை மாற்றுகிறார். இறுதியில், இருந்ததை விட மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இது தான் மேல் மனதின் வேலை. இதனால்தான் மேல் மனதை குரங்கிற்கு ஒப்பிடுகின்றார்கள். ஒருவேளை இவர் தனது ஆழ்மனதை தெளிவாக பயன்படுத்த தெரிந்தவர் என்றால், தனது சொந்த தொழிலில் வந்த போட்டியை பழைய அனுபவத்தை முதலீடாக வைத்து, எப்படியாவது சம்மாளித்து அந்த துறையிலேய முதன்மை அடைந்திருப்பார்.
சிக்மண்ட் பிராய்டு என்ற உளவியல் நிபுணர் மனதினை பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறார். மன இயக்க நிலைகளை கடலில் மிதக்கும் பனிக்குன்றிக்கு ஒப்பிட்டால் புறமமனம் (மேல்மனம்) கண்ணில் தெரியும் சிறு பகுதி. இடைமனம் (நடுமனம்) என்பது கடல் நீருக்கு சற்று கீழ் தெரியும் மங்கலான பகுதி. உள்மனம் (ஆழ்மனம்) என்பது கண்ணுக்கு புலப்படாமல் கடல் நீரில் அடியில் மறைந்திருக்கும் மிகப்பெரிய பகுதி.
நாம் வெற்றி என்ற இமயத்தை இதுவரை தொடாமல் இருப்பதற்கு கரணம், நமது விருப்பப்படி ஆழ்மனதை இயக்க தெரியாமல், மேல் மனதின் விருப்பப்படி நடப்பதே. அதாவது நாம் தான் மனதை ஆழ வேண்டும். நமது மனதுக்கு நாம்தான் முதலாளி. நமது மனம் நமது கட்டளைகளை நிறைவேற்ற காத்துக் கிடக்கிறது. மனம் நம்மை ஒருபோதும் ஆழவிடக்கூடாது. எவ்வாறு நமது ஆழ்மனதை சரியாக பயன்படுத்தி வெற்றியினை குவிப்பது என்பதை வரும் பகுதிகளில் காண்போம்.
எமது முந்தய பதிவை வாசிக்க:வெற்றி என்ற இமயத்தைத் தொட வேண்டுமா ?
நடுமனம், (Sub- Conscious Mind)
இது குழந்தை பருவத்திலேயே உருவாகிறது. இந்த மனம் மேல்மனதிற்கும், ஆழ்மனதிற்கும் தொடர்பாளராக செயல்படுகிறது. தேவையின் அடிப்படியில் மேல்மனது கேட்க்கும் தகவல்களை தனது கோப்பிலிருந்து எடுத்து கொடுப்பதும், நம்மை சுற்றி நடக்கும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளை ஆழ்மனதில் கொண்டு பதிப்பதும் இதன் முக்கிய பணி.
நாம் கருவில் உருவான நாள் முதல், இந்த நிமிடம்வரை நம்மை சுற்றி நடந்த அனைத்தும் ஆழ்மனதில் பதிவுகளாகின்றது. எப்போதோ நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி திடீரென நமது நினைவுக்கு வருகின்றது என்றால், அதுதான் நடு மனதின் வேலை. சாதாரணமாக வாழ்வில் நிகழக்கூடிய, நமது ஐம்புலன்களால் அனுபவிக்க கூடிய செயல்கள் அனைத்தும் நமது நடுமனதில் பதிவாகி இருக்கின்றது.
