காதல் என்ற வார்த்தையினை கேட்டவுடன் இளவல்கள் பலரின் மனதிலும் ஆனந்த ராகம் ஒலிக்கும். ஆனால் பலருக்கும் காதலில் வெற்றி பெறுவது எப்படி ? என்பது புரியாத புதிர். காரணம், காதலுக்கும் மற்ற உணர்வுகளுக்கும் வேறுபாடே தெரியவில்லை. வாருங்கள் காதல் செய்வோம்.
காதலில் ஏற்பட்டி ருக்கும் குழப்பம்
காதல். ஆம் இது எல்லா ஜீவ ராசிகளுக்கும் இருக்கும் ஒரு பொதுவான உணர்வு. இதில் மனித இனம் என சொல்லும்போது இந்த காதல் உணர்வு இன்னும் புனிதப்படுகின்றது. ஒரு பாலினர் எதிர் பாலினரை ஈர்த்துக் கொள்ளும் ஒரு அற்புதமான உணர்வு அல்லது மனநிலை தான் காதல்.
கோபம்,வெறுப்பு,பகை,பாசம்,காமம் போன்று ஒரு மகத்தான உணர்வுதான் காதல். இந்த காதலில் இன்று பல்வேறு விதமான குழப்பங்கள் காணப்படுகின்றன .எப்படி இந்த கோபம் போன்ற உணர்வுகள் மனித வாழ்வில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றதோ, பல நேரங்களில் இதைவிட பெரிய பாதிப்புகளை இந்த காதல் உணர்வு ஏற்படுத்தி விடுகின்றது.
இதற்கு மிக முக்கியமான காரணம், காதல் என்பதை குறித்த ஒரு தெளிவு இல்லாதது தான். இன்றைய காலகட்டத்தில் வெளிவருகின்ற திரைப்படங்கள், ஆபாச காணொளிகள் போன்றவை உண்மை காதலை, திரித்து மனித மனங்களை குழப்பி விடுகின்றன.
வணிக நோக்கத்துக்காக கொண்டு வரப்படும் இப்படிப்பட்ட தவறான வழிகாட்டுதல்கள், இன்றைய மாணவர் சமுதாயத்தையும், இளைஞர் சமுதாயத்தையும், திருமணமான பல ஆண்களையும், ஏன் அனேக முதியவர்களையும் கூட நெறி தவற செய்து, அவர்கள் வாழ்வை சீரழித்து விடுகின்றது.
இதை இன்றைய ஊடக செய்திகள் தினமும் உறுதிப்படுத்தும் வேலையினை செய்து கொண்டிருப்பதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அல்லது நாம் வாழும் சமூகத்திலும் இத்தகைய நிகழ்வுகளை அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
காதல் என்றால் என்ன?
காதல் என்பது மிகவும் புனிதமான ஓர் உணர்வு. இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாவது. இதை பாலியல் ஈர்ப்பு எனவும் சொல்லலாம். இரு பாலினங்கள் இணைந்து வாழ வேண்டும் என்ற ஒரு உந்துதல் உணர்வு தான் காதல்.
காதல் என்ற உணர்வுக்கு மயங்காதவர் யாரும் இல்லை எனலாம். அதாவது காதலை விரும்பாதவர் யாரும் இல்லை எனலாம். மன நிறைவை தரும் அன்பு,பாசம்,நேசம் போன்ற உணர்வுகளை விட சற்று வித்தியாமான உணர்வு தான் இந்த காதல் உணர்வு.
அன்றாடம் நாம் கடந்துச் செல்லும் பாதையில் ஒரு ஆண் என்றால் பல பெண்களையும், பெண் என்றால் பல ஆண்களையும் கடந்து செல்கின்றோம். இதில் பலரும் நம்மை சற்று திரும்பி பார்கவைத்து விடுவார்கள்.
