பிள்ளைகள் வளர்ப்பும் பெற்றோரின் பொறுப்பும்

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பிள்ளைகள் வளர்ப்பும் பெற்றோரின் பொறுப்பும் என்ற இந்த பதிவில் இக் கலையை குறித்துதான் பார்க்க இருக்கின்றோம். இந்த கலை நமக்கு சரியாக அமைய  குழந்தைகளின் மனதை அறிதல் மிக அவசியம்.

குழந்தையின் பிறப்பு

ஒரு குழந்தை கருவாகி, பின்னர் உருவாகி மனித உடலோடு இந்த மண்ணில் மலர்கின்றது. இந்த குழந்தை கருவில் உருவாகிய நாள் முதல் தாயின் உணர்வுகள் வழியாக பல பாடங்களை மனதில் பதித்துக் கொண்டுதான் வளர்கின்றது.

அதாவது தாய் எந்த உணர்வை உணர்ந்தாலும், அது மகிழ்ச்சியாய்  இருக்கலாம் அல்லது வருத்தமாக இருக்கலாம்,எதுவாக இருந்தாலும் அது குழந்தையின் மனதில் பதிகின்றது. ஆக குழந்தையின் வளர்ப்பு முறை என்பது கருவிலே ஆரம்பம் ஆகின்றது என்பதுதான் உண்மை.

குழந்தை கருவாக இருக்கும்போதே  மனதால் கொஞ்சி குலாவும் அப்பாக்களும் ஏராளம். இந்த அப்பாக்களின் உணர்வுகளும் பிரபஞ்ச பேராற்றல் வழியாக அந்த குழந்தையின் மனதில் பதிகின்றது. அது போல குடும்பத்திலும், சமூகத்திலும்  நிலவும் சில சூழ்நலைகளும், இதுபோல குழந்தையின் மன நிலையில் பிறக்கும் முன்பே  ஒரு தாக்கத்தை உருவாக்குகின்றது.

இந்த மன நிலைகளில் தாக்கங்களும், குழந்தை வளரும் சூழலும் இணைந்து தான் அந்த குழந்தையின் எதிர்காலமும் அமைகின்றது. இந்த சூழ்நிலையில் உருவாகி வளரும் குழந்தையை, சமூக தீமைகளில் இருந்து பாதுகாத்து, பொறுப்புடனும், கருத்துடனும்  வளர்த்துதல் என்பது பெற்றோருக்கு ஒரு மாபெரும் சவாலாகவே உள்ளது எனலாம்.

ADVERTISEMENT

காரணம் நாகரிக உலகில் அலைபேசி, தொலைக்காட்சி போன்ற கருவிகளின் பயன்பாடு இந்த குழந்தைகளின் ஆழ் மனதுக்குள் மாபெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றது. இவற்றை இன்றைய கால கட்டத்தில் முழுமையாக தவிர்க்கவும் இயலாது. இந்த சூழலில் பெற்றோரின் பொறுப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

குழந்தை பருவம் என்பது

பிறந்தது முதல் பருவமடைதல் வரை உள்ள காலகட்டத்தில்  இருக்கும் அனைவரும் குழந்தைகளே. பருவமடைதல் என்பது 10 வயது முதல் 13 வயதுக்குள் நடக்கும் ஒரு மற்றம் ஆகும். இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. இந்த  பருவத்தில் பெற்றோர் எவ்வாறு குழந்தைகளை பழக்க படுத்தி எடுக்கின்றார்களோ அதை பொறுத்துதான் அதன் எதிர்காலம் அமையும்.

இந்த காலகட்டத்தில் குழந்தைகளிடம் பெற்றோர்களின் ஈடுபாடு சற்றே அதிகமாக இருக்கும். குறிப்பாக அதிக பாசம் குழந்தைகள் பால் இருக்கும். பல குழந்தைகள் படு சுட்டியாக இருக்கும். இந்த குறும்பு கலந்த சேட்டையை ரசிக்கின்றனர்  பெற்றோர். அந்த குழந்தைகள் செய்யும் சேட்டையினை ரசிக்கும் பெற்றோர், அதில் காணும் தவறை சுட்டிக்காட்டி, கண்டிக்க தவறுகின்றனர்.

எமது முந்தய பதிவை வாசிக்க: அப்பாவின் அன்பிற்கு ஈடேது ?

