அப்பாவின் அன்பிற்கு ஈடேது ?

ஆயுள் உள்ளவரை தன் மகனை அல்லது மகளை  மனதில் சுமக்கும் ஒரு அற்புதமான மனிதரை  குறித்துதான்,  அப்பாவின் அன்பிற்கு ஈடேது ? என்ற இந்த பதிவில் நாம் வாசிக்க இருக்கின்றோம். அப்பாவின் அர்த்தம் சரியாக புரிய வேண்டும் எனில் வாழ்க்கை என்ற அகராதியினை புரட்டிப் பார்த்தால் தான் தெரியும். புரட்டிப் பார்ப்போம் வாருங்கள்….

அப்பாவின் ஆரம்ப கால மனப் போராட்டம்

அப்பா என்பவர் அம்மா வழியாக நம்மை இந்த உலகிற்கு நம்மை அறிமுகம் செய்த ஒரு வி.ஐ.பி. தனது குழந்தை, மனைவியின் வயிற்றில் கருவானதை அறிந்து கொள்ளும் கணவன் அந்த நிமிடம் முதல்  அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை எனலாம்.

தாய் தனது கருவை பாதுகாத்து குழந்தையாக இந்த உலகுக்கு கொண்டு வர தனது உடலையும், மனதையும்  வருத்தி செய்யும் தியாகங்கள் ஏராளம். ஆனால் அந்த குழந்தை மண்ணில் மலரும் வரை தாயையும், கருவில் வளரும் குழந்தையையும் பாதுகாக்க அப்பா மனத்தால் படும் அவஸ்தைகள் தான் ஏராளம்.

காரணம், கருவுற்றிருக்கும்  தாய்க்கு இந்த நேரங்களில் ஏராளமான உடல் உபாதைகள் வரலாம். குறிப்பாக இரத்த அழுத்தம், ஒவ்வாமை, இரத்தக் குறைபாடு,  பய உணர்வு போன்ற பாதிப்புகள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால் குழந்தைக்கோ,அம்மாவிற்கோ  அல்லது  இருவருக்குமோ உயிர் சேதம் வரை வர வாய்ப்பு உண்டு.

அது போல பிரசவ நேரத்தில் கூட பல ஆபத்துகள் நிகழ வாய்ப்புண்டு. இந்த சூழ்நிலையில்  தாயையும், அவள் கருவில் வளரும் குழந்தையையும் சேர்த்து பத்திரமாக  பாதுகாக்க வேண்டும் என்ற போராட்ட எண்ணம் ஒரு அப்பாவிற்கு முதலில் இருந்தே ஆரம்பம் ஆகின்றது.

ADVERTISEMENT

இந்த போராட்ட உணர்வு ஒரு குழந்தையை வளர்த்து பொறுப்புள்ள மனிதராக மாற்றும்வரை ஓய்வதில்லை. ஏன் அவரது இறுதி மூச்சுவரை இந்த போராட்ட உணர்வு முடிவுக்கு வருவதில்லை என்பது தான் உண்மை. ஆம் அப்பாவின் அன்பு மிகவும் ஆழமானது. எந்த அளவையாலும் அளக்க இயலாது என்பது தான் உண்மை.

குழந்தைகளின் கதா நாகயன்

தாயின் கருவறையில் உருவான குழந்தை ஒரு நாள் மண்ணில் மலர்கின்றது. ஈன்றெடுத்த தாய் அடையும் இன்பத்துக்கு அளவே இல்லை. அதே நேரம் அப்பாவின் ஆனந்தமோ… சொன்னால் புரியாது. அதை அனுபவித்த அப்பாக்களுக்கே புரியும். தன்னால் ஒரு  குழந்தை நன்றாய் பிறந்தது என்கின்ற மகிழ்ச்சி ஒரு புறம்.

தனக்கு அப்பா என்ற அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி மறுபுறம். பிறந்த குழந்தைக்கு முதல் ஆசிரியர் அம்மா என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆனால் அந்த குழந்தைக்கு கதா நாகயகனாய் தெரிவது அந்த அப்பா தான். காரணம்  குழந்தை வளர, வளர அம்மா சூழ்நிலை காரணமாக வீட்டிலே இருந்து தாய் பாலுடன் வீரத்தையும், பல்வேறு அறிவையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க முடியும்.

ஆனால் பெரும்பாலான  அப்பாக்களோ தான் கடை வீதி போன்ற இடங்களுக்கு செல்லும் போதெல்லாம், தனது குழந்தைகளை  இருசக்கர அல்லது நன்கு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வது உண்டு. இதனால் அந்த  குழந்தையால்  வெளி உலகை அறிந்து கொள்ள முடிகின்றது. தனது அப்பாவிடம் இருக்கும்போது ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கின்றது.

குழந்தை  பருவம் மட்டுமல்ல! அதையும் தாண்டி மாணவர் பருவம், இளைஞர் பருவம் போன்ற காலகட்டங்களில் கூட இன்னும் அதிகமான பாதுகாப்பு உணர்வு கிடைக்கின்றது. தனது தந்தை எவ்வளவு பலவீனமானவராக இருந்தாலும் பிரச்சனைகள் எது வந்தாலும் நம்மை பாதுகாப்பார் என்ற உறுதியான நம்பிக்கை அவனுள் அல்லது அவளுள் மலர்கின்றது. ஆக  குழந்தைகளின்  கதா நாகயன் அப்பா தான்.

ADVERTISEMENT

குடும்பத்தை கட்டி எழுப்புபவர்

குடும்பம் என்று வந்துவிட்டாலே அங்கு ஊன்று கோலாக நிற்பது அப்பா மற்றும் அம்மாதான். இருந்தாலும் அப்பாவுக்கு தான் குடும்பத்தை கட்டி எழுப்பும் பொறுப்பு அதிகம் உள்ளது. சில இடங்களில் பொறுப்பற்ற அப்பாக்களும் உண்டு.

அல்லது அப்பாவை இழந்த குடும்பங்களும் உண்டு. இப்படிப் பட்ட  குடும்பங்களில் அந்த குடும்பத்தை தாங்க வேண்டிய பொறுப்பு அந்த தாயிடம் இருக்கலாம். மற்றபடி குடும்பங்களை கட்டி எழுப்பும் பொறுப்பு அப்பாக்களே கையில் வைத்துள்ளனர்.

குடும்பம் என்ற வண்டியை இயக்குவது  என்பது சாதாரணப் பட்ட காரியம் அல்ல. அதற்காக கொடுக்க வேண்டிய விலைகள் ஏராளம். ஒரு சிறு குடும்பம் இன்று சாதாரணமாக இயங்க வேண்டுமென்றால் கூட, அதாவது உணவு,உறைவிடம் போன்ற அடிப்பைடை தேவைகளுக்கு  குறைந்தது பத்தாயிரம் ரூபாய் தேவைப்  படுகின்றது.

இதை தவிர மருத்துவ செலவுகள் ,கடன் பிரச்சனைகள், வாகனச் செலவுகள், சமூக கடமைகளான குழந்தைகளின் திருமணம், கல்வி என செலவுகள் ஏராளம். மேற்கண்ட எல்லா செலவுகளையும் தாராளமாக செய்து வாழ்வில் திருப்தியாக இருக்கவேண்டும் எனில் இன்றைய பொருளாதார சூழலில் குறைந்தது ஒரு குடும்பத்துக்கு 50,000 ரூபாய் முதல் 100,000 வரை தேவைப் படுகின்றது.

இந்த தொகையினை சம்பாதிக்கும் போராட்டத்தில் வெற்றிபெறும் அப்பாக்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்  தான் உள்ளனர். பல அப்பாக்கள் அந்த  போராட்டத்தில்  பின்னடைவை சந்தித்தித்து கிடைக்கும் வருமானத்துக்கு ஏற்ப குடும்ப வாழ்வை கட்டி எழுப்புகின்றனர்.

ADVERTISEMENT

ஓயாமல் சுழலும் அன்பு சக்கரம்

குடும்பம் என்ற வண்டி நன்றாக பயணத்தை தொடர ஓயாமல் சுழலும் அன்பு சக்கரம் அன்பு சக்கரம் தான் அப்பா. ஆம், அப்பா என்பவர் ஓயாமல் ஓடினால் மட்டும் தான் அந்த குடும்பம் மிகவும் சுதந்திரமாக இயங்க முடியும்.

தனது மனைவி, மக்கள் நன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காக தனது சுகங்களை தியாகம் செய்து வெளியூரிலும், வெளி நாடுகளிலும் தங்கி வேலை செய்யும் அப்பாக்கள் ஏராளம். அங்கு வேலை செய்யும் இடங்களில் வசதியான வாழ்கை ஒன்றும் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஒன்றும் கிடைப்பதில்லை.

மாறாக நாம் சுகமாய் மெத்தையில் உறங்க , அப்பாவோ அப்பாட்மென்டறில் ஒரு குறுகிய இடத்திலோ அல்லது பாலைவனத்து மணலிலோ உறங்குகிண்றார். நாம் சமூகத்தில் நல்ல பெயர் எடுக்க, தான் வேலை செய்யும்  இடத்தில் கூனிக் குறுகி  பல அவமானங்களை சந்திக்கின்றார்கள்.

நாம் படித்து நல்ல வேலை வாங்க அல்லது தொழில் செய்ய அங்கு அவர் ஒட்டகம் மேய்க்கலாம். அல்லது இன்னும் பல கீழ்த்தரமான வேலைகள் கூட  செய்யலாம். இப்படி  பல நிலைகளில் தன்னை மாற்றிக் கொண்டுதான்  ஒரு குடும்பத்தை தாங்கி நடத்துகிறார் அப்பா.

எப்படி பார்த்தாலும் அப்பாவுக்கு ஓய்வே இல்லை என்பது தான் மிகவும் ஆழமான உண்மை. அவர் ஓய்வெடுக்க தொடங்கி விட்டால் அந்த குடும்பத்தின் கதி அவளவுதான். உதாரணமாக நன்றாக சம்பாதித்து குடும்பத்தை நடத்தும் அப்பா ஒருவர் திடீர் என நம்மை விட்டு தவறி விட்டார் என வைத்துக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

ஒருவேளை அந்த குடும்பத் தலைவரின் வருமானத்தை மட்டும் அந்த குடும்பம் நம்பி இருந்தால் அந்த குடும்பத்தின் கதி என்ன? சிந்தித்து பாருங்கள். அப்பாவின் அருமை அப்போது தான் நமக்கு புரியும்.

முந்தய பதிவை வாசிக்க: அன்பின் சிகரம் அம்மா

தன்னலம் இல்லா தூய அன்பு

அப்பாவின் அன்பு ஒரு கலப்படம் அற்ற அன்பாகும். அந்த அன்பில் தன்னலம் என்பது இல்லவே இல்லை. எந்த ஆண்மகனும் அப்பா என்ற இடத்தை அடைந்த உடன் தனது சுயநலம் என்ற வட்டத்தை உடைத்து விடுகின்றான்.

அதாவது திருமணத்துக்கு முன்பு எது  கிடைத்தாலும், தனக்கென்று வைத்துக் கொள்ளும் ஒரு ஆண்மகன், தனக்கு   மனைவி  வந்தவுடன், தன்னிடம்  கிடைக்கும் எதையும் சமமாக பிரித்து பகிர்தல் என்ற பொதுநல செயலை ஆரம்பிக்கின்றான்.

அங்கே ஆரம்பிக்கும் தன்னல உடைத்தல் என்ற செயலானது ,  குழந்தைகள்  பிறந்தவுடன்  காணாமல் போய் விடுகின்றது. உதாரணமாக,  இப்போது தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவுப்பொருள் இருக்கின்றது என வைத்துக் கொள்வோம்.

ADVERTISEMENT

அந்த பொருளை ருசிக்க தொடங்கும்போது தனது குழந்தை அப்பா எனக்கு இது நன்றாக புடிச்சிருக்கு. இன்னும் கொஞ்சம் வேணும் அப்பா என்று சொன்னால் எந்த தந்தையும், சரி என சொல்லிக் கொண்டு தான் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே தனது குழந்தைக்கு வழங்கி விடுவார்.

இது தான் தன்னலமற்ற தூய அன்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 90 சதவீத அப்பாக்களும் மனைவி மற்றும் குழந்தைகள் என்று வந்துவிட்டால் தனக்கென வாழும் வாழ்க்கையினை மாற்றி குடும்பத்துக்காக வாழ தன்னை அர்பணித்து விடுகின்றார்கள்.

ஆம் தனக்கு என்ற அந்த எண்ணம் முற்றிலும் மறைந்து விடுகின்றது. எந்த நேரத்திலும் தனது மனைவியும், மக்களும் நன்றாக வாழ வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே சிந்தனைகள் வலம்வரும்.

தியாகத்தின் மறு உருவம்

அப்பா என்பவர் தியாகத்தின் மறு உருவம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.  தனது குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர் செய்யும்  தியாகம் என்பது அளப்பெரியது. உதாரணமாக தனது மனைவியும், பிள்ளைகளும் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தனது நல்ல உணவை , உடைகளை, உறைவிடத்தை  தியாகம் செய்து  வெளி நாடுகளில் உறை பனியிலும், கடும் வெயிலிலும் சிக்குண்டு பணியாற்றி வருகின்றார்களே !

எதற்காக? நாம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ அல்லவா இத்தனை தியாகங்கள். வெளி நாடுகளில் சென்று வேலை செய்து, பணம் சம்பாதித்து ஒரு அழகான வீடை கட்டி அதில் தனது குடும்பத்தை குளிர்சாதன வசதியுடன் வாழ வைத்துவிட்டு, கடனை அடைக்க, கடமைகளை நிறைவேற்ற மீண்டும் வெளி நாடு செல்கின்றார்.

ADVERTISEMENT

அங்கு இருந்தபடி  தான் கட்டிய  வீட்டை,  எடுத்துக் கொண்ட புகைப்படம் வழியாக அவ்வப்போது பார்த்து  மகிழ்கின்றாரே ! இதை விட பெரிய தியாகம் என்ன இருக்க இயலும்? எத்தனை பண்டிகைகளை நாம் சிறப்பாக கொண்டாடுகின்றோம்? நமது தியாகச் செம்மல் அப்பா  அதில் கலந்து கொள்ள இயலாமல் அங்கே அடைபட்டல்லவா இருக்கின்றார் !

ஊருக்கு வந்துவிட்டால் முக்கியமான நாட்களை கொண்டாட நமது தேவைக்கு உடைகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, தனக்கென எதுவும் வாங்காமல் வரும் அப்பாக்கள் தான் அதிகம்.  இதை எனது வாழ்விலும் நான் அனுபவித்துள்ளேன். எப்போதும் அப்பா என்பவர் சுயநலத்தை சுட்டெரித்து, சுடர் விடும் ஒளி விளக்கவே வாழ்கின்றார்.

தன்னை உருக்கும் தந்தை

மெழுகு திரி ஆனது தன்னை உருக்கி உலகுக்கு ஒளி கொடுப்பதை போல, அப்பா என்ற உறவும் தன்னை சிதைத்துத்தான் தனது குடும்பத்தை வாழ வைகின்றார்கள். நான் ஏன் அப்படி சொல்கின்றேன் என்றால், நெடும் காலம் குடும்பத்திற்காய் உழைத்து, அவர்களை நல்ல நிலையில் வைத்துவிட்டு,

இனி மீதி இருக்கும் வாழ்நாளில் ஏதாவது நிம்மதியாய் உண்டு, ஓய்வெடுத்து நிம்மதியாய் வாழலாம் என நினைக்கும் போதுதான் சர்க்கரை , இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரிசையில் நின்று வரவேற்கின்றன. இதனால் வாழ்க்கையின்  மீதி காலத்திலும் நிம்மதியாய் வாழ முடிவதில்லை.

இவ்வாறு தனக்காக வாழாமல், தனது குடும்ப நலனுக்காகவே வாழும் தியாகச் செம்மல்கள் தான் நமது அருமை அப்பாக்கள். இவ்வாறு நமக்காக அர்ப்பணித்து வாழ்ந்த அப்பாவை அவரது வயதான காலத்தில் அரவணைத்து, ஆதரவு கொடுத்து வாழ வைப்போம்.

ADVERTISEMENT

இன்று நம்மை போன்றவர்களை வாழ வைத்த பல அப்பாக்கள்,  தனிமையிலும், பல அனாதை இல்லங்களிலும், தெருவில் ஆதரவின்றி தவிக்கும் நிலையும் இன்று பல இடங்களில் காணப்படுவது மிகவும் வேதனைக்குரியது. இந்நிலை மாறட்டும். அப்பாவின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் மகனாக,மகளாக வாழ்வோம்.

அடுத்த பதிவை படிக்க: பிள்ளைகள் வளர்ப்பும் பெற்றோரின் பொறுப்பும்

Leave a Reply