அவர்கள் சில நொடிகளில் நமது மனதை விட்டு மறைந்து விடுகின்றார்கள். ஒரு சிலர் மட்டுமே அன்றைய நாள் சிந்தனையில் நின்று செல்வர். இதற்கு பலரும் புரிந்து வைத்திருக்கும் அர்த்தம் தான் காதல். இது காதலா ? இல்லை இல்லவே இல்லை. இதற்கு பெயர்தான் கவர்ச்சி.
கவர்ச்சிக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு நமது வாழ்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலே சொன்னது போல கவற்சியினை அல்லது காமத்தினை தான் காதல் என கற்பிக்கின்றது இன்றய திரை படங்களும் அல்லது பல காணொளிகளும்.
இந்த குழப்பத்தில் இருந்து இந்த இளம் சமூகம் விடுபட தெளிவான பாலியல் கல்விகளை வயதுக்கு ஏற்றது போல பள்ளி மற்றும் கல்லுரிகளில் வழங்கினால் நாளைய சமூகத்தை அழிவில் இருந்தும், பல மன பதிப்புகளில் இருந்தும் விடுவிக்க முடியும்.
ஒரு தலை காதலால் விபரீதம்
காதல் உணர்வு மிகவும் உன்னதமானது. ஆனால் ஒருதலை காதல் என்பது மிகவும் ஆபத்தானது. ஒரு தலை காதல் என்றால் என்பது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் விரும்பும் நபர் தன்னை விரும்புவதாய் நினைத்துக் கொண்டு கற்பனை உலகில் வாழ்வதாகும்.
இந்த பிரச்சனை இன்று அதிகரித்து காணப் படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் தொடர்புடைய இருவரும் மனம் திறந்து பேசாதது தான். இருப்பினும் வயது கோளாறால் ஏற்படும் இனக்கவர்ச்சியும் இந்த ஒரு தலை காதலுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது.
மனித வாழ்வில் உறவு என்பது மிகவும் முக்கியமான ஓன்று. அந்த உறவுகள் பல விதம். அதில் ஓன்று கணவன் மனைவி உறவு. இந்த உறவில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பலரும் காதல் என்ற உணர்வால் உந்தி தள்ளப்ப டுகின்றனர்.
அதிகமும் இன கவர்ச்சியால் வருகின்ற காதல்தான் ஒரு தலை காதலாக மாறுகின்றது. ஒரு ஆண் தன்னுடன் பழகும் பெண்ணை, அல்லது ஒரு பெண் தன்னுடன் பழகும் ஆணை தனது வாழ்கை துணை இது தான் என மனதில் நினைத்து ஆனந்த வாழ்கை வழக்கின்றனர்.
ஆனால் எதிர்பாலினரிடம் இருந்தது தூய நட்பாகவோ அல்லது சகோதர உணர்வாகவோ கூட இருந்திருக்கலாம். காலங்கள் செல்லும்போது, தான் அந்த நபரால் தான் விரும்பப் படவில்லை என்பதை அறிந்து கொள்ளும்போது தான் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.
தொடர்புடைய சில நபர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். பல நபர்கள் ஏமாற்ற உணர்வுடன், வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் முடங்கி விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் மன நல பாதிப்புகளுக்கு உள்ளாகி தற்கொலை கூட செய்து கொள்கின்றனர். ஆம் ஒரு தலை காதல் மிகவும் விபரீதமானது.
எமது முந்தய பதிவை வாசிக்க:பிள்ளைகள் வளர்ப்பும் பெற்றோரின் பொறுப்பும்
ஒரு தலை காதலின் அடையாளங்கள்
இந்த பதிவை வாசிக்கும் நீங்கள் மாணவர் பருவமாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் அதிகமாக இன கவர்ச்சி காரணமாக ஒரு தலை காதலால் பாதிக்கப்படுவது இந்த பருவத்தில் தான்.
முதலில் உங்களுக்கு இது காதலிக்க வேண்டிய வயது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் இது போன்ற ஈர்ப்பு வருவதில் தவறில்லை. இந்த ஈர்ப்பு வாந்தால் தான் நாம் மனித பிறவி என்று அர்த்தம். அனால் இந்த கவர்ச்சி உணர்வுக்கு அடிமை ஆகாமல் ரசித்து செல்ல பழகினால் எந்த தவறும் நிகழாது.
உங்களது படிப்பு, சாதனை, எதிர்கால இலக்கு போன்றவற்றில் கவனம் அதிகமாக செல்லுமானால் இது போன்ற இன கவர்ச்சியில் விழமாட்டீர்கள். அடுத்த வீட்டில் வளர்க்கும் செடியில் அழகான பூக்கள் இருப்பதை கண்டு அதை பறித்துக்கொள்ள வேண்டும் என நினைப்பதை விட, அதை அப்படியே விட்டுவிட்டு அதன் அழகை ரசித்து செல்வது தான் உத்தமம்.
ஆம் மாணவர் பருவத்தில் வருவது உண்மை காதல் அல்ல. அது வெறும் கவர்ச்சியே. எனவே இதை சரியாக புரிந்து கொண்டு செயல் பட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஒருவேளை நீங்கள் இனக் கவற்சியில் விழாமல் உறுதியான மன நிலையில் இருந்தால், எதிர் பாலினர் உங்கள் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு ஒரு தலை காதலால் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை, சில அடையாளங்களை கொண்டு நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
அறிந்து கொண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும். உங்களை ஒரு நபர் ஒருதலையாக காதலித்தால், முதலில் உங்கள் விருப்பம் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தது போல செயல்படுவார். உதாரணமாக உங்களது கட்டளைகளுக்கு காத்து கிடப்பர். உங்கள் விருப்பத்துக்கு எதிராக செயல்பட மாட்டார். எதாவது செயல்களில் ஈடுபடவேண்டும் என நினைத்தால் உங்களிடம் இதை செய்யலாமா? என அனுமதி கோருவர்.
நீங்கள் மறுத்தால் அதை ஏற்றுக் கொள்வர். உங்கள் அழகை வருணிப்பர். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நேசிப்பதாய் கூறுவர். இதையும் தாண்டி உங்கள் உடலை தொட, சீண்ட, அடைய முயற்சிப்பர். இன்னும் இது போன்ற அடையாளங்களை அவர்களிடம் கண்டால் அவர்களுக்கு உங்கள் நட்பை புரிய வைத்து ஆரம்பத்திலே விலகி செல்வது இருவருக்கும் நல்லது.
காதலில் தோல்வி ஏன்?
உண்மையாகவே இருவரும் உண்மையாக காதல் செய்திருந்தால், ஏன் தோல்விகளை சந்திக்க வேண்டும்? மனதின் புரிதலால் வரும் காதலை விட, அழகில் மயங்கி,காமத்தில் தழைத்து, கவர்ச்சியின் உச்சகட்ட பிடியில் சிக்கி வரும் போலிக் காதல்கள் தான் அதிகம்.
மாணவர் பருவத்தை கடந்த பிறகு, தனக்கென ஒரு நிலையான வருமானத்தை உருவாக்கி வைத்துவிட்டு பின்னர், மனதுக்கு பிடித்த ஒரு வாழ்கை துணையை தேடுவதில் தவறில்லை. அப்போதும் கவர்ச்சிக்கும், அழகுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் பிரச்சனை தான்.
பொதுவாக கவர்ச்சி வலையில் சிக்கிக்கொண்டு அதை காதல் என நினைத்து வாழ்வில் கணவன் மனைவியாக இணையும்போது அங்கே தான் வெகு விரைவில் பிரிதல்கள் நடக்கின்றன. இன்று நீதிமன்ற வாசலில் விவகாரத்து கோரி நிற்கும் கணவன் மனைவிகள் ஏராளம்.
