தலைப்பை பார்த்தவுடன் என்னை எனக்கு நன்றாக தெரியுமே என்று நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாக புரிகிறது. சாதாரணமாக உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து இருப்பது அல்ல இந்த தலைப்பின் நோக்கம். நமது உள்ளத்தின் ஆழத்திற்கு சென்று நான் யார்? என் தகுதி என்ன? நான் எப்படி செயல்பட வேண்டும்? எனது சக்தி என்ன? என்று பல கேள்விகளை கேட்டு உண்மையை புரிந்து கொள்வதே உன்னை நீ அறிவாய் என்பதன் விளக்கமாகும்.
நம்மில் மறைந்துகிடக்கும் ஆற்றல்
மனிதனுடைய மூளை என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது. சராசரியாக 5 சதவீத மக்கள்தான் தங்கள் மூளையின் சக்தியை உணர்ந்து பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் உலகில் சாதனை புரிந்த மிகப் பெரிய அறிவாளிகள் எல்லாம் நமது மூளையின் ஆற்றலில் 15% தான் பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
15 சதவீதம் மூளையை பயன்படுத்தி யவர்களே வாழ்வில் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள் என்றால், மனிதர்களாகப் பிறந்து விட்டோம். நாமும் நமது மூளையை கணிசமாக பயன்படுத்தி வாழ்வில் சாதனைகள் பல புரியவேண்டாமா?
ஒவ்வொரு ஆணும் பெண்ணும், தங்கள் ஆழ் மனதில் புதைந்து கிடக்கின்ற மாபெரும் ஆற்றல்களை இனங்கண்டு, அதை பயன்படுத்தி வெற்றியடைவது என்பது உங்களது பிறப்புரிமை ஆகும். இது பிரபஞ்சம் உங்களுக்கு கொடுத்து இருக்கின்ற கடமையுமாகும்.
இந்த ஆற்றல்களை நாம் இதுவரைக்கும் இனம் கொண்டு கொள்ளாததற்கான காரணம் என்னவென்றால், நம்மில் மறைந்துகிடக்கும் ஆற்றலை உணராததே. உங்களுக்குள் தேங்கிக் கிடக்கும் இத்தகைய ஆற்றலை உணராதன் காரணமாக சின்ன வேலைகள் அல்லது தொழில்களில் ஈடுபட்டு சிறிது சிறிதாக நீங்கள் சம்பாதித்து வருகிறீர்கள்.
ஆனால் உங்கள் ஆற்றலை நீங்கள் சரியாக உணர்ந்து பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் இந்த உலகில் வளமான வாழ்வு வாழ்வது உறுதி. காலம் கடந்து விட்டதே என்று கலங்கி விடாதீர்கள்.
எனவே கவலைப் படுவதை விட்டுவிட்டு உங்களது முயற்சியை பலப்படுத்தி வெற்றிக்கனிகளை எட்டிப் பிடியுங்கள். உங்களில் ஒளிந்திருக்கும் அந்த மாபெரும் சக்தியை இனம் கண்டு கொள்வது எப்படி? மற்றும் அந்த சக்தியை எவ்வாறு பயன்படுத்தி வாழ்வில் செல்வ வளங்களை குவிப்பது என்பது தொடர்பாக விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
விதி என்று ஒன்று உண்டா?
முதலில் விதி என்று ஒன்று உண்டா என்றால் உண்டு என்பது தான் உண்மை. மனிதனாய் பிறந்து விட்டால் பிறப்பு, இறப்பு, மறுபிறவி என்ற நிலை உண்டு. அதனால் முற்பிறவியில் நீங்கள் செய்த கெடுதல்கள் தான் இப்பிறவியில் உங்களை துன்பமாக துரத்தி வருகிறது.
ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் இந்த விதியையும் மதியால் வெல்லலாம்.அதற்காகத் தான் இறைவன் மனிதனுக்கு மனம் என்கிற ஒரு அமைப்பை கொடுத்திருக்கின்றான்.
