உறவுகளைப் பேணுவோம்

உறவுகளைப்  பேணுவோம் என்ற கருப்பொருளைக் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாக மாறி விட்டது. உறவுகள் தரும் அனுபவங்கள் மிகவும் இனிமையானது. இந்த இனிய அனுபவம் நமக்கு கிடைத்தது போல்,  நமது வாரிசுகளுக்கு கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

உறவுகள் என்றால் என்ன?

ஒரு மனித உயிர் இந்த உலகில் வரும்  போதே தாயின் தொப்பிள் கொடி  உறவுடன் தான் மலர்கின்றது. உறவு என்பது இரு நபர்களுக்கு இடையில் உணரும் ஒருவிதமான   மனநிலை ஆகும். நாம் சந்திக்கும் மனிதர்களிடம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை பொறுத்து தான் நமது வாழ்க்கை அமைகின்றது.

அது நல்ல உறவாய் இருந்தால்  வாழ்கை மகிழ்ச்சியாக அமைகின்றது. அந்த உறவில் குறைபாடு உண்டெனில் வாழ்க்கை நரகமாக மாறுகின்றது. ஆக நமது வாழ்வு ஆரோக்கியமாக அமைய உறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

என்னதான் பணம் சம்பாதித்தாலும் நமக்கு பிறருடன் உறவு இல்லை அல்லது அது சரி இல்லை எனில் நாம் ஒரு ஏழைதான். உறவுகள் சூழ வாழ்வது தான் உண்மையான செல்வம். பணம் இருக்கும் ஒருவருக்கு கொடுமையான நோய் வந்தால் அந்த பணம் மட்டும் எழுந்து வந்து அவரை காப்பாற்றி விடுமா?

இயற்கனவே பணத்திமிரால் உறவுகளை விலக்கி வைத்திருப்பதால் எந்த மனிதரும் பக்கம் வரவே தயங்குவர். அப்போது தான் புரியும் உறவுகளின் அருமை.எனவே உறவு என்பதை  வெறும் வார்த்தைகளால் வடிக்க இயலாது.

ADVERTISEMENT

அது வாழ்கை அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும். ஒரு இழப்பை சந்தித்த ஒருவர், மனத்தால் சோர்ந்து வாழ்க்கையில் கீழ் நோக்கி செல்லும்போது, மறுபடியும் அவர் ஆரோக்கியமாக வாழ தேவை பணமோ அல்லது பொருளோ மட்டும் அல்ல.

அவை தேவை தான். இருந்தாலும் நான் உன்னுடன் இருக்கின்றேன். நீ பயப்பட வேண்டாம். போன்ற ஆறுதல் தரும் உறவுகளின் மொழிகள் தான் அவரை தேற்றும்.

பெற்றோர் பிள்ளைகள் உறவு

தந்தை என்பவர் ஒரு குடும்பத்தின் தலைவர் ஆவர். அவரது வாழ்வு பல தியாகங்களால் சூழ்ந்திருக்கும்.   ஒவ்வொரு தாயும் அந்த குடும்பத்தை திறம்பட நடத்திச் செல்லும் வீர மங்கைகள் . இந்த தாய், தந்தைக்கும் பிள்ளைகளுக்கும்  இடையில் காணப்படும் உறவு என்பது மிகவும் ஆழமானது.

இந்த உறவை  எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சூழ்நிலைகள் காரணமாக சில இடங்களில் இந்த உறவுகள் பாதிக்கப் பட்டுள்ளதும் மறுக்க இயலாத உண்மை. இந்த  உறவை தான் தொப்புள் கொடி உறவு என்று வழங்கப் படுகின்றது.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் காணப்படும் உறவு என்பது மிகவும் விசித்திரமானது. இதற்கு நான் ஒரு புத்தகத்தில் படித்த அதே நேரம் உண்மையில் நடந்த சம்பவத்தை இங்கே பதிவிட விரும்புகின்றேன்.

ADVERTISEMENT

அமெரிக்காவில் ஒரு ஏழை தாய் தனது மகனை வாகனத்தை பழுதுபார்க்கும் நிறுவனத்தில் வேலைக்கு அனுப்பி வைத்தாள். அன்று மதியம் அவனுக்கு உணவை எடுத்துக் கொண்டு நிறுவனத்தை நோக்கி நடந்தாள். அவள்  நிறுவனத்தின் அருகில் வந்தபோது கண்ட காட்சி அவளை பதற வைத்தது.

ஆம் தனது மகன் ஒரு பெரிய வாகனத்தின் அடியில் சென்று பழுதுபார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வாகனத்தின் சக்கரங்கள் உருளத் தொடங்கின. இன்னும் சில வினாடிகளில் தனது மகனின் மேல் வாகனம் ஏறிவிடும் என்பதை உணர்ந்தாள்.

பதறினாள் அந்த ஏழைத் தாய். தனது கையில் இருந்த பொட்டலத்தை உதறி தள்ளிவிட்டு ஓடோடிச் சென்று அந்த வாகனத்தை தனது சக்தியினை அனைத்தையும் பயன்படுத்தி தடுத்து நிறுத்தி மகனே வெளியே வா என கத்தினாள். மகனும் பாதுகாப்பாக வெளியே வந்தான். அனால் அந்த தாயோ பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்றோரின் உறவு தன்னலமற்றது

மேலே சொன்ன சம்பவம் எதை உணர்த்துகின்றது? பெற்றோர் பிள்ளைகளிடம் வைத்திருக்கும் உறவு என்பது கலப்படம் அற்றது. துமையானது. தன்னலமற்றது. தன்னை இழந்தாலும் பரவாயில்லை. தனது பிள்ளைகள் நலமுடன் வாழவேண்டும் என்கின்ற தியாக எண்ணம் கொண்டது.

பெற்றோர் பிள்ளைகள் உறவுக்கு  முன் எந்த உறவும்  ஈடாகாது. அவ்வளவு புனிதமானது. அதுபோல ஒரு தந்தை தனது மகனுடன் கொள்ளும் உறவில்  தோழமை உணர்வு மிகுந்திருக்கும். தனது தனது மகன் இந்த உலகில் வீரம் மிக்கவனாக வளரவேண்டும், சாதனைகள் புரிய வேண்டும், மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும்  தியாகங்கள் பல.

ADVERTISEMENT

தனது மகனின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளையும் கண்டு ரசிப்பவர் தான் தந்தை. ஒரு சில தந்தைகள் தனது மகனை நேசிப்பது நேரடியாக புரிந்து கொள்ள இயலாது. பார்ப்பதற்கு மிகவும் கடுமையான நபராக கட்சி அளிப்பர். ஆனால் உள்ளில் இருக்கும் அன்போ அபரிமிதமானது. இது போன்ற தந்தையிடம் பிள்ளைகள் மனம் திறந்து பேச இயலாது .

ஆனால் இன்னும் சில தந்தையர்கள் தனது மகனுடன் ஒரு நண்பனைப் போல் பழகுவர். மகன் தனது எல்லா சந்தேகங்களையும் தனது தந்தையுடன் கேட்டு தெரிந்து கொள்வர். இதுதான் உண்மையில் ஒரு ஆரோக்கியமான உறவு முறை.

அது போல் ஒரு தாய் தனது மகளுடன் கொண்டிருக்கும் உறவு என்பது மிகவும் அற்புதமானது எனலாம். இங்கே ஒரு வேறுபாடு என்னவென்றால் மேல் சொன்னது போல அன்பை மறை முகமாக வெளிப்படுத்தும் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதாவது கடுமையான முக பாவனைகளை கொண்ட தாய்மார்கள் குறைவு.

தாய், தனது மக்கள் வயதுக்கு வருவதற்கு முன் கொள்ளும் உறவு வித்தியாசம் ஆனது . பருவ வயதை அடைந்த பின் தொடரும் உறவு இன்னும் பலமானது. நல்ல உறவுடன் வாழும் தாய் மற்றும் மகளுக்கு இடையில் காணும் உறவு அதிகமும் தோழமையாகவே இருக்கும்.

எமது முந்தய பதிவை வாசிக்க: காதலில் வெற்றி பெறுவது எப்படி

ADVERTISEMENT

ஆசிரியர் மாணவர் உறவு

கருவறையில் வளரும்  குழந்தை பிறந்து சற்று வளரும்போது, முதல் முதல்லாய்  நாம் அனுப்பும் இடம் வகுப்பறை தான். இந்த வகுப்பறையில் வாழ்வை தொடரும் குழந்தை வளர்ந்து மாணவர் பருவத்தை அல்லது  இளம் பருவத்தை அடையும்போது, கல்வி வழங்கும் ஆசிரியருக்கும் அந்த மாணவருக்கும் இடையில் இருக்கும் உறவுதான் அவனை உச்சத்துக்கு கொண்டு செல்வதும் அல்லது சராசரி  வாழ்கை வாழ வைப்பதும்.

வாழ்வின் உயரத்தை அடைந்த பல சாதனையாளர்களும் தனது ஆசிரியர்தான் தனது இந்த உயர்ந்த  நிலைக்கு காரணம் என சான்று பகிர்கின்றார்கள்.அதே நேரம் கல்வி பயின்றும் வாழ்வில் சராசரிகளாகவும்  மற்றும் வறுமையில் உளல்வோராகவும் பலர் வாழ்கின்றனர்.

தனது இந்த நிலைக்கு தனது ஆசிரியர்தான் காரணம் என உறுதி பட கூறும் பலரை நான் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், நான் படிப்பில் சராசரி அல்லது மோசம்தான். ஆனால் எனது ஆசிரியர் அவ்வப்போது நீ எதற்கும் லாயக்கு அற்றவன்.

நீ மாடு மேய்க்க கூட தகுதி இல்லாதவன் போன்ற வார்த்தைகளால் திட்டி எனது தன்னம்பிக்கை இழக்க வைத்ததால், என்னால் அடுத்த நிலைகளை கடந்துச் செல்ல இயலவில்லை. பல முயற்சிகளை எடுத்தும் தடுமாற்றம்தான்.

அதனால் தான்  நான் இந்த அவலத்துக்கு உள்ளாகி இருக்கின்றேன். போன்ற புலம்பல்களுக்கு பஞ்சமில்லை.  இத்தகைய  மனிதநேயம் அற்ற உறவை மதிக்காத செயல்களால் பல பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன.

ADVERTISEMENT

குடும்ப உறவு

அடுத்ததாக ஒருவருடைய வாழ்வில் எல்லா வசந்தங்களும் நிகழவேண்டும் எனில் குடும்பத்தில் உறவு நன்றாக இருக்க வேண்டும். தாய், தந்தை, சகோதரன்,சகோதரி, மாமன், மச்சான்,  மற்றும் முதியவர்கள்  போன்று  யார் உங்கள் குடும்பத்தில் இருந்தாலும், அவர்கள் வெவ்வேறு  இடங்களில் வசித்தாலும் உறவு என்பது உறுதியாக இருந்தால் எந்த சக்தியினாலும் உங்கள் குடும்பத்தை அசைத்துக் கூட பார்க்க இயலாது.

எதிரில் வரும் ஒரு பலம் வாய்ந்த  நாயை கல்லால் அடித்தால் அது ஒரு சில முறை குரைத்துவிட்டு பயந்து ஓடிவிடும். அதே நேரம் தேனீ  பலகீனமானது. அதன் கூடு அருகில் சென்று கல்லால் எறிந்து தாக்கிப் பாருங்கள். அனைத்து  தேனீக்களும் ஒன்றாய் திரண்டு வந்து நமது உடலை பதம் பார்த்து விடுமல்லவா?

இது தான் உறவுக்கு ஒரு இலக்கணம் எனலாம். நமது குடும்பத்திலும் ஒருவரோடு ஒருவர் உறவில் உறுதியாய் இருந்தால் வெளியில் இருக்கும் எந்த எதிரியும் நம்மை சீண்ட பயப்படுவான். உதாரணமாக நாம் இவனை சீண்டினால் அவனது குடும்பமே கலைந்து வந்து நம்மை உண்டு இல்லை என ஆக்கி விடுவர்கள் என்ற பய உணர்வு எதிரிக்கு இருக்கும்.

உறவுக்கு அவ்வளவு பலம் உண்டு.ஆக, ஒருவருக்கு குடும்ப உறுப்பினர்களுடன் சரியான உறவு இல்லை எனில் அவர் இந்த சமூகத்தின் அநேக தொந்தரவுக்கு உள்ளாவார் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடம் இல்லை. உறவுகள் சிதைவதற்கு  ஒருவிதமான இறுக்கமான மனநிலை தான் காரணம்.

அது மட்டும் அல்ல, குடும்பங்களுக்குள் நிகழும் திருமணம் போன்ற பொது நிகழ்வுகளுக்கு  செல்லும்போது, மற்றவர்கள் கூடி ஆடி குதூகலிக்கும் போது இவர்கள் ஓரமாய் நின்று வேடிக்கை தான் பார்க்க முடியும். சொல்லப் போனால் அந்த கூட்டத்தில் இருந்து இவர்களை விலக்கி வைப்பர்.

ADVERTISEMENT

இதனால் இது போன்ற நபர்கள் மனதளவில் பாதிக்கப் பட்டு  இறுதி நாட்களில் மன  நோயாளியாக மாற அனேக வாய்ப்புகள் உண்டு. எனவே நட்புக்களே, உறவுகளை சிதைக்கும் காரணிகளை கண்டறிந்து அவற்றை ஓரம்கட்டி வைத்துவிட்டு உறவுகளுக்கு உயிர்கொடுக்க முன்வருவோம்.

உண்மையான உறவில் கிடைக்கும் ஆனந்தம் அற்புதமானது.  அதை சொல்லில் வடிக்க முடியாது. வாழ்ந்தால் தான் அதன் ஆழத்தை உணர முடியும். பணத்தை வைத்தோ, பொருளை வைத்தோ உண்மையான உறவை அளவிட முடியாது.

கணவன் மனைவி உறவு

கணவன், மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது. இந்த உறவிலும் இன்று பல்வேறு சிக்கல்கள் காணப் படுகின்றன. காதலித்து திருமணம் செய்தவர்களும் சரி, பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமும் சரி, இன்று அனேக தம்பதிகள் நீதி மன்ற வாசல்களில் விவாகரத்து கோரி காத்துக் கிடக்கின்றனர்.

இந்த அவல நிலைகள் அதிகம் அரங்கேற என்ன காரணம்? திருமண உறவை சரியாக புரிந்து கொள்ளாமை தான். திருமணம் என்ற உறவில் இணைக்கப்படும் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவர்  தன்னை மற்றவருக்காக அர்பணித்தால், அந்த புரிதல் உருவானால் கணவன் மனைவி உறவு சிறக்கும். கணவன் நினைக்கின்றான், மனைவி எனக்கு உரியவள்.

அதனால் எனது சொற்படியே தான் அவள் நடக்க வேண்டும். அவள் எதை செய்தாலும் என்னை கேட்டுத்தான் செய்ய வேண்டும் என நினைக்கின்றான். மனைவி நினைக்கின்றாள், எனது கணவர் என்னைச் சுற்றியே வரவேண்டும். அவர் தனது அம்மாவிடமோ, அப்பாவிடமோ, உடன் பிறப்புகளிடமோ அதிகமாக பேசக்கூடாது.

ADVERTISEMENT

எதுவும் என்னை கேட்காமல் வாங்கி தரக்கூடாது. தன்னை மட்டும் நேசித்து சுற்றிச்சுற்றி வரவேண்டும் போன்ற விருப்பங்களை தனது கணவனிடம் திணிக்கின்றாள். இந்த சூழ்நிலைகளில் தான் உறவு சிக்கல்கள் ஆரம்பம் ஆகின்றன.

இதை தவிர்க்க வேண்டுமெனில்  கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தால் போதும். சுதந்திரமாக செயல்பட்டால் இருவருக்குள்ளும் ஒரு நம்பிக்கை பிறக்கும். உறவுகள் சுமையாகாமல் சுகமான அனுபவமாக மாறும்.

எமது அடுத்த பதிவை படிக்க: கருவிலிருந்து கல்லறை வரை

One comment

Leave a Reply