அபார வெற்றிபெற இலக்கை உருவாக்குங்கள்

வாழ்கை என்பது ஓர் நெடும் பயணம். இதில் எல்லோரும் மகிழ்ச்சியாய் வாழவேண்டும் என்பதற்காகவே ஓடுகின்றனர். எல்லோரும் வெற்றி பெற்றார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. ஏன் வெற்றி பெறவில்லை என்றால் தனக்கென ஓர் இலக்கை நர்ணயிக்காமல், ஒழுங்கற்ற ஓட்டம் ஓடுவதால்தான். எனவே, அபார வெற்றிபெற இலக்கு என்றால் என்ன? அதை எப்படி அமைத்து வெற்றி என்ற இமயத்தை தொடுவது போன்ற, ஆரோக்கியம்மான   செயல்முறை  விளக்கங்களை இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

இலக்கு என்றால் என்ன?

முதலில், இலக்கு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை காண்போம். நீங்கள் ஓட்ட பந்தயம் ஒன்றில் கலந்து கொள்கின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். போட்டி தொடங்கிய உடன் ஓடத்தொடங்குவீர்கள் அல்லவா. இறுதியில் எங்கே சென்று நிற்பீர்கள்? அதற்கென நிர்ணயிக்கப் பட்ட இடத்தில் தானே  சென்று நிற்பீர்கள்.

ஓடத்தொடங்கிய உடன் நமது இலக்கு அந்த கோடுதானே ! நான் எப்படியாவது அந்த கோட்டை முதலில் சென்று தொடவேண்டும் என நினைத்து ஓடுகின்றவர்கள் எளிதில் அந்த இடத்தை அடைந்து, வெற்றி என்ற இலக்கை அடைகின்றனர். உடன் ஒடுகின்றவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் விரைவில் தோற்று விடுகிறார்கள்.

இலக்கில்லா ஓட்டம்

கொஞ்சம் வாழ்க்கையையும்  திருப்பிப் பாருங்கள், வாழ்கை என்ற ஓட்டத்தில் ஜெயிக்க எங்கே கோடு போட்டிருக்கிறீர்கள்? சிந்தித்திருக்கின்றீர்களா ? பலரும் ஒரு இலக்குக்கூட இல்லாமல் தானே ஓடிக்கொண்டிருக்கிறோம்! பிறகு எப்படி வெற்றி என்ற இமயத்தை எட்டிப்பிடிக்க இயலும்?

ADVERTISEMENT

ஒருவேளை கோடு  போட்டிருந்தால் கூட ஏன் வெற்றி பெறவில்லை? மேற்சொன்னது போல நான் வெற்றி பெறவேண்டும்  என நினைப்பவர்களை விட, அவனை விட நான் உயரவேண்டும் என நினைப்பவர்கள் தான் அதிகம். அதனால் தான் வெற்றி மிகவும் தள்ளிப் போகின்றது.  இந்த வெற்றியினை அடைவதற்கு மிக  முக்கியமான படி இலக்கு.

இலக்கு என்றால் என்ன என்பதற்கு இன்னும் ஒரு  தெளிவான உதாரணம். டெல்லியில் இருக்கும் உங்களுடைய உறவினர் அல்லது  நண்பர் ஒருவர்  தனது இல்லத்தில் நடக்கும் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  உங்களை அழைகின்றார். நிகழ்ச்சிக்கு சரியாக 30 நாட்கள் இருக்கின்றது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு  இடத்தில் அமர்ந்து சிந்திப்பீர்கள். முதல் சிந்தனை,  நிகழ்ச்சிக்கு போகணுமா? போகவேண்டாமா?

இதில் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என முடிவெடுத்துவிட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். அடுத்த சிந்தனை  என்னவாக இருக்கும்?  எப்படி நிகழ்ச்சிக்கு செல்வது?  தொடர் வண்டியிலா? அல்லது விமானத்திலா? சூழ்நிலைக்கு ஏற்றபடி, விமானத்தில் என தீர்மானித்தீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து என்ன வேலை நடக்கும்? அதற்கான நேரத்தை ஒதுக்கி, போக்குவரத்துக்கு பதிவு செய்ய புறப்படுவோம்.