மனம் என்பது ஒரு மாயை சக்தி எனலாம். அந்த மனம் நினைத்தால் ஒன்றை அளிக்கவும் முடியும். உருவாக்கமுடியும். மனமானது அபரிவிதமான ஆற்றல்களை பெற்றது. இத்தகைய ஆற்றல் மிகுந்த மனமானது தானாக ஒரு நபரைக் கெடுப்பதும் இல்லை, வளர்த்துவதும் இல்லை.
நீங்கள் எடுக்கும் உங்களது ஒவ்வொரு எண்ணமும் சொல்லும் செயலும் முடிவும் தான் வளர்ச்சியையும் தளர்ச்சியையும் தருகின்றது. ஏனெனில் நமது எண்ணங்கள் மிகவும் வலிமை மிகுந்ததாகும். தெரிந்தோ தெரியாமலோ நமது பலத்தையும் அல்லது பலத்தையும் மனதில் எண்ணி செயல்படுகின்றோம்.
இந்த எண்ண அலைகள் பிரபஞ்சத்திலேயே சென்று ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் எண்ணியது நன்மையாக இருந்தால், அதை பல மடங்காக நம்மிடம் திருப்பிக்கொண்டு தருகின்றது. அதே நேரம் மனதில் தவறான எண்ணங்களை எண்ணினால் அதே போன்று தவறான பலன்களையும் நம்மிடம் அதிகமாக கொண்டு சேர்க்கின்றது.
எண்ணம் என்பது ஒரு விதை
ஆம் எண்ணம் என்பது ஒரு விதை. நல்ல எண்ணம் என்ற விதையை நமது மனம் என்னும் தோட்டத்தில் விதைத்தால் அவை விளைந்து நமக்கு நல்ல பலன்களையே தரும். கெட்ட எண்ணம் எந்ற விதையை விதைத்தால் அவை தீமையான பலன்களை தரும். ஒருவன் இந்த பூமியில் கஷ்டப்படுகிறான் என்றால் அதற்கு காரணம் அவன் செய்த பிழை தான்.
இறை நிலையாகிய பிரபஞ்ச சக்தியை யாரும் ஏமாற்றிவிட முடியாது. உதாரணமாக வெளியில் பார்ப்பதற்கு நல்லவன் போல் இருப்பான். உள்ளுக்குள்ளே ஏகப்பட்ட அழுக்குகள். தீமையான எண்ணங்களே மனதில் மேலோங்கி நிற்கின்றன .
அழகான பெண்களைப் பார்க்கும்போது காம எண்ணத்துடனேயே அவர்களை பார்ப்பான். மனதால் அந்த பெண்ணையே கற்பழித்தும் இருப்பான். ஆனால் இது யாருக்கும் தெரியாது என்று பக்தி வேடம் கொண்டிருப்பான்.
இப்படிப் பட்டவர்கள் இறுதியில் தீமையான பலன்களை அனுபவிப்பர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். எனவே நாம் தவறு செய்வது வேறு யாருக்கும் தெரியாது என்று எண்ணி வீண் போகாதீர்கள்.
உங்கள் மனதில் எழுகின்ற ஒவ்வொரு எண்ணமும் பிரபஞ்சத்தில் பதிவாகி விடுகின்றது. எனவே விழிப்பாய் இருந்து நல்லதையே நினையுங்கள் நன்மையே செய்யுங்கள். ஒவ்வொரு மனிதரிடமும் நீங்கள் பழகும்போது அன்பாகவே பேசிப் பழகுங்கள். யாரும் தவறானவர்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழ வேண்டாம்.
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள். ஒருவரிடம் நீங்கள் தவறைக் கண்டால் தவறை மன்னித்து விட்டு அவரிடம் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு அமைதியாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் மனமும் அமைதி அடைகின்றது. வயதை அடையும் போது இறைவன் அல்லது பிரபஞ்ச சக்தி மனதை ஆட்கொள்கிறது.
