அன்பின் சிகரம் அம்மா

அன்பின் சிகரம் அம்மா ! என்ற சொல்லிற்கு அர்த்தம் தேடினால் அகராதியில் தான் கிடைத்திடுமோ ? அளவு கடந்த அன்புக்கும், எண்ணில் அடங்கா தியாகத்துக்கு, தன்னலமற்ற அன்புக்கும் ஒரே சொந்தம் அம்மா தான். அம்மாவுக்கு நிகர் அம்மாவே தான். அம்மாவின் பெருமைகளை இந்த பதிவில் காணலாம்.

அம்மாவின் எல்லையற்ற அன்பு

அன்பு என்பது ஓர் அற்புதமான உணர்வு. இது பல விதங்களில் வெளிப் படுகின்றது. அன்பு மனிதனிடம் மட்டும் காணப் படுகின்ற உணர்வு  அல்ல. இந்த பிரபஞ்சத்தில் படைக்கப் பட்டுள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.

அதாவது எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காணப் படுகின்றது. என்னதான் அன்பு மனிதகுலத்தில்  நிரம்பி காணப் பட்டாலும் பெரும்பாலும் அவை எல்லாம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே காணப் படுகின்றது.

இதை விளக்கமாக சொல்வது  என்றால், பிறர் நம்மை அன்பு செய்வதால், பதிலுக்கு நாம் அவர்களை அன்பு செய்கின்றோம் என்பது தான் நிசதமான உண்மை. அன்பை பொறுத்தவரை மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கு இடையிலும் காணப்படும் அன்பில்  தாய் அன்பே தலை சிறந்தது.

உதாரணமாக நாம் வாழும் சமூகத்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பால் சிகிட்சை பெற்று வருகின்றார் என வைத்துக் கொள்வோம். அவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர். அவருக்கு யாராவது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கினால் பிழைத்துக் கொள்வார். ஒரு மனிதன் ஒரு சிறுநீரகம் இருந்தாலே வாழமுடியும்.

ADVERTISEMENT

இது நன்றாக தெரிந்தும் நம்மில், இந்த பதிவை எழுதும் நான்  உட்பட எத்தனைபேர் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வருவோம்? இயலாத காரியம் அல்லவா? ஒருவேளை நீங்கள் கொடுக்க முன்வந்தாலும் இந்த சமூகம்தான் வழங்க விட்டுவிடுமோ?

ஆனால் இதே இடத்தில ஒரு தாய் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ இது போன்ற தேவை ஏற்பட்டால் சற்றும் யோசிக்காமல், நான் வழங்குகின்றேன் என முன்வரமாட்டாரா? இதுவல்லவோ தாயின் அன்புக்கு எடுத்துக்காட்டு.

100 சதவீதம்  தாய்மார்களும் இவ்வாறு இருப்பார்கள் என உறுதியாய் சொல்லிவிட முடியாது. காரணம் எல்லாவற்றுள்ளும் விதிவிலக்கு என்று ஓன்று உண்டு. என்ன தான் இருந்தாலும் அன்பின் சிகரம் அம்மா என்றால் மிகை ஆகாது. இனி அன்பின் தன்மைகள் சிலவற்றை இங்கே காணலாம்.

கணவன் மனைவி அன்பு

திருமணம் என்ற உறவால் ஒரு ஆணும் பெண்ணும் இணையும் போது ஏற்படும் ஒரு புனிதமான  உறவு தான் கணவன் மனைவி உறவு. திருமணம் ஆன ஆரம்ப காலகட்டத்தில் அல்லது திருமணத்துக்கு முன் காதலிக்கும் கால கட்டத்தில் நகமும் சதையும் போல இருக்கும் ஜோடிகள், பலரும்  காலம் செல்லச் செல்ல அந்த மன நிலையில் இருந்து சற்று பின்வாங்குகின்றார்கள்.

ஆனால் வெகு சிலரோ அந்த உறவில் எத்தனை காலம் ஆனாலும் நிலைத்து நிற்கின்றார்கள். என்னதான் இருந்தாலும் துன்பம் வரும்போது பல தம்பதிகளின் அன்பில் விரிசல் ஏற்படுவதை காண முடிகின்றது.  மனைவிக்கு நோய் வரும்போது கணவனின் அன்பு எத்தகையது என அறிந்து கொள்ள முடியும்.