உதாரணமாக, நமது பள்ளி அல்லது உயர் படிப்புகளை தொடர்ந்த காலத்தில் அனேக நட்புகள் நம்மை சூழ்ந்திருந்தது நமக்கு நிச்சயம் நினைவில் இருக்கும். இதில் நம்மிடம் நெருங்கிப் பழகிய ஒரு சில நண்பர்களின் பெயர் மற்றும் விபரங்கள் ஞாபகம் இருக்கலாம். அல்லது அவர்கள் தற்போது நமது தொடர்பில் இருக்கலாம். பாலர் பள்ளி முதல் நாம் கடந்து வந்த நட்புகள் எத்தனையோ உண்டு. அதில் பெரும்பான்மையான நண்பர்களின் பெயர்கள் இப்போது நமது மேல்மன நினைவுப் பட்டியலில் இல்லை.
நடுமனதிற்கு ஓர் சிறந்த உதாரணம், நாம் செல்லும் வழியிலோ அல்லது எதாவது நிகழ்ச்சியிலோ, தெரிந்தது போன்ற ஒரு முக அமைப்பை கொண்ட நபரை நாம் பார்த்திருப்போம். உடனடியாக அந்த நபர் நமது ஞாபகத்துக்கு வரமாட்டார். இவரை நாம் எங்கோ பார்த்திருகிறோமே என நாம் குழம்பிக் கொண்டிருக்கும்போது திடீரென நமது நினைவுக்கு வரும்,
ஓ… இது நம்முடன் 10 ம் வகுப்பில் படித்த சுந்தர் அல்லவா… என்று. இந்த அனுபவம் நிச்சயம் உங்களது வாழ்விலும் கடந்து சென்றிருக்கும். இதுபோன்ற பணிகளைத்தான் நடுமனம் செய்கிறது.
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளை நடுமனம்தான் பதிவுசெய்து கொள்கிறது. மோசமான சூழ்நிலைகளின்போது சில சோகமான நினைவுகளையும், அடிக்கடி நமக்கு நினைவூட்டி நம்மை சோர்வுற செய்வதும் இந்த நடு மனம்தான். எனவே நமது வெற்றிகள் தாமதப்படுவதற்கு முக்கிய கரணம் மேல் மற்றும் நடு மனதின் ஆலோசனைப்படி நடப்பதுதான்.
மேல் மற்றும் நடு மனதின் ஆலோசனைகள் படி நீங்கள் நடந்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்தது போதும். இனி நமது ஆழ்மனதை பயன்படுத்தி, நான் யார்? எதற்காக இந்த பூமியில் பிறந்தேன்? என்பதற்கான விடையை கண்டுபிடித்து நம்மை நாமே அறிந்து கொண்டு, நாம் நினைத்தபடி வெற்றி என்ற இமயத்தை தொடுவதற்கான இலட்சிய பயணத்தை ஆரம்பிபோம்.
ஆழ்மனம்(Super – Conscious Mind)
இதுதான் மிகவும் சக்திவாய்ந்த மனம். நமக்குள் நமக்காகவே இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய, அதே நேரம் நமது கட்டளைக்காக காத்திருக்கக்கூடிய ஒரு பொக்கிஷம்தான் இந்த ஆழ்மனம். இந்த பிரபஞ்சத்தையே அசைத்துப் பார்க்கக்கூடிய பேராற்றலுடையது இந்த ஆழ்மனம்.
ஒவ்வொரு மானிட பிறவிக்கும் இயற்கை வாரி வழங்கிய அற்புத கொடைதான் இந்த ஆழ்மனம். நமது சமூகத்தில் சிலர் கோடீஸ்வரர்கள் ஆகவும், சிலர் வாழ்வாதாரத்தையே இழந்தவர்களாகவும், தாராளம் வசதி வாய்ப்புகள் இருந்தும், மகிழ்ச்சியற்று வாழ்கை நடத்துவதும், வறுமையில் உழன்றாலும் மகிழ்ச்சியாக வாழ்வதும் இந்த ஆழ்மனதின் செயல்பாடுகளே.
ஆழ்மனதுக்கு நல்லது எது? கெட்டது எது? என பிரித்து பார்க்க தெரியாது. ஒருவர் ஆழ்மனதுக்கு என்ன கட்டளை கொடுக்கின்றாரோ அதாவது, திரும்ப திரும்ப எதை ஆழமாக நினைக்கிறாரோ அதை கட்டளையாக ஏற்றுக்கொண்டு அதை அவரது வாழ்க்கையில் நடத்தி தருகிறது. இதைத்தான் நமது முன்னோர்கள் “எண்ணம் போல் வாழ்வு” என சொல்லி வைத்தார்கள்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். என்று சுவாமி. விவேகானந்தர் கூறுகிறார். ஆம்… மனதின் மொழி எண்ணங்களே. அந்த எண்ணங்கள் வளமையாய் இருந்தால் நமது வாழ்வில் நாம் எதை நினைத்தாலும் அது நடக்கும்.
நிச்சயம் நடந்தே தீரும். “நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்துசேரும். நீ நீயாக இரு”என்று Dr.அப்துல்கலாம் கூறுகிறார்.
ஒருமுறை ஏழை வழிப்போக்கன் ஒருவன் அடர்ந்த காடு வழியாக தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தான். நடந்து, நடந்து சோர்ந்துவிட்டான். அப்போது மிகுந்த காற்றோட்டம் உள்ள பரந்துவிரிந்த மரத்தடியை கண்டான். உடனே அங்கே சென்று சற்று ஓய்வு எடுத்துக்கொண்டான். அப்போது தென்றல் காற்றின் மயக்கத்தில் அவனுள் கற்பனைகள் பஞ்சாய் பறக்க தொடங்கிது.
ஆகா… இந்த அருமையான இடத்தில் வெறும் தரையில் படுப்பதற்கே இவ்வளவு சுகமாய் இருக்கிறதே! ஒரு மெத்தையுடன் கூடிய கட்டில் கிடைத்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று மனதில் ஆழமாக நினைத்து மகிழ்ந்தான். என்ன அதிசயம்! அவனது மனம் விரும்பியது போலவே மெத்தையுடன் கூடிய அழகிய கட்டில் அவன்முன் வந்தது. அதில் சென்று படுத்தான்.
ஆஹா …என்ன ஆனந்தமாக இருக்கிறது! அழகான கட்டில் இருக்கிறது, இங்கே எல்லா வசதியுடன் கூடிய ஒரு அழகிய வீடு இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்! என்ற கற்பனையில் மிதந்தான். என்ன ஆச்சிரியம்! அவன் நினைத்தது போலவே ஓர் அழகான வீடும் வந்தது. அந்த வீட்டில் வசிக்க தொடங்கினான். இன்னும் என்னவெல்லாம் வேண்டும் என மனதில் நினைத்தானோ, அதுவெல்லாம் நினைத்தவுடனே கைகூடியது. திடீர் என ஒரு நாள் பயம் அவனை தொற்றிக் கொண்டது.
இந்த அடர்ந்த காட்டில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். இப்போது ஒரு சிங்கம் என்னை வந்து கடித்து கொன்றால் …என நினைத்த மாத்திரத்தில், அவ்வளவு தான்… சிங்கம் வந்தது…. அவனை கடித்துக் கொன்றது. இப்போது புரிந்திருக்கும் ஆழ்மனதின் சக்தியை.
ஆழ்மனதுக்கு நல்லது கெட்டது தெரியாது. நாம் எதை மிகவும் ஆழமாக நடந்ததை போன்று கற்பனை வழியாக ஆழ்மனதுக்கு கட்டளை கொடுக்கின்றோமோ, அதை நமது ஆழ்மனது நிச்சயம் நிறுவேற்றும். எனவே இந்த ஆழ்மனதை பயன்படுத்தி தன்னை அறிந்து எப்படி வெற்றி என்ற இமையத்தை தொடுவது என்பதை தொடர்ந்து வரும் பதிவுகளில் காண்போம்.
எமது அடுத்த பதிவை படிக்க: நீங்களும் ஆல்ஃபா தியானம் பழகலாம்
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.