திட்டமிடல்

இங்கே நன்றாக கவனியுங்கள், பதிவு செய்ய விண்ணப்பத்தை நிரப்பும் போது எங்கே செல்லவேண்டும் என்ற இடத்தில் என்ன நிரப்புவீர்கள்? மும்பை என்றா? அல்லது கொல்கத்தா என்றா? நிச்சயமாக  அந்த இடத்தில்  டெல்லி என்றே நிரப்புவீர்கள். அடுத்து என்ன செய்வீர்கள்? போகவேண்டிய நாள், நேரம், போன்றவற்றை தெளிவாக நிரப்புவீர்கள்.

இந்த வேலைகள் முடிந்த பிறகு  எந்த வாகனத்தில் விமானநிலையம் செல்லவேண்டும், என்னென்ன எடுத்து செல்லவேண்டும், டெல்லி விமானநிலையம் இறங்கியபின் எப்படி நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்லவேண்டும் என்பதுவரை திட்டமிடமாட்டீர்களா? நாள் வந்ததும் மழையானாலும், வெயிலானாலும் அல்லது தடை எந்த வடிவில் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி விமானநிலையம் செல்வீர்கள் தானே!

ADVERTISEMENT

சென்று சரியான விமானத்தில் அமர்ந்து பணயத்தை தொடங்கி நினைத்த இடத்தில் சென்று சேர்வீர்கள் அல்லவா ! இதுபோல்தான் நமது வெற்றிக்கான இலக்கை நிர்ணயித்து பயணிக்க வேண்டும். ஓரிரு நாட்கள்  டெல்லி பணயத்திற்கே எவ்வளவு சிந்தனைகள்! திட்டமிடல்கள்! தயாரிப்புகள்!  தியாகங்கள்! இதே  கவனத்தை வாழ்க்கையில் வெற்றி என்ற டெல்லிக்குச் செல்ல இலக்கை நிர்ணயித்து பயணித்தால் எப்படி இருக்கும்?

புதியதோர் இலக்கை உருவாக்குங்கள்

இப்படி    வாழ்க்கையில்  எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் தான் பெரும்பான்மையானோர்  பயணித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் இதுவரை எப்படி இருந்தாலும் பரவாயில்லை.  இன்று முதல் ஒரு இலக்கையாவது உருவாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களது தொழில் வெற்றியாக இருக்கலாம், கோடீஸ்வர வாழ்க்கையாக இருக்கலாம், அல்லது கடன் இல்லா வாழ்க்கையாக இருக்கலாம்,  இடம் அல்லது கார் வாங்குவதாக கூட இருக்கலாம்.

எது  வேண்டுமானாலும் இருக்கலாம். முதலில் ஒரு இலக்கை உருவாக்குங்கள். அதை தெளிவாக உருவாக்குங்கள். டெல்லி செல்ல என்னென்ன முன் தயாரிப்புகள்   மேற்கொண்டீர்களோ, அதுபோல இந்த இலக்குக்கும் தேவையான முன் தயாரிப்புகளை செய்யுங்கள்.

எமது முந்தய பதிவை வாசிக்க:வார்த்தையின் சக்தி வாழ்க்கையை மாற்றிவிடும்

ADVERTISEMENT

வெற்றி அல்லது தோல்விக்கான காரணம்

உதாரணமாக ஒருவர்  நெடுநாளாக  ஒரு தொழிலை செய்து வருகின்றார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு வருமானம் சரியாக அமையவில்லை. ஆனால் வேறொருவர் இதே தொழிலை சமீப காலத்தில் தொடங்கி ஓரிரு வருடங்களில் பல கோடிகளை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது முதலாமவர் என்ன யோசிப்பார்? தனக்கு நேரம் சரியில்லை போன்ற  பல காரணங்களை சொல்லக்கூடும். உண்மை அதுவா?

இல்லை. புதிதாய் வணிகத்தை தொடங்கிய நபர் தற்கால சூழ்நிலைகளை சரியாக புரிந்துகொண்டு, சரியாக திட்டமிட்டு, தொடவேண்டிய இலக்கை மனக்கண்முன் கொண்டு, அதற்கான  நாளை நிர்ணயித்து சரியான பாதையில் நம்பிக்கையுடன் பயணத்தை தொடங்கி இருப்பார். வெற்றி என்ற இமயத்தை எட்டி பிடித்துவிட்டார்.

ஆனால் முதலாமவரோ, பணமில்லா பரிவர்த்தனை, இணையதள சேவை போன்ற  புதிய தொழில் நுட்பங்களை சரியாக தெரிந்து கொள்ளாமல் பழைய அனுபவத்தை மட்டுமே வைத்து எந்தவித இலக்கும் இல்லாமல்  தினமும்  எந்திரமாக உழைத்துக் கொண்டே பயணம் செய்கின்றார்.

இதுதான் இரு நபர்களுக்கும் உள்ள வேறுபாடு. அதாவது ஒன்றை மணிநேரத்தில்  விமானம் வழியாக டெல்லி செல்ல வாய்ப்புகள் இருந்தும்,  காளை வண்டியில் ஏறி  மாதக்கணக்கில் பயணம் செய்வது போன்றது. இப்போது எவ்வாறு இலக்கை நிர்ணயித்து நமது வெற்றிப்பயணத்தை தொடரவேண்டும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன் .

ADVERTISEMENT

இலக்கை  நோக்கி நகரும்போது வரும் தடைகள் 

சரி, ஒருவழியாக இலக்கை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்பதை நாம் சரியாக புரிந்து கொண்டோம். இந்த இலக்கை அடைய சரியான பாதையில் நமது பயணத்தை தொடங்கும் போது பல்வேறு விதமான தடைகள் நம்மை எதிர்கொள்ளலாம். தடைகள் வரும்போது தளர்ந்து போகாமல் மிகவும் துணிவுடன் பயணத்தை மேற்கொண்டால் தான் வெற்றி என்ற இமயத்தை தொட இயலும். தடைகள் எந்த வடிவிலும் வரலாம்.

உதாரணமாக, நீங்கள் ஒரு விவசாயி என வைத்துக் கொள்வோம். நீங்கள் அதில் காய்கறிகளை பயிர் செய்துள்ளீர்கள். இங்கே உங்களுக்கு பல சவால்கள் வரும். மழை பொய்க்கலாம். வெள்ளம் சூழ்ந்து பயிர்கள் அழியலாம், அல்லது பூச்சிகளின் தொல்லையால் விளைச்சல் பாதிக்கலாம். இதையும் கடந்து விளைவிக்கும் பொருட்கள் சந்தையில் நல்ல விலை கிடைக்காமல் போகலாம். இதுபோன்ற கடுமையான சவால்கள் நம்மை எதிர்கொள்ளலாம். இதை எலாம் கடந்து எப்படி நாம் வெற்றிபெற இயலும் என நீங்கள் கேட்கலாம்.

சவால் என்ற வாசல்

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், ”சவால்” என்ற வார்த்தைக்குள் ”வாசல்” என்ற வார்த்தை ஒளிந்து கொண்டுள்ளது. ஆம் பூட்டு என்ற ”சவாலை” தயாரிக்கும் ஒரு நபர், சாவி என்கின்ற ”வாசலையும்” இணைத்தே தயாரிக்கிறார். ஆம் நம்மை படைத்த இறைவன் அல்லது இயற்கை நமக்கு ஒரு நெருக்கடியை தரும்போது ஒரு தீர்வையும் வைத்துதான் தருகின்றது. சரி இதில் என்ன தீர்வு இருக்கிறது என நீங்கள் கேட்பது புரிகின்றது.

இவ்வாறு நெருக்கடி வரும்போது நம்பிக்கை என்ற ஆயுதத்தைமட்டும்  கையில் எடுங்கள். சூழ்நிலை என்றும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒரு முறை, இரண்டு, மூன்று முறைகளோ அல்லது பல முறைகள் கூட நீங்கள் சாதிக்க முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் இழந்த அனைத்தையும் ஒரு நாள் அந்த இயற்கை வட்டியும், முதலுமாக திரும்ப தந்துவிடும். நீங்கள் செய்ய வேண்டியது முயற்சி ஓன்று மட்டுமே. இதை ஒரு கதை வழியாக புரிய வைக்கலாம்  என எண்ணுகிறேன்.

ADVERTISEMENT

முயற்சி என்றும் வெல்லும்

ஒரு கிராமத்திற்கு  முனிவர் ஒருவர் வந்திருந்தார். அங்கே இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரை ஊரில் உள்ள எவரும் கண்டு கொள்ளவில்லை. கோபம் கொண்ட முனிவர், இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும். என சாபமிட்டார்.

இந்த சாபம் குறித்து கேள்விப்பட்ட மக்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் அவரை சந்தித்து அவரது காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். எக்காரணம் கொண்டும் சாபத்தை திரும்பப்பெற முடியாது என முனிவர் கூறிவிட்டார். மேலிருந்து இதை கவனித்த பரந்தாமன் தனது சங்கினை தலைக்கு அடியில் வைத்துவிட்டு படுத்துவிட்டார்.

(பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை) இன்னும் 50 வருடங்கள் மழை பொழிய வாய்ப்பு இல்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்துவிட்டார். இந்த சூழ்நிலையிலும் ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்கு சென்று வந்து கொண்டு இருந்தான்.

அவனை அந்த ஊரே பரிதாபமாய் பார்த்தது. மழையே பெய்யாதாம். இவன் வயலுக்கு சென்று என்ன செய்யப்  போகின்றான்?  என ஏளனமாக பார்த்தது சமூகம். பொறுக்க முடியாத மக்கள் அவனிடம், நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா ? என்று அவனிடம் நேரடியாகவே கேட்டனர்.

ADVERTISEMENT

உச்சக்கட்ட நம்பிக்கை

அதற்கு அவன் கொடுத்த பதில்தான் உச்சக்கட்ட நம்பிக்கை. இன்னும் 50 வருடங்கள் மழை பொழிய வாய்ப்பு இல்லை என எனக்கும் தெரியும். உங்களை போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடம் கழிந்து உழுவது எப்படி என்பது மறந்து போகுமே.  அதனால் தான் தினமும் ஒரு முறையாவது  உழுது கொண்டு இருக்கிறேன் என்றான்.

இது வனத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் ரொம்பவே யோசிக்க ஆரம்பித்தார்…. ”50 வருஷம் சங்கு ஊதாமல் இருந்தால் எப்படி ஊதுவது என்பதே  மறந்து போயிருமே”  என நினைத்து சங்கை எடுத்து ஊதி பார்க்க ஆரம்பித்தார். இடி இடித்தது! மழை பொழிய ஆரம்பித்தது ! ஆம் அந்த ஒற்றை விவசாயியின் உறுதியான நம்பிக்கை ஜெயித்துவிட்டது .

இலக்கை முன் வைத்து ஓடுவோம்

நண்பர்களே, இதுபோலத் தான் நமது வாழ்விலும் ஒரு இலக்கை முன் வைத்து ஓட்டத்தை தொடங்கும் போது, இந்த சமூகம் நம்மை நோக்கி இவன் பைத்தியக்காரன் என சொல்லும். ஏளனம் செய்யும். கலங்காதீர்கள். நம்பிக்கை என்ற விளக்கை கையில் ஏந்தி இந்த வீதியில் வலம்  வாருங்கள். வெற்றி தேவதை பேரார்வத்துடன்  இருகரம் நீட்டி உங்களை வரவேற்பாள்.

”தெய்வத்தால் ஆகாது எனினும் முயிற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுகிறார். கடவுளே உனக்கு இது இல்லை என குறித்திருந்தாலும், உனது முயற்சியின் பலனாவது நிச்சயம் உனக்கு கிடைக்கும் என்பது தான் இதன் பொருள். எனவே முயற்சியை மூலதனமாக்கி, இலக்கை நோக்கி புறப்படுபவோம். வெற்றி வாழ்கை வாழ்வோம். இன்னும் ஒரு பதிவில் சந்திப்போம்.

எமது அடுத்த பதிவை படிக்க: நினைத்ததை அடைய கனவு காணுங்கள்

ADVERTISEMENT

 

Leave a Reply