ADVERTISEMENT

கணவன் பணப் பிரச்சனையில் தவிக்கும் போது மனைவியின் அன்பை உணர்ந்து கொள்ள   முடியும் என ஒரு பழைய சினிமா பாடல் வரிகள் உண்டு. மேற் சொன்னபடி மனைவிக்கு கடுமையான நோய் வந்தாலோ அல்லது குழந்தை பாக்கியம் இல்லை என்றாலோ பிரிந்து சென்று வாழும் கணவர்களை நாம் அதிகம் காண்கின்றோம்.

அது போல ஆடம்பர வாழ்வு வாழ முடியாது என்ற காரணத்திற்காக அல்லது குழந்தை கிடைக்கவில்லை போன்ற காரணங்களுக்காக பிரிந்து சென்ற மனைவிகள் ஏராளம்.  இந்த உறவுகளை விட தாயின் அன்பு எவ்வளவோ சிறந்தது என கூற முடியும்.

காரணம் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ நோய் அல்லது பண பிரச்சனை வந்த உடன்  எந்த அம்மாவும் பிரிந்து செல்வதில்லை. தாயின் அன்பிற்கு அளவு கோல் கிடையாது.

எமது முந்தய பதிவை வாசிக்க: இயற்கையின் முக்கியத்துவம்

விலங்குகள் மற்றும் பறவைகள்

விலங்குகள், பறவைகள் மற்றும் அனைத்து ஜீவ ராசிகளும் அன்பு ஒன்றிற்கே கட்டுப்பட்டு வாழ்கின்றன. அதன் அதன் இனங்களோடு அன்பு பிணைப்பில் வாழ்கின்றன. தனது இனத்தில் ஒன்றிற்கு துன்பம் அல்லது ஆபத்து என்றால் மற்றவைகள் அனைத்தும் ஒன்று கூடி அதை காப்பாற்றுகின்றன.

ADVERTISEMENT

உதாரணமாக காகம் அல்லது வவ்வால் இனத்தை கூர்ந்து கவனித்து பாருங்கள். தனது இனத்தில் ஒன்றிற்கு ஒரு ஆபத்து என்றால் மற்றவை அனைத்தும் ஒன் றுகூடி வந்து எதிரியை துரத்திவிட்டு தனது இனத்தை காப்பாற்றிவிடும்.

ஆனால் ஒரு சில உயிரினங்கள் தங்களுக்குள்ளே   ஒற்றுமை இல்லாமல் அடிப்பவைகளும் உண்டு. என்னத்தான் இருந்தாலும் அவற்றிலும் தாய்மை உறவுகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்று பழமொழியே உண்டு.

எந்த விலங்கும் அல்லது மற்ற உயிரினங்களும் தனது வாரிசுக்கு எதாவது பிரச்சனை என்றால் தனது உயிரை கொடுத்தாவது காப்பாற்றிவிடும். உதாரணமாக வீட்டில் வளர்க்கும் கோழியை பாருங்கள் ! தனது குஞ்சுகளுக்கு எதாவது வடிவில் ஆபத்து வந்தாலும் தனது குஞ்சுகளை காப்பாற்ற எதிரியை பறந்து சென்று தாக்கும் பண்பை காணமுடியும்.

குட்டிகளை ஈன்றிருக்கும் தெரு நாய் இருந்தால் கவனித்து பாருங்கள். தனது கூட்டியை பழக்கமில்லாத  யாராவது தொட முயற்சித்தால் தனது குட்டிக்கு ஆபத்து எதாவது நேர்ந்து விடுமோ என எண்ணி அந்த நபரை தாக்கிவிடும். ஆக எந்த ஜீவராசியினை எடுத்துப் பார்த்தாலும் தாய் அன்புக்கு ஈடு கொடுக்க எதுவும் இல்லை எனலாம்.

கருவிலே கருணையின் ஆரம்பம்

அம்மா என்றாலே அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது மட்டும் ஆணித் தரமான உண்மை. அம்மாவின் கருணை என்பது அளவில்லாதது. அபரிமிதமானது. இந்த கருணையானது, தனது வயிற்றில் குழந்தை கருவானது தனக்கு தெரிந்த நாள் முதலே ஆரம்பம் ஆகி விடுகின்றது.

