நினைத்ததை அடைய கனவு காணுங்கள்

     வெற்றி என்ற இமயத்தை தொட வேண்டுமெனில் பல படிக்கட்டுகளை கடந்து சென்றாக வேண்டும். அதில் அடிப்படையான தன்னைஅறிதல், மனதும் – அதன் ஒப்பற்ற சக்தியும், ஆல்ஃபா – தியானம், வார்த்தையின் சக்தி, இலக்கை உருவாக்குங்கள் போன்ற ஐந்து  படிகளை கடந்த பதிவுகளில் பார்த்தோம். ஆறாவது  படி என்பது இமயத்தை தொட மிக முக்கியமானது. கனவு காணுங்கள். எப்படி கனவு காணவேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

ரைட் சகோதரர்களின் பறக்கும் கனவு

எப்படி கனவு காணவேண்டும்? Dr.அப்துல்கலாம் கூறுகிறார், ” கனவு காணுங்கள்! ஆனால், கனவு என்பது  நீ தூக்கத்தில் காண்பது அல்ல… உன்னை தூங்க விடாமல் செய்வதே இலட்சிய  கனவு.”  இன்று, இந்த உலகத்தில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற எல்லா வசதிகளுக்கும் முழு காரணம் யாரோ கண்ட கனவுதான். “பறவையை கண்டான் விமானம் படைத்தான்”  ஆம், மனுக்குலம் இன்று விமானத்தில்  பறக்க காரணம்,

ஆர்வில் ரைட் , வில்பர் ரைட் என்ற இரு சகோதரர்களும்  (ரைட் சகோதரர்கள்)  ஆவர் . பறவைகள்  இவ்வாறு அழகாக விண்ணில் பறக்கின்றனவே! என வியந்து , நம்மால் ஏன்  விண்ணில் பறக்க முடியாது? என்ற வினாவோடு, முடியும் என்ற எண்ணத்தை விதையாக்கி  கனவு கண்டு உயிரையும் பணயம் வைத்து கனவுக்காக மன உறுதியுடன் உழைக்க தொடங்கினார்கள். விமானத்தை கண்டுபிடித்தார்கள்.

அன்று அவர்கள் கண்ட கனவல்வா இன்று நாம் நினைத்தவுடன் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றுவர  சுகமான பணயத்தை தருகின்றது? ஆரம்பத்தில் அவர்களின் கனவை கண்டு இந்த உலகம் என்ன சொன்னது தெரியுமா? முட்டாள்கள் ! வானத்தில் பறக்க போகின்றார்களாம்! என எள்ளி நகையாடினார்கள். அதுபோல இன்று நீங்கள் காணும் கனவை  எள்ளி நகையாட ஆயிரம்பேர் அணிவகுத்து நிற்பார்கள்.

ADVERTISEMENT

முக்கியமாக உங்கள் குடும்ப உறுப்பினர்களும் முன்னணியில் நிற்பார்கள். காரணம், இலட்சிய கனவு காண்பது நீங்கள். அது அவர்களுக்குப் புரியாது. பரவாயில்லை! முயற்சியில் உறுதியாய் இருங்கள். Dr.அப்துல்கலாம் ஒருமுறை மாணவர்களைப் பார்த்து நெஞ்சிலே துணிவிருந்தால் நிலவிலும் கால் வைக்கலாம். கனவு காணுங்கள். அந்த கனவுகள் நிச்சயம்  பலிக்கும். என கூறினார்.  ஆம், கனவு கடவுள் மனிதனுக்கு கொடுத்த நல்ல வரம்.

கனவு என்றால் என்ன?

     பலருக்கும் வாழ்க்கையில் வெற்றி வாசல் திறக்காததற்கு கரணம், ஒரு தெளிவான கனவு கிடையாது. கனவு என்பது, எப்போதும் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் நமது மனதில் சுழன்றுகொன்டே இருக்கும். ஆனால் அது என்னவென்று முதலில் நமக்கு ஒன்றும் புரியாது. நாட்கள் போகப்போக  ஏதோ ஒன்றின்மேல் நமது எண்ணங்கள் குவியத்தொடங்கும். நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும்  அந்த எண்ணம் நம்மில் ஓடிக்கொண்டே இருக்கும்.

நமக்கு தற்காலிகமாக எந்த வருமானமும் கிடைக்காவிட்டாலும் அதற்காகவே மனம் ஏங்கும். உதாரணத்திற்கு எனது மனதில் இதுபோன்ற ஒரு எண்ணம் கடந்த பல வருடங்களாக வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. நாள்கள் போக போக ஒரு புத்தகம் எழுதினால் நன்றாய் இருக்கும் என்ற ஒரு ஆசை மேலோங்கியது. எனது முயற்சியை ஆரம்பித்தேன். 21 பக்கங்கள் கொண்டஒரு புத்தகத்தை உருவாக்கி முடிக்க ஏகப்பட்ட தடைகள்.