உலகில் நல்லது கெட்டது என எதுவும் கிடையாது. அனைத்தும் நமது செயல்களின் விளைவுதான். நீங்கள் யாரை சந்தித்தாலும் வணக்கம் செலுத்துங்கள். சிரித்து சுறுசுறுப்பாக பேசுங்கள். நீங்கள் எதை விரும்பினாலும் அதை தருவதற்கு இந்த இயற்கை அல்லது பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கின்றது. எனவே நல்ல மனதோடு அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனந்தமாக வாழுங்கள்.
எமது அடுத்த பதிவை படிக்க: நம்பிக்கையின் ஆற்றல்கள்
எண்ணத்தின் சக்தி
இறைவன் மனிதனுக்கு பரிசாக கொடுத்திருப்பது எண்ணங்களும் அதன் சக்திகளும் தான். இந்த உலகில் நடந்திருக்கக் கூடிய பல பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் ஆழமான எண்ணத்தின் வெளிப்பாடுகளே. மனதை அமைதியாக வைத்து சிந்தித்தோம் என்றால் இன்னும் பல புதிய புதிய எண்ணங்கள் மனிதனுக்குள்ளே மெல்ல மலர்ந்து கொண்டுதான் இருக்கும்.
ஆக உறுதியான எண்ணங்கள் ஒரு தனி மனிதனை மட்டுமல்ல இந்த உலகையே மாற்றி விடும். இந்த எண்ணத்தின் உறுதியால் நீங்கள் எதை நினைத்தாலும் அதை சாதிக்க முடியும். வாழ்வில் வசந்தங்களை அனுபவிக்க முடியும். நான் வெற்றி அடைந்தே தீருவேன் என உங்கள் மனதிற்குள் அடிக்கடி இந்த வார்த்தையை உச்சரித்து வந்தால் வெற்றி ஒருநாள் உங்கள் கையில் மலரும்.
மனதினுள் என்னால் முடியுமா இது என்னால் ஆகாது என்று எதிர்மறையாக எண்ணினால் தோல்வி என்கிற பலன் உடனடியாக உங்கள் கைக்கு வந்துவிடும். காரணம் மனம் எதை எண்ணுகிறதோ அதை தான் இந்த பிரபஞ்சம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. சில மனிதர்களுக்கு இயற்கையிலேயே இந்த ஆழ்மனசக்தி இருந்தும் தங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற குழப்பமான சிந்தனைகளால் எதையும் அடைய முடியாமல் தவிக்கின்றனர்.
இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் தங்களுடைய உறுதியான எண்ணங்களில் தெளிவில்லாமல் இருப்பதே. எண்ணம் என்பது ஒரு மாபெரும் சக்தி என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.
பிரபஞ்சத்தில் பரவும் எண்ண அலை
சுவாசத்தின் வழியாக நமது எண்ண அலைகள் பிரபஞ்சத்தில் பரவி அதற்கான நல்ல அல்லது கெட்ட பலன்களை நம்மிடம் ஈர்த்துக் கொண்டு வருகின்றது. எது எப்படியோ நமது எண்ணத்தின் படியே நமது வாழ்க்கை அமைகின்றது.
குறிப்பாக ஒருவரை மனதில் எண்ணி அவர் மனதில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை நாம் ஆழமாக சந்தித்தோம் என்றால் அந்த எண்ண அலைகள் பிரபஞ்சம் வழியாகச் சென்று தொடர்புடைய நபரிடம் தாக்கத்தை உருவாக்குகின்றது.
நமது எண்ணங்கள் ஒரு நொடியில் 4 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சென்று பிரபஞ்சத்தை அடைகின்றது. உங்கள் எண்ணங்கள் மின்காந்த அலைகளாக மாறி பிரபஞ்சத்தில் பரவுகின்றது. அப்படி பரவுகின்ற போது உங்கள் எண்ணத்துக்கு ஒத்த ஒரு நபருடைய எண்ண அலைகள் அங்கே இருக்கும். அதை உங்களிடம் ஈர்த்து வருகின்றது.