சேட்டையை ரசிக்கும் பெற்றோர்கள்

உதாரணமாக தனது தந்தையை  அல்லது தாயை ஒரு குழந்தை பெயரை அழைத்கின்றது அல்லது தனக்கே உரித்த பாணியில்  திட்டுகின்றது என வைத்துக் கொள்வோம். அதை காணும் தாயும், தந்தையும் இது தவறு என புரிய வைக்க தவறி விடுகின்றனர். மாறாக குழந்தை வளரும்ப்போது இந்த குறும்பு மாறிவிடும் என நினைத்து அதை ரசிக்கின்றனர். மட்டுமல்ல அந்த செயலை ஊக்கப் படுத்துகின்றனர்.

ADVERTISEMENT

அது போல வீட்டுக்கு வரும் உறவினர் அல்லது நண்பர்களுடன் அந்த குழந்தை ஒழுக்கமற்ற செயல்களில் ஈடு படும்போதும் அதை கண்டிக்க மறுத்து விடுகின்றனர். இன்னும் வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும் போது அங்கே இருப்பவர்களுடன் சேட்டைகளில் ஈடுபடும்போது அதாவது பெரியவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசும்போது அல்லது உடலை சீண்டும்போது அதையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பெற்றோர்கள் அதிகம்.

பெற்றோரே கவனம் தேவை

அன்பு பெற்றோரே குழந்தைகளை அளவு கடந்து நேசிக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக குழந்தைகள் செய்யும் தவறுகளை சேட்டை என நினைத்து விட்டுவிடாதீர்கள். தவறு என கண்டால் இது தவறு என சுட்டிக் காட்டுங்கள்.

புரிந்து கொள்ளவில்லை எனில் கண்டியுங்கள். அதிலும் புரிந்து கொள்ளவில்லை  எனில் சிறிய அளவில் தண்டனைகளை வழங்குங்கள். இவாறு நீங்கள் செய்ய தவறினால் பிற்காலத்தில், காவல் துறையும், சட்டமும் அந்த வேலையை செய்யவேண்டி இருக்கும்.

அது மட்டுமா? பல விதமான கனவுகளோடு குழந்தையினை வளர்க்கும் நமக்கு, பெருத்த ஏமாற்றம் நிகழ வாய்ப்பு உண்டு. காரணம் சிறு வயதில் கட்டுப்படுத்த தவறியதன் விளைவு, அவன் அல்லது அவள் வளர்ந்து இளம் பருவம் அடைந்தவுடன் தான் பெரிய நபர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் படுவார்கள்.

அப்போது பெற்றோர் சொல்லிற்கு கீழ்ப்படிய மறுக்கும் சூழ்நிலை வரலாம். காரணம் தான் வளர்ந்துவிட்டேன் என்பதை நிரூபிக்க துடிக்கும் வயது இது. எனவே அன்பு பெற்றோரே நமது குழந்தைகள், என்றும் நமக்கு சொந்தம் இல்லை. அதாவது அவர்கள் நமது வழியாக இந்த உலகிற்கு அறிமுகம் ஆனார்களே தவிர அவர்கள் நமக்கு முற்றிலும் சொந்தம் அல்ல.

ADVERTISEMENT

அவர்கள் இந்த பிரபஞ்சத்துக்கு சொந்தக்காரர்கள். காரணம் நாம் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு சென்று விடுவோம். அவர்கள் தான் தொடர்ந்து வாழப் போகின்றார்கள். எனவே இதை உணர்ந்து, இந்த சமூகத்துக்கு நல்ல குழந்தைகளை கொடுக்க முயற்சி மேற்கொள்வோம்.

நல்ல பழக்க வழக்கங்களை உருவாக்க

நமது வழி மரபுக்கள் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க நாம் தான் பொறுப்பாளர்கள். ஆம் நமது முன் மலர்ந்து வளரும் குழந்தைகள் முன் நாம் நல்ல வார்த்தைகளை சொல்லி பழகுவோம். கணவன் மனைவிக்குள் எதாவது கருத்து வேறுபாடுகள் வரும்போது குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடும் பழக்கத்தை தவிருங்கள்.