புத்தக வெளியீடு

குறிப்பாக சிந்தித்தால் ஒன்றும் எழுத வராது. இப்படி சில நாள்கள் கடந்தன. எழுத இருந்தால் ஒரு சோர்வு தொற்றிக் கொள்ளும். இப்படி ஒருசில நாள்கள். எப்படியோ எனது கனவுக்காக அந்த சூழ்நிலைகளை எல்லாம் எதிர்த்துப்போராடி  17-02-2018 அன்று “கற்பனைகள் கனிகளாக என்ற” தலைப்பில்  ஒரு உளவியல் நூலை Kindle eBook என்ற இணையத்தளத்தில் வெளியிட்டேன்.

ADVERTISEMENT

பிறகு தான் என்னாலும் புத்தகம் எழுதமுடியும் என்ற  நம்பிக்கை துளிர் விட்டது. இது ஒரு சிறு கனவுக்கு உதாரணம். சிறிய கனவுகள் நனவாகும் போதுதான் பெரிய கனவுகளும் நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகும். நீங்கள் ஒரு கோடீஸ்வரன் ஆக வேண்டும் என ஒரு கனவை உருவாக்குவதில் தவறில்லை.

ஆனால் அதற்குமுன் மாதம் ஒன்றிற்கு சில ஆயிரம்களையோ அல்லது நீங்கள் ஆயிரம்களை எட்டியவர் என்றால்   இலட்சங்களையோ  சம்பாதிக்க  கானவுகளை உருவாக்குங்கள். கனவுகளை உருவாக்கிவிட்டு அதற்காக உழைப்பை கொடுக்க தொடங்கும்போது சில சோதனைகள் உங்களை எதாவது வடிவில் எதிர்கொண்டு வரும். அப்போது,  இனி இது நடக்காது என முடிவெடுத்து, உரமூட்டி வளர்க்க வேண்டிய கனவை காலடியில் போட்டு புதைத்துவிட்டு ஒரு சாதாரண வாழ்கைக்கு கடந்து செல்லாதீர்கள் .

சோதனைகளை கடப்போம்

கனவுகளை நனவாக வேண்டுமெனில்  கடுமையான சோதனைகளை கடந்துதான் ஆகவேண்டும். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டிபிடிக்க வெறுமனே கனவு கண்டுகொண்டுமட்டும் இருக்கவில்லை. அதற்காக கடுமையாக உழைத்தார்கள். கடுமையாக என்றால் குட்டி விமானத்தில் முதல் சோதனை ஓட்டத்தை தொடங்கிய முதல் நிமிடங்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்! தங்களது இன்னுயிரை அடகு வைத்தல்லவா பயணத்தை தொடங்கியிருப்பார்கள்?

1000 த்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான  தாமஸ் ஆல்வா எடிசன் தனது கோடிகள் மதிப்புள்ள 10 தொழிற்சாலைகள்  தீயால் எரித்து சாம்பல் ஆகிய போதும், துவண்டு போகாமல், தனது கனவை புதைக்காமல் அந்த கனவுக்காக தொடர்ந்து உழைத்து மின் விளக்கை கண்டுபிடித்தாரே! தனது கனவுக்கு வந்த சோதனைகளை மன உறுதியுடன் எதிர்கொண்டு  இழந்ததை பல மடங்காக திரும்பி  பெற்றுக்கொண்டாரே! எனவே கனவை உருவாக்கினால், அந்த கனவு நனவாகும்வரை உறுதியுடன் களத்தில் நில்லுங்கள்.

எமது முந்தய பதிவை வாசிக்க:அபார வெற்றிபெற இலக்கை உருவாக்குங்கள்

ADVERTISEMENT

மனக்காட்சி (Visualization)

கனவுகளை நனவாக்கி வெற்றி என்ற இமயத்தை தொட மிக முக்கியமான ஒரு பயிற்சி  மனக்காட்சி. அதாவது  நாம் உருவாக்கியிருக்கும் கனவுகளை  நனவாக்க, ஆழ்மனதிக்கும்  பிரபஞ்ச சக்திக்கும் இடையில் ஒரு தொடர்பை உருவாக்க கொடுக்கின்ற மிக சக்திவாய்ந்த பயிற்சி தான் மனக்காட்சி. மனக்காட்சி என்பது, நமது இலட்சியங்களை, கனவுகளை ஒரு திரைப்படம் போல தொகுத்து தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அதை மனக்கண்முன் காண்பதே.