பிரபஞ்சம் ஈர்த்து தரும் வாய்ப்பு
உதாரணமாக நீங்கள் செல்வ வளம் மிக்கவராக மாறவேண்டும் என்று உங்கள் எண்ணத்தின் ஆழத்தில் நீங்கள் எண்ணி விட்டீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இது நிறைவேற வேண்டுமானால் உங்களுக்கு முதலீடு தேவை.
ஆனால் தற்போது உங்களிடம் முதலீட்டுக்கான பணம் இல்லை.உதவி செய்ய யாரும் இல்லை. இந்தத் தருணத்தில் தான் உங்களது எண்ணம் ஆழமாக சென்று எனக்கு யாராவது முதலீடு செய்தால் நிச்சயமாக நான் உயர்வேன் என்று உங்களுடைய உள்மனம் கூறுகின்றது.
இது உங்களுடைய எண்ணத்தின் வேகத்தை பொருத்து பிரபஞ்சத்தில் போய் கலந்து விடுகிறது. ஏற்கனவே வேறு யாரோ ஒரு நபர் தன்னிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்து இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ண அலையை பரவவிட்டு இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் எண்ணமும் அவரது எண்ணமும் ஒன்றாக இணை சேர வாய்ப்பு இருக்கின்றது. அந்த சக்தியானது ஒன்று சேர்ந்து ஏதாவது சூழ்நிலையில் அந்த நபரை உங்களுக்கு எப்படியாவது அறிமுகப்படுத்த வைக்கும்.
இந்த நபர் வழியாக உங்களுக்கு தேவையான முதலீடும் கிடைத்துவிடும். நீங்களும் நினைத்தபடி அந்த தொழிலில் முதலீடு செய்து செல்வ வளத்தை உங்களால் ஈர்த்துக்கொள்ள முடிகிறது. இவ்வாறுதான் பிரபஞ்ச சக்தி செயல்படுகிறது.
ஆகவே உங்களுக்கு நடக்கும் நல்லது, கெட்டதற்கு எல்லாம் நீங்களே காரணம். இதை கடவுளோ அல்லது வேறு யாரோ உங்களுக்கு கொடுப்பதில்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால்தான் மனதால் யாருக்கும் கெட்டதை நினைக்காதீர்கள் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
எண்ணங்கள் அமைதியானவை. சத்தமில்லாமல் செயல்படுகிறது. அதை பார்க்க முடியாது. கண்ணுக்கு தெரியாது. ஆகவே நமது ஒவ்வொரு செயலையும் பேச்சையும் நன்றாக கவனித்து செய்வது நல்லது. பேச்சை விட எண்ணத்திற்கு தான் அதிக வலிமை உள்ளது. உங்கள் ஆழ்மனது எப்போதும் பிரபஞ்ச பேராற்றல் உடன் நேரடி தொடர்பில் உள்ளது என்பது உங்களுக்குள் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆக எந்த நொடியிலும் நீங்கள் எண்ணும் எண்ணங்கள் பிரபஞ்சத்தை சென்றடைகின்றது. தன்னை அறிந்து கொண்டால் தனக்கோர் கேடும் இல்லை என்று கூறுகிறார் திருமூலர். எனவே நம்முள் இருக்கும் சக்தியை உணர்ந்து கொண்டு வாழ்வில் எல்லா வெற்றிகளையும் நமது ஆக்கிக்கொள்வோம்.
ஆற்றலை அதிகரிக்க ஆழ்மன பயிற்சிகள்
1.நீங்கள் எந்த புதிய இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தில் 5 நொடிகள் உங்கள் கண்களை மூடி நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
2.நீங்கள் ஒரு இடத்திற்கு செல்லும்போது, அங்கே மாடி படிக்கட்டுகள் இருக்கின்றன என வைத்துக் கொள்வோம். அந்த இடத்திற்கு ஏறிச் செல்லும் போதோ அல்லது இறங்கி செல்லும் போதோ எத்தனை படிக்கட்டுகள் இருக்கின்றன என்று உங்கள் மனதால் எண்ணிக் கொள்ளுங்கள்.
3.தினமும் உறங்க செல்கின்றபோது அன்றைக்கு காலையில் மதியம் மாலை இரவு என்னென்ன உணவு பொருட்களை கொண்டீர்கள் என்பதை சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
இது என்ன பயிற்சியா என இதை உதாசீனப்படுத்த வேண்டாம். இந்த பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்கின்றபோது உங்கள் மனதை எளிதில் ஒருமுகப்படுத்துவது வாய்ப்பாக அமையும்.
இந்த மனதை ஒருமுகப்படுத்த கூடிய பயிற்சி உங்களுக்குள் சரியாக அமைந்து விட்டால் அடுத்த கட்டமாக உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் உணர்ந்து உங்கள் ஆழ்மனதை தூண்டி எண்ண அலையை பரவவிட்டு எப்படி அதைப் பெற்றுக் கொள்வது என்பதை அடுத்த பயிற்சியில் பார்க்கலாம்.
4.மனதை அமைதியாக வைத்து விட்டு பெண் பென்சில் காகிதம் எதுவும் இல்லாமல் இரண்டு இலக்க எண்களை சற்று கூட்டிப் பாருங்கள். அதே போன்று இரண்டு இலக்க எண்களை பெருக்கிப் பாருங்கள். வகுத்துப் பாருங்கள். இது சரியாக வரும் பட்சத்தில் 3 இலக்கம் 4 இலக்கம் 5 இலக்கம் என இதே செயலை நீங்கள் செய்து பழகிப் பாருங்கள். உங்கள் மனம் மிகவும் கூர்மையாவதையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதையும் உங்களால் உணர முடியும்.
5.குறைந்தபட்சம் பத்து வரிகள் உள்ள பாடலையோ அல்லது ஏதாவது வாக்கியங்களையும் தினமும் பலமுறை உச்சரித்து பாருங்கள்.
6. உங்கள் சமூகத்தில் வாழும் ஒருவரை மட்டும் நிதானமாக தொடர்ந்து கவனியுங்கள். அவரது முகம் உடலமைப்பு அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வாருங்கள். அதை உங்கள் மனதில் நிறுத்தி அவர் இல்லாத போது அவருடைய உருவத்தை அப்படியே நினைத்துப் பாருங்கள். இந்த ஆறு பயிற்சிகளையும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் மனதை பிரபஞ்சத்தின் பேரலைக்கு நேராக நீங்கள் திருப்பி விட்டீர்கள் என்று அர்த்தம்.
இந்தப் பயிற்சியால் உறுதியான எண்ணத்தை ஆழமான எண்ணத்தை இந்த பிரபஞ்சத்திற்கு நீங்கள் கொடுத்து நீங்கள் விரும்பியதை அடைய முடியும். பலரும் மனதை பயன்படுத்துவதற்கு பதிலாக மூளையை பயன்படுத்துகின்றார்கள். இதனால்தான் வெற்றிகள் தாமதப் படுகின்றன. இந்தப் பயிற்சியின் மூலம் மூளையும் மனமும் தனித்தனியாக இயங்குவதை உங்களால் உணர முடியும். அபரிவிதமான செல்வ வளங்கள் உங்களிடம் தவழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
எமது முந்தய பதிவை வாசிக்க: வரலாறு சார்ந்த பொது அறிவு வினாக்கள்
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.
Super sir
நம்மை நாம் அறிந்தால் நாம் நினைத்த காரியங்கள் நிச்சயம் சாத்தியம் அருமையான பதிவு