ADVERTISEMENT

தனது கருவில் இருக்கும் குழந்தை கலைந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த தாயின் தியாகங்களை  தான் எழுத வார்த்தைகள் இல்லை. அந்த அளவு கடந்த தியாகங்கள் தான், நாம் ஒவ்வொருவரையும் இந்த உலகுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.

கருவுற்ற ஆரம்ப கால கட்டங்களான முதல் மூன்று மாதங்கள் அலைச்சல்களை குறைத்து, முடிந்த அளவு ஓய்வு எடுக்கும் பல தாய்மார்கள் இரவில் சரியாக தூங்குவது கூட குறைவு எனலாம்.  தொடரும் மாதங்களில் புரண்டு அல்லது சரிந்து படுத்தால் எங்கே, கருவில் இருக்கும் தனது சொத்தான குழந்தைக்கு  எதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில் அனேக நாட்கள் தூக்கத்தை  தொலைத்த தாய்மார்கள் ஏராளம்.

குழந்தையினை பெற்றெடுத்து அதன் முகத்தை கண்ட நாள் முதல் கருணையின் அடுத்தக் கட்டம் ஆரம்பம் ஆகிவிடுகின்றது. பாலூட்டி, பாலோடு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை ஊட்டி வளர்கின்றாள் அன்னை. காலங்கள் உருண்டோட  குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் மிகுந்த கவனம் கொடுத்து, பசியறிந்து உணவூட்டி, பராமரித்து ஒரு மனிதனாக அல்லது மனுஷியாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கின்றாள் அன்னை.

இவ்வாறு கருவாக்கி, உருவாக்கி கருணை மழை பொழிந்து தியாகம் பல செய்து  விட்ட அம்மாவை, பல பிள்ளைகளும் அவர்களது முதுமையில் கை விடுவது வாடிக்கை ஆகிவிட்டது. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என ஆங்காங்கே முளைப்பது இதை உறுதிப் படுத்துகின்றன. இது போன்ற கல் நெஞ்சகர்களின் செயல்கள்  மனிதாபிமானம் உள்ள மனிதர்களுக்கு வேதனையை தருகின்றது.

தனது பிள்ளைகள் எப்படி தன்னை புறம் தள்ளினாலும், அல்லது வேதனை படுத்தினாலும் தனது மகனோ அல்லது மகளோ நன்றாய் இருக்க வேண்டும்  இறைவா என வேண்டுகின்றது அந்த தாய் மனம். இது தான் தாயின் கருணை.

ADVERTISEMENT

எதிர்பார்ப்பில்லாத ஒரே அன்பு

ஒரு மகனை அல்லது மகளை பெற்றெடுத்து பராமரித்து வளர்த்தெடுக்கும் தாயின் அன்பு எந்த நிபந்தனைகளும் இல்லாதது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு அபரிமிதமான அன்பு. தாயும், தந்தையும் இணைந்து ஒரு மகனை அல்லது மகளை ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை படிக்க  வைத்து  அழகு பார்க்கின்றனர்.

இந்த கல்வியை தர உங்கள் பெற்றோர்கள் பட்ட அவமானங்கள் ஏராளம் இருக்க வாய்ப்பு அதிகம். தான் பட்டினி கிடந்தது தனது பிள்ளைகளுக்கு நிறைவாக உணவூட்டி  பார்த்து பார்த்து வளர்த்த அம்மாக்கள் ஏராளம்.

இவ்வாறு தன்னை வருத்தி பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தனது பிள்ளை பணம் சம்பாதித்து தனக்கு தருவான். அல்லது தருவாள். வயது முதிர்ந்த காலகட்டத்திலும் எங்களை பத்திரமாக பாதுகாப்பார்கள் போன்ற எந்த எதிர்பார்போடும் வளர்த்துவது இல்லை.

அப்படி ஒரு எதிர்பார்ப்பை எந்த ஒரு தாயும் அல்லது தந்தையும் தம் பிள்ளைகள் மேல் வைப்பதில்லை. ஆனால் நம்புகின்றார்கள் நம் பிள்ளைகள் நம்மை பாதுகாப்பார்கள் என்று. ஆனால் பெரும்பான்மையான தாய் தந்தையருக்கு இந்த நம்பிக்கை உடைந்துகி போகின்றது. ஆம் பல பிள்ளைகளும் தங்களுக்கு பணமும், செல்வங்களும் கிடைத்தவுடன் ஏறிவந்த ஏணியை உதைக்கின்றனர்.

இருந்தாலும் அந்த பெற்ற வயிறோ, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவராய் வேதனைகளை மறந்து தங்களது பிள்ளைகளை நன்றாய் இருக்கவேண்டும் எனவே வாழ்த்துகின்றனர். இதுதான் தாய் மனம்.

ADVERTISEMENT

கடவுளுக்கு இணை தாய்தான்

இந்த உலகையும் நம்மையும் படைத்த கடவுள், எப்போதும் நம்மோடு இருக்க முடியாது என்பதற்காகத் தான் தாயை நாம் அனைவருக்கும் பரிசாக கொடுத்திருக்கின்றார். ஆக படைத்த இறையினை நாம் தினமும் நமது அம்மாவின் சாயலில் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் இந்த தத்துவத்தை புரிந்து கொண்டவர்கள்  எண்ணிக்கை மிகக் குறைவே.

இந்த புரிதல் இல்லாதால் தான் இன்று கருவாக்கி, உருவாக்கி, வளர்த்து ஆளாக்கி வானுயர புகழடைய வைத்த அம்மாவை, பல தளங்களில் அவமானப்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு பெற்றெடுத்த தாய்மார்களை அவமானப் படுத்தும் மகனோ அல்லது மக்களோ, அவர்களின் வருங்கால தலை முறைகள் மிகப்பெரும் பாதிப்புகளுக்குள் உள்ளாவது உறுதி.

அந்த பாதிப்பை தொடர்புடைவர்கள் கண்ணால் கண்டும் அல்லது உணர்ந்தும் அனுபவிப்பது நிச்சயம் நிகழும். இது எழுதப்படாத சட்டம். தன்னை எவ்வளவு தான் அவமானப் படுத்தினாலும் அல்லது வேதனைப் படுதின்னாலும் எந்த தாய் உள்ளமும் தமது பிள்ளைகளை சபிப்பதில்லை.

மாறாக எனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் எனத்தான் வாழ்த்தும் அந்த தாயுள்ளம். ஆனாலும் இந்த பிள்ளைகளை இப்படி வளர்த்தும் என்னை இப்படி நடுத் தெருவில் பிறரிடம் கையேந்த விட்டுவிட்டார்களே என அந்த உள்ளம் ஏங்கும் அல்லவா? அந்த ஆழ்ந்த வருத்தம் தான் நாளை நமது தலை முறைகளை வதைக்கப் போகின்றது. கவனம்.

நாம் உழைத்து சம்பாதிப்பது நமது பிள்ளைகளுக்கே. அந்த சம்பாத்தியத்தில் அவர்கள் சுகமாய் வாழ வேண்டும் எனில் நமது அம்மாவை , அப்பாவை  அரவணைத்து, அன்பு கொடுத்து வாழ வைப்போம். குறிப்பிட்ட வயதை கடந்த தாய் தந்தையர் ஒரு குழந்தை மனம் படைத்தவர்களாக மாறி விடுகின்றார்கள். நமது குழந்தைகளின் குறும்பை ரசிக்கும் நாம், நமது அம்மா, அப்பாவின் குழந்தைத் தனமான குறும்பை ரசிப்போம். வாழ்க்கை வளமாகும்.

ADVERTISEMENT

தியாகத்தின் சிகரம்

நம்மை கருத்தாங்கிய நாள் முதல்,  பல தியாகங்கள்  செய்து, நமக்காகவே வாழ்ந்து  தனது இறுதி மூச்சு இருக்கும் வரை நம்மையே நினைத்து வாழும் ஒரே ஜீவன் தான் தாய். அந்த தாயில் இறைமையினை காண்போம். தாய்மையை போற்றுவோம். தரணியில் வாழும் மாந்தர்களெல்லாம் தாய்மைக்கு மரியாதை செய்வோம்.வாழ்க வளமுடன்.

அடுத்த பதிவை படிக்க: : அப்பாவின் அன்பிற்கு ஈடேது ?

Leave a Reply