ஒன்றை  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பிரபஞ்சத்திடம் எந்த கோரிக்கையினை நீங்கள் கொடுத்தாலும் அதை நிச்சயம் நமக்கு நடத்தி தரும். பிரபஞ்சத்துக்கு நல்லது எது? கெட்டது எது? என பிரித்து பார்க்க தெரியாது. நீங்கள் எந்த உணர்வோடு பிரபஞ்சத்திடம் கோரிக்கை கொடுக்கின்றீர்களோ அதை அப்படியே கொடுத்து விடும். எனவே நாம் கேட்பதில் மிக கவனமாக இருக்கவேண்டும். சரி எப்படி பிரபஞ்சம் வேலைசெய்கிறது? நாம் எப்படி மனக்காட்சிகளை உருவாக்க வேண்டும்? போன்ற தகவல்களை தொடர்ந்து காண்போம்.

எண்ண விதையை விதைப்போம்

முதலில், மனம் என்ற தோட்டத்தில், எண்ணம் என்ற விதையை  விதைத்து,  இலட்சியம் என்ற உரமிட்டு, கனவென்ற நீருற்றி, காத்திருக்கும் நல்ல தருணமிது. இனி நாம் நினைத்தது நமது கரத்தில் தவழ அடுத்த பயிற்சி தான் மனக்காட்சி. மனக்காட்சியினை உருவாக்குவது எப்படி என்றால், முதலில் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

அது ஒரு கார் வாங்குவதாக இருக்கலாம். அல்லது வீடு கட்டுவது, பணக்காரராக மாறுவது, நல்ல வேலை கிடைப்பது, தொழில் துவங்குவது, நல்ல ஆரோக்கியம் கிடைப்பது, இப்படி எது வேண்டுமென்றாலும்  தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள். ஓன்றை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்லை.  எத்தனை விருப்பங்கள் உண்டென்றாலும் தேர்வு செயலாம். உதாரணமாக,  நீங்கள்  கார் வாங்குவதாக தீர்மானித்தீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

உடனே மனக்காட்சியை தொடங்கலாமா? இல்லை முதலில் எந்த நிறுவனத்தின் கார் வாங்கவேண்டும் என தெளிவாக முடிவெடுக்க வேண்டும். தொடர்ந்து, வாங்க வேண்டிய மாடல், அதன் நிறம் போன்ற தகவல்களை சரியாக மனதில் பதிக்க வேண்டும். அந்த கார் எந்த மாதம்  மற்றும்  நாள் உங்கள் கையில் கிடைக்க வேண்டும் போன்ற  துல்லியமான தீர்மானத்தை உருவாக்க வேண்டும்.

கற்பனைக் காட்சி

இப்போது அழகிய திரைப்படம் போன்ற ஒரு தொகுப்பை உருவாக்கி கற்பனையில் அந்த காட்சியை தினமும் காணத் தொடங்க வேண்டும். கற்பனை காட்சியினை பார்க்கும்போது அந்த கார் இப்போது உங்கள் கையில் இருந்தால் எப்படி உணர்வீர்களோ, அதே உணர்வுடன் ரசித்து ஓட்டவேண்டும். நீங்கள் விரும்பும் இடமெல்லாம் சென்று வரலாம்.

எங்கு சென்று வந்தாலும் கார் உங்கள் கையில் இருப்பதுபோல் உணர்வது மிக முக்கியம். காரணம் இந்த உணர்வுதான் அதிர்வலைகளாக பிரபஞ்சத்தின்  காதுகளில் சென்று சேரும். ஆம், பிரபஞ்சத்திற்கு  தெரிந்த ஒரே மொழி உணர்வலைகள் தான். இந்த உணர்வலைகளை தொடர்ந்து  பிரபஞ்சத்திற்கு நாம் தெரிவிக்கும்போது, அதன் முதல் நடவடிக்கை உடனே தொடங்கும். அதாவது நீங்கள் வெளியில் சென்றால்  இதுவரைக்கும் காணாத, நீங்கள் விரும்பிய கார் அடிக்கடி சாலையில் செல்வதை உங்களால் காணமுடியும்.

நீங்கள் எங்கு பார்த்தாலும் அந்த கார்தான் கண்ணில்  படும். இப்போது ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், அந்த  கார் உங்கள் கையில் வரும் நாள் நெருங்கி  வந்துவிட்டதென்று. மனக்காட்சியினை  எந்த நேரத்தில் பார்ப்பது நல்லது  என்றால், காலை துக்கத்தில் இருந்து நினைவு திரும்பும்   நேரத்திலும், அதுபோல இரவு தூக்கம் கண்ணை தழுவும் நேரத்திலும் காண்பது மிகச்சிறப்பு. மற்றபடி எல்லாநேரத்திலும் இந்த காட்சியினை காணலாம்.