நீங்கள் ஒருவர் மற்றொருவரை மதிப்பாய் பேசி பழகுங்கள். அது போல உங்கள் குழந்தைகளை பெயர் சொல்லி அழைக்கும்போது மதிப்பான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உதாரணமாக உங்களது குழந்தையின் பெயர் ஜோஸ் என வைத்துக் கொள்வோம்.  அவனை பெரும்பாலான பெற்றோர் எப்படி அழைப்பர் தெரியுமா?

லே  ஜோஸ் இங்க வால… அங்கே போடே….  பெலே அதை செய்யாதே. கொன்று போடுவேன். இவ்வாறு பல இடங்களில் உரையாடல் நடக்கின்றது. இந்த குழந்தையும் காலப்போக்கில் தான் காணும் குழந்தைகளையும், அல்லது சந்திக்கும் நபர்களையும் மரியாதை இல்லாமல் அழைக்க பழகுகின்றது.

தனது வீட்டிற்கு மாமன் முறை உள்ள ஒரு நபர் வருவதாக வைத்துக் கொள்வோம். மேற்கண்ட பழக்கவழக்கத்தில் இருக்கும் குழந்தை அந்த நபரை எப்படி அழைக்கும் என தெரியுமா? டே மாமா வாடா… நீ நல்லா இருக்கியா? எனக்கு அந்த பிஸ்கெட் வாங்கி தால…. டே அப்பா எனக்கு மாமாவிடடம் பிஸ்கெட் வாங்கி தர சொல்லு.. இன்னும் ஒருபடி மேலே சென்று தாய் தந்தையின் பெயரை உச்சரித்து வாடா, போடீ போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றன.

ADVERTISEMENT

இவற்றை மாற்ற என்ன வழி?

இதற்கெல்லாம் ஒரே வழி அந்த குழந்தையை நீங்கள் தரம் மிக்க வார்த்தைகளால் அழைத்து பழகலாம். எப்படி? செல்லம் ஜோஸ் இங்க வாங்க…. அம்மவுக்கு அந்த பொருளை எடுத்து கொடுங்க…. அப்பாவுக்கு இந்த பொருளை கொண்டு கொடுங்க….

இது போன்ற தரம் மிக்க வார்த்தைகளை குழந்தைகளிடம் பயன்படுத்துங்க. குழந்தைகள் முன் மற்றவர்களை அழைக்கும்போது இதுபோன்ற தரமான, மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே உதாரணமாக இருங்கள்.

நீங்கள் எதை இந்த பிரபஞ்சத்துக்கு கொடுக்கின்றீர்களோ அதுவே பல மடங்காக திருப்பி கிடைக்கும் என்பது தானே இயற்கையின் விதி. ஆக உங்கள் மதிப்பு மிக்க  பேச்சை கேட்கும் குழந்தைகள், தான் சந்திக்கும் நபர்களை யும் தரமான வார்த்தைகளால் அழைக்க தொடங்கும்.

உதாரணமாக  வாங்க மாமா.. அப்பா வாங்க… அம்மா எனக்கு பசிக்குது. எதாவது தாங்க… இது போன்ற தரமான வார்த்தைகளை பேசி பழகுவார்கள். ஆக குழந்தைகள் அல்ல மாற வேண்டியவர்கள். முதலில் பெற்றோர்களாகிய நாம் தான் மாறவேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளின் மனநிலை

குழந்தைகளின் மனது என்பது எழுதப்படாத ஒரு வெள்ளை காகிதம் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த காகிதத்தில் நீங்கள் என்ன பதிவுகளை குழந்தைகளின் மனதில் பதிக்கின்றீர்களோ, அந்த பதிவு தான் அந்த குழந்தையின் எதிர் காலமாக மலர்கின்றது.

ADVERTISEMENT

“எந்த குழந்தையும்  நல்ல குழந்தைதான்  மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவது கெட்டவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற வரிகள் மிகவும் ஆழமானவை. குழந்தைகள் மனது எழுதப்படாத வெள்ளை காகிதம் என்றேன். அப்படிப்பட்ட களங்கமற்ற வெள்ளை மனதில் பெற்றோராகிய நீங்கள்  என்ன பதிவுகளை பதிய வைக்கின்றீர்களோ அதுவாகவே அவர்கள் மாறிவிடுவார்கள்.

அதை எப்படி பதிய வைக்கவேண்டும் என்பது பல பெற்றோருக்கு தெரிவதில்லை. அந்த முறை மிகவும் எளிதானது. வளர்ந்துவரும்  குழந்தைகள் இந்த சமூகத்தில் தன்னை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருவார்கள். இவ்வாறு வளரும் குழந்தைகள் பல தெளிவுகளை பெற பெற்றோரிடம் கேள்வி கேட்க தொடங்கும். உதாரணமாக ஒரு மரம் வெட்டும் தொழிலாளி தனது பத்து வயது மகனுடன் மரம் வெட்ட சென்றார்.

வழியில் செல்லும்போது ஒரு காட்டாறு பாய்ந்து சென்றது. அதன் வழியாக செல்லும்போது அந்த சிறுவன் தனது அப்பாவிடம், அப்பா இந்த ஆறு எங்கே பாய்ந்து செல்கின்றது? என கேள்வி கேட்கத் தொடங்கினான். அவரோ சும்மா வாடா என்றார். சிறுவன் விட்ட பாடில்லை. கேள்வியினை தொடர்ந்தான்.

அப்பாவின் பொறுப்பற்ற பதில்

சிறுவன் கேள்வி கேட்பதை நிறுத்த ஒரு வேடிக்கையான பதிலை கொடுத்தார்.  இந்த ஆறு நமது வீட்டுக்குத்தான் போகின்றது என்று வேடிக்கையாக பதிலளித்தார். சிறுவனும் அமைதியானான். அப்பா மரத்தை வெட்டிவிட்டு அந்த சிறுவனிடமும், வேலைக்காரனிமும் அதன் கிளைகளை பொறுக்கி அடுக்கி வைக்கச் சொன்னார்.

அந்த பணியாளரும், சிறுவனும்  அந்த ஆற்றின் கரையோரம் அடுக்கி வைத்தனர். வேலைக்காரன் ஒரு அவசரம் காரணமாக வீட்டிற்கு சென்றுவிட்டார். ஒரு வழியாக வேலை முடிவுற்றது. அப்பா மகனிடம் கேட்டார், மகனே அடுக்கி வைத்த விறகுகள் எங்கே? இப்போது வாகனம் வந்துவிடும்.

ADVERTISEMENT

அவற்றை எடுத்துச் செல்லவேண்டும், என்று வினவினார். அதற்கு அந்த சிறுவன் அப்பா வண்டியெல்லாம் வேண்டாம். உங்களுக்கு வீண் செலவு எதற்கு? நான் அதை எல்லாம் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டேன்.வாருங்கள் கிளம்பலாம். இந்நேரம் விறகு எல்லாம் நமது வீட்டில் வந்திருக்கும் என நம்பிகைப்பட சிறுவன் சொன்னான்.அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி எப்படி அனுப்பி வைத்தாய்? என கேட்டார் அப்பா.

சிறுவன் அதிரடியாக சொன்னான், அப்பா இந்த ஆறு நமது வீட்டுக்கு தானே செல்கின்றது என சொன்னீங்க! அதனால பொறுக்கி வைத்த எல்லா விறகுகளையும் அந்த ஆற்றில் தள்ளி விட்டுவிட்டேன். இந்த நேரம் அது நமது வீட்டில் வந்து சேர்ந்திருக்கும். இந்த  பதிலை கேட்டதும் அப்பா தனது முட்டாள் தனத்தை நினைத்து கலங்கி நின்றார்.

இறுதியாக சில ஆலோசனைகள்

அன்பான பெற்றோரே மேற்கண்ட நிகழ்வை சற்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். குழந்தைகள் உலகில் நடக்கும் செய்திகளை அறிந்துகொள்ள கேள்விகளை தொடுக்கும் போது தயவுசெய்து தவறான தகவல்களை தராதீர்கள்.

உங்களால் முடிந்த அளவுக்கு சரியான தகவல்களை மட்டுமே கொடுங்கள். இல்லையேல் இழப்புகள் உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தைகளுக்கும் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பொறுப்புள்ள பெற்றோராக வாழ்ந்து, எதிர்கால இந்தியா சிறந்து விளங்க உங்கள் பங்களிப்பை உறுதி செய்யுங்கள்.

எமது அடுத்த பதிவை படிக்க: காதலில் வெற்றி பெறுவது எப்படி

ADVERTISEMENT

Leave a Reply