ஏன் இந்த நிலை? உண்மை காதலை புரிந்து கொள்ளாமல் கவர்ச்சி என்ற மாயைக்குள் விழுந்ததால் தான். இதற்கெல்லாம் முக்கிய காரணங்கள் இன்று மலிந்து காணப்படும், அதே நேரம் வணிக நோக்கோடு வரும் திரைப்படங்களும்,சமூக ஊடகங்களும் தான்.
சமூகத்தில் மிகப்பெரிய சீரழிவுகளை உருவாக்கி அதில் நிழல் காயும் அதாவது பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் நிறைந்த உலகம் இது. மனிதனின் பலவீனங்களை பயன்படுத்தி சக மனிதனே பணம் சம்பாதிக்கும் சுயநலம் மிகுந்த மனிதர்கள் இன்று நிரம்பி வழியும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும். பல திரைப் படங்களும் கவற்சியினையும், காமத்தையும் தான் காதலாக காட்டுகின்றார்கள். இதை இன்றைய இளவல்கள் சமுதாயம் நம்பி மோசம் போகின்றார்கள்.
உண்மை காதல் என்பது என்ன?
நீங்கள் காதல் வயப்படிருந்தால் அல்லது கணவன் மனைவியாக இருந்தால் உங்கள் காதல் நேர்மையானதா, உண்மை தன்மை உடையாதா என்பதை உங்களது அல்லது உங்களது சில நடவடிக்கைகள் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக நீங்கள் காதலர்கள் என்றால் அல்லது கணவன் மனைவி என்றாலும் உங்கள் துணை உங்களது கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும் என நினைக்கலாம். உங்கள் விருப்பப்படிதான் இருக்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்க வாய்ப்பு அதிகம்.
உங்கள் துணை ஆண் எனில் பிற பெண்களிடமும், பெண் எனில் பிற ஆண்களிடமும் பேசுவதை உங்களால் பொறுத்துக் கொள்ள இயலாது. உங்கள் சொல்லுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற நினைப்பு இருக்கலாம்.
உங்கள் துணை மனைவி எனில் அவர் வேலைக்கு செல்வதை தடை செய்யாலாம். மொத்தத்தில் உங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பலாம். இது போன்ற அடையாளங்கள் உங்களிடம் உண்டெனில் உங்களிடம் இருப்பது உண்மை காதல் அல்ல.
உண்மை காதல் என்பது அழகை மையமாக வைத்து வருவதில்லை. அல்லது வசதி வாய்ப்புகளை வைத்தும் வருவதில்லை. அவ்வாறு ஒரு காதல் வருமானால் அதுவும் ஒரு இனக்கவர்ச்சியே. உண்மை காதல் என்பது மனதுக்கும், மனதுக்கும் இடையில் காணப்படும் ஒரு உன்னத உணர்வாகும்.
சாதி, மதம், மொழி, நிறம், இனம், நாடு போன்ற அனைத்தையும் கடந்தது தான் உண்மையான காதல். உண்மை காதல் சுயநலம் பாராது. நிபந்தனைகள் வைக்காது. எதிர்பார்ப்புகள் இருக்காது. விட்டுக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது.
இறுதியாக
உங்கள் துணை மேல் உங்களுக்கு இருக்கும் காதல் உண்மையானது என்றால் அவர்களை முதலில் நம்புங்கள். அவர்கள் விருப்பங்களுக்கு தடையாக இருக்காமல், ஆதரவாக இருங்கள். தவறு செய்யும்போது கோபப்பட்டு மனதை காயப் படுத்தாமல் தவறுடன் ஏற்றுக் கொள்ள பழகுங்கள். விட்டுக் கொடுங்கள்.
தட்டிக் கொடுங்கள். விருப்பமில்லாத செயலை செய்ய வற்புறுத்தாதீர்கள். தவறே இருந்தாலும் பிறர் முன் ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள்.உங்கள் வாழ்க்கை பூபோல மணக்கும். வாழ்க வளமுடன்.
எமது அடுத்த பதிவை படிக்க: உறவுகளைப் பேணுவோம்
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.