இப்படி எல்லாம் என்னால் மனக்காட்சி படுத்த முடியவில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா?  அப்படியெனில் ஒருவேளை நீங்கள் இந்த மனக்காட்சி பயிற்சிக்காக  முயற்சியை  எடுத்தும்,  இது நமக்கு ஒத்துவராது என உதறித் தள்ளியவராய்  கூட இருக்கலாம். அல்லது மனக்காட்சி குறித்து எந்த அறிவும் இதுவரை இல்லாதவர்களாக கூட இருக்கலாம். கவலை வேண்டாம். உணர்வுப் பூர்வமாக எப்படி மனக் காட்சியினை அமைத்துக் கொள்வது  என்பதற்கு ஒரு சிறு உதாரணத்தை சொல்கிறேன்.

ADVERTISEMENT

உணர்வுப் பூர்வமான மனக்காட்சி

நான்  சொல்லுகின்ற உதாரணம் ஒரு எதிர்மறையான நிகழ்ச்சி ஆகும். இந்த எதிர்மறையான கருத்தை உங்களுக்கு புரியவைத்தால் மட்டுமே, நேர்மறை மனக் காட்சியினை உங்களுக்கு எளிதில் உணர வைக்க முடியும். உங்களது நெருங்கிய நண்பரோ, அல்லது உறவினரோ  ஒரு  சாலை விபத்தில் சிக்கி, மோசமான உடல் காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி இறுதியில் இறந்துவிடுகிறார் என நினைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுக்கு இந்த அனுபவம் இருந்திருந்தால் அந்த நாளை  உங்கள் மனக்கண்முன் கொண்டு வாருங்கள். விபத்து நடந்ததை அறிந்த, அந்த நொடி முதல் உங்கள் மனதில்  ஓடிய எண்ணங்களை கொஞ்சம் அசைபோட்டு பாருங்கள் ! என்ன  ஆச்சரியம்? அவருக்கு நடந்த விபத்து அனுபவம் உங்களுக்கும் நடந்ததுபோல் மனமேடையில் உணர்வுகள் நடைபோடுமே.

சற்று தனிமையான அனுபவம் கிடைத்தால் போதும், நீங்களே அந்த விபத்தில் மாட்டியது போல, வேதனைகளை அனுபவித்து, மருத்துவமனையில் உயிருக்கு போராடி இறந்துவிட்டதாக, மனக்காட்சிகள் ஒரு திரைபடம்போல் ஓடி,  உணர்வு திரும்பும் போது நீங்கள்  படுகையில் புரண்டுகொண்டிருந்த அனுபவம் உங்களுக்கு இருந்திருக்குமே!

இது  போல பல  எதிர்மறையான நிகழ்வுகள், தனக்கு நடந்துபோல உண்மை அனுபவமாக   உங்களால் மனக்காட்சியை  பார்க்க முடியுமெனில், ஏன் உங்களுக்கு தேவையான ஒன்றை  கையில் கிடைத்ததுபோல நினைத்து மனக்காட்சியினை காண இயலாது? விபத்தில் சிக்கிய வேதனையை அப்போது உங்களால் உணர முடியும்போது, நீங்கள் நினைத்த காரை நீங்கள் ஓட்டுவது போல ஏன் உணரமுடியாது? இப்போது நீங்கள் கேட்கக்கூடும், மனக்காட்சி கண்டால் அப்படியே நடக்கும் என்றீர்களே!

ADVERTISEMENT

எதிர்மறையாக விபத்து நடந்ததை நாங்கள் மனக்காட்சியாய் கண்டும், உணர்ந்தும்,  எங்களுக்கு அப்படியொன்றும் நடக்கவில்லையே. பின்னர் எப்படி நாங்கள் மனக்கண்முன் விரும்பி பார்த்தவை நடக்குமென்று நம்புவது? நண்பரே! நல்லதோ அல்லது கெட்டதோ, நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ  மிஞ்சிப்போனால் மூன்று நாளோ உணர்வோடு மனக்காட்சி காண்கின்றீர்கள்.

அதை தொடர்ந்து காண்பதில்லையே! புரிந்ததா? நீங்கள் வடிவமைத்துக் கொண்ட காட்சியினை தொடர்ந்து உணர்வோடு கண்டு வாருங்கள். எண்ணத்தின் தீவிரத்தை  பொறுத்து அது விரைவாகவோ அல்லது சற்று தாமதமாகவோ  நடக்கலாம். ஆனால் நிச்சயம் நடந்தே தீரும். உங்கள்  கனவு நனவாகி உங்கள் கையில் தவழ்ந்தே தீரும்.

எமது முதல் பதிவை வாசிக்க: ஆழ்மனதின் அற்புத சக்தியால் வெற்றிகளை குவிப்போம்

Leave a Reply