இல்லற வாழ்வில் வெற்றி பெற

இல்லறம் என்பது ஒரு இனிமையான வாழ்கை முறை. இந்த இல்லற வாழ்வில் எல்லோரும் வெற்றி பெற முடிகின்றதா? இல்லை. இல்லற வாழ்வில் வெற்றி பெற இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவியாய் இருக்கும் என நான் நம்புகின்றேன்.

காது கொடுத்து கேளுங்கள்

இல்லறம் என்ற உறவு இனிமையாக அமைய வேண்டும் எனில், உங்கள் வாழ்கைத் துணை சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து  கேட்க தொடங்குங்கள்.  நீங்கள் வெளியே செல்வீர்கள். வீட்டில் இருக்கும் உங்களது மனைவி தனது மனதில் இருக்கும் உந்துதல்களை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்? வீட்டில்  மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையில் நடக்கும் மன உளைச்சல்களை அவள் யாரிடம் சொல்வாள்?

அல்லது உங்கள் மனைவி வேலைக்கு செல்லும் நபராக இருந்தால் அங்கே பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. அவர்கள் அங்கே எதிர்கொள்ளும் சிக்கல்களை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல முடியும்? ஒருவேளை நீங்கள் பல்வேறு பிரச்சனைகளில் மூழ்கிக் கிடக்கும் நபராக இருக்கலாம். உங்கள் பிரச்சனை உங்கள் தலைக்கு மேல் இருக்கலாம்.

என்னத்தான் இருந்தாலும் உங்கள் மனைவி சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். இல்லை என்றால் நிலமை தலை கீழாக மாற்றிவிடும். நீங்கள் தீர்வு ஒன்றும் சொல்ல வேண்டாம். சும்மா காது கொடுத்து கொஞ்சம் கேட்டாலே போதும். நீங்கள் கேட்க தயார் இல்லை என்றால்  இந்த மனக் குமுறல்களை மூன்றாவது நபர்களிடம் அதாவது பிற ஆண்களிடமோ, சக தோழிகளிடமோ, தாய் தந்தை போன்ற உறவுகளிடமோ கொட்டித் தீர்க்க கூடும்.

இங்கே தான் பிரச்சனை தலை தூக்க ஆரம்பிக்கும். உங்கள் மேல் மனைவி வைத்திருக்கும் மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கும். மூன்றாம் நபர்களின் ஆதிக்கம் நமது குடும்பத்தில் தலை தூக்கும். இனிமையாக ஆரம்பித்த இல்லற வாழ்வில் புயல்கள் வீச ஆரம்பிக்கும். குடும்பம் அல்லது இல்லறம் என்ற கட்டமைப்பு சீர்குலையும் .இது கணவன்மார்களுக்கு மட்டுமல்ல மனைவிகளே உங்களுக்கும் பொருந்தும்.

ADVERTISEMENT

தினமும் உரையாட நேரம் ஒதுக்குங்கள்

கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உரையாட வேண்டும். ஆசை வரும்போது உறவில் மட்டும் ஈடுபட்டுவிட்டு அப்படியே சென்று படுத்து விடுவது மட்டும் அல்ல வாழ்வு. அதையும் தாண்டி இங்கு அனேகம் உண்டு. உங்களுக்குள் நீங்கள் எல்லா பணிகளையும் முடித்துவிட்டு இரவு உறங்கச் செல்லும் முன் சற்று நேரம் உரையாடுங்கள். அப்படி என்ன உரையாட வேண்டும் என கேட்கின்றீர்களா?

முதலில் நீங்கள் இன்று சந்தித்த நல்ல அனுபவங்களை உங்கள் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் அன்று சந்தித்த மோசமான அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது போல மனைவியும் தான் சந்தித்த நல்ல மற்றும் கெட்ட அனுபவங்களை கணவனோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உரையாடல் நடக்கும் போது அனேக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

பல நல்ல முடிவுகளை எடுப்பதற்கு இந்த உரையாடல் நிச்சயம் உதவி செய்யும். இந்த உரையாடல் மனம் திறந்தாக இருக்க வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக்கூடாது. அப்போது தான் உறவு சிக்கல்கள் வராது. உரையாடல் நடத்தவேண்டும் என்ற பெயரில் சண்டை வந்துவிட கூடாது.

எமது முந்தய பதிவை வாசிக்க:மனித உறவுகளின் முக்கியத்துவம்

ஒப்புக்கொள்ளுங்கள்

கணவன் மனைவிக்குள்  கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை. மனைவிக்கு விருப்பம் இல்லாத ஒன்றை கணவன் செய்யும்போதோ அல்லது கணவனுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை மனைவி செய்யும்போதோ இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. ஒரு வேளை நீங்கள் செய்வது உங்களது பார்வையில் சரி என தோன்றலாம்.

ADVERTISEMENT

அது உங்களது உடனிருப்பவருக்கு தவறாக படலாம். நான் சொல்வது தான் சரி என பிடிவாதமாக நீங்கள் இருந்தால், இந்த உரையாடல் உலகறியும் அளவுக்கு சென்று விடும். ஏன்? விவகாரத்து அளவுக்கு கூட செல்ல வாய்ப்பு அதிகம். ஒருவேளை உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் இந்த நிகழ்வுகளை அந்த குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்படக் கூடும்.

எனவே உங்களுக்குள் இருக்கும் கருத்து மோதல்கள் வலுத்து உறவு முறிவு வரை செல்லாமல் இருக்க வேண்டுமெனில், உங்களில் ஒருவர் உங்கள் கருத்து உண்மைதான் என்றாலும் நான் சொல்வது தவறுதான் என பொய்யாகவாவது ஒப்புக் கொள்ளுங்கள் உங்கள் துணையிடம்.

இதனால் எதுவும் குறைபட்டு போவதில்லை. கருத்து மோதல்கள்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதனால் உங்கள் இல்லற வாழ்கை உண்மையாகவே வளமை பெறும்.

வெற்றியில் தட்டிக் கொடுங்கள் 

உங்களது கணவனோ அல்லது மனைவியோ நியாயமான ஏதாவது வெற்றிகளை பெற்றுக் கொண்டால் உங்களுக்கு எதுவும் சம்மந்தம் இல்லாதது போல் கட்டிக் கொள்ளாதீர்கள். மனம் உவந்து பாராட்டுங்கள். உங்களுக்கு அந்த வெற்றியில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

உங்களது துணையின் வெற்றியினை கொண்டாடுங்கள். காரணம் இந்த பாராட்டிற்குப் பின்னால் மிகப்பெரிய உளவியல் மறைந்துள்ளது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்  பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் என ஒரு அனுபவ மொழி கூறுகின்றது. அதுபோல ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப்  பின்னாலும் நிச்சயம் ஒரு ஆண் இருக்கின்றான் என்பதில் ஐயம் இல்லை.

ADVERTISEMENT

உளவியல் உண்மை என்னவென்றால் நீங்கள் ஒரு சின்னம் சிறிய வெற்றியை பாராட்டி தட்டிக் கொடுத்தால் அந்த நபரால் பெரிய வெற்றிகளை எல்லாம் மிகச் சாதாரணமாக பெற்றுக் கொள்ள முடியும். காரணம் அந்த நபருக்கு என்னால் முடியும் என்கின்ற தன்னம்பிக்கை உருவாகும். உதாரணமாக ஒரு ஆசிரியார் தனது வகுப்பில், கல்வியில் சற்று பின் தங்கிய மாணவனை நீ எதற்கும் தகுதி இல்லாதவன்.

நீ மாடு மேய்க்க கூட லாயக்கு இல்லை. இது போன்ற  எதிர்மறையான வசை மொழிகளை வாரி வழங்குவதை விட்டு விட்டு, உன்னால் முடியும். உன்னில் நிறைய திறமைகள் இருக்கின்றது. அடுத்த முறை நீ முயற்சி செய்தால் உன்னால் இன்னும் அதிகம் முன்னேற முடியும். இது போன்ற நம்பிக்கை தரும்  வார்த்தைகளால் பாராட்டினால் அந்த மாணவனின் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மனைவியை பாராட்டுங்கள்

குடும்பத்தை பொறுத்தவரையில் உங்களது மனைவி உணவு சமைக்கும் போது பல்வேறு குறைபாடுகள் வர வாய்ப்புகள் அதிகம். நீங்கள் உணவு உண்ண துவங்கும்போது உணவில் உப்பு சற்று அதிகம் என்றால் முகத்தை சுளிக்காதீர்கள். மாறாக இலைமறைக் கனியாய் எடுத்துக் கூறுங்கள். அதாவது இன்று நீ சமைத்த உணவு மிகவும் அருமையாக உள்ளது.

பாராட்டுக்கள். அடுத்த முறை சமைக்கும் போது சற்று உப்பை குறைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். போன்ற வார்த்தைகளால் தட்டிக்கொடுங்கள். அடுத்த முறை சமைக்கும் போது அருமையான முறையில் சமையல் அமையும். ஒரு வேளை உணவு உண்மையாகவே  நன்றாகவே அமைந்திருந்தால் சற்றும் யோசிக்காமல் உடனடியாகவே பாராட்டுங்கள்.

நன்றாக இருக்கின்றது என ரசித்து உண்ணுங்கள். நீங்கள் உணவை பாராட்டி தட்டி கொடுக்கும்போது உங்கள் மனைவி அவருக்கு விருப்பமான துறையில் சாதனைகள் நிகழ்த்த வாய்ப்பாய் அமையும்.

ADVERTISEMENT

தோல்வியில் ஊக்கம் கொடுங்கள்

வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். வெற்றியும் உங்களை வரவேற்கலாம். அல்லது தோல்வி உங்களை அரவணைக்கலாம். உங்களது வாழ்க்கைத் துணை ஒரு வேளை தான் செய்த தொழிலில் தோல்வி அடைந்து விட்டார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் எள்ளி நகையாடாதீர்கள்.

இயற்கனவே வேதனையில் இருக்கும் நபரை மீண்டும் மீண்டும் நோகடிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் அந்த நபரின் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டு மீண்டும் தோல்வியில் உளல நேரிடும்.அனேக குடும்பங்களில் இது போன்ற சூழ்நிலை வரும்போது என்ன நடக்கின்றது தெரியுமா? நான் அன்றே உங்ககிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்.

இத செய்யாதீங்க. பெரிய நஷ்டம் வரும். குடும்பம் நடுத் தெருவுக்கு வரும். சாப்பாட்டுக்கே பஞ்சம் வரும். இப்ப பாத்தீங்களா? நான் சொன்னது அப்படியே நடந்ததா? இனியாவது திருந்துங்க. அந்த தொழிலை விட்டு விட்டு ஏதாவது வேலைக்கு போங்க. இது போன்ற  அர்ச்சனைகளுக்கு பஞ்சம் இல்லை. இப்படி செய்தால்  குடும்ப உறவுகள் எப்படி நிலைக்கும்? இல்லற வாழ்வு எவ்வாறு இனிமையாய் அமையும்?

வெற்றியில் மட்டும் அல்ல அரவணைப்பது. தோல்வியிலும் தட்டிக் கொடுங்கள். இந்த முறை நம்மால் வெற்றிபெற முடியாவிட்டாலும் அடுத்த முறை நம்மால் நிச்சயம் வெற்றி பெற இயலும். நானும் உங்களுக்கு என்னால் இயன்ற மட்டும் உதவி செய்ய தயாராய் இருக்கின்றேன். இது போன்ற தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளால் தைரியம் கொடுங்கள். உங்கள் வாழ்வு இனிமை பெறும்.

சுதந்திரத்தில் குறுக்கிடாதீர்கள்

இல்லற வாழ்வில் வெற்றி பெற இன்னொரு குண நலன் மிகவும் தடைக் கல்லாக இருக்கின்றது. அது என்னவென்றால், தனது வாழ்கை துணையின் சுதந்திரத்தில் தலை இடுவது. இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ ஆண்கள் தான். பல்வேறு குடும்பங்களில் இந்த நிகழ்வை காண முடிகின்றது.

ADVERTISEMENT

அதாவது மனைவியானவள்  தனது கணவன் தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என பேராசை கொண்டுள்ளார்கள். உதாரணமாக  பணம் சம்பாதித்து கொண்டு வரும் கணவன் அதை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிட வேண்டும். பின்னர் தனது சொந்த தேவைகளுக்கு தனது மனைவிடம் கெஞ்சவேண்டும்.

தனது  மனைவியை அறியாமல் ஒரு ரூபாய் கூட  சுதந்திரமாக செலவு செய்ய முடியாது. இந்த  நிலை பல இடங்களில் காண முடிகின்றது. அது போல சில கணவன்மார்களும் தனது மனைவியிடம் சிறிதளவு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு கணக்கு கேட்கின்றார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில் சிக்குண்ட மனைவிமார்களின் நிலையும் அந்தோ பரிதாபம்.

அது போல தனது மனைவி பிற ஆண்களிடம் நேரிலோ அல்லது அலைபேசியிலோ பேசிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றனர். மீறி பேசிவிட்டால் அவ்வளவு தான். சில மனைவி மார்களும் இப்படித்தான்.

தனது கணவன் தன்னை மட்டும் தான் சுற்றி வரவேண்டும். மற்ற பெண்களிடமோ  அல்லது நெருங்கிய உறவுகளிடமோ பேசிவிடக்கூடாது. இப்படி அடுத்தவர்   சுதந்திரத்தில் தலை இடாதீர்கள். உங்கள் துணையினை நம்பி அவர்களை  சுதந்திரமாய் வாழ விடுங்கள். குடும்ப உறவு சிறக்கும்.

காதலை வெளிப் படுத்துங்கள்

உண்மை காதல் என்பது திருமணத்துக்கு முன் செய்வதல்ல. திருமணம் முடித்துக் கொண்ட தம்பதிகள் பின்பு தான் உண்மையாக காதலிக்க முடியும். திருமண வாழ்வு சிறக்க உடல் உறவில் ஈடுபட்டால் மட்டும் போதும் என்ற எண்ணம் பலரிடம் காணப்படுகின்றது.

ADVERTISEMENT

இது தவறு. இல்லற வாழ்வு சிறக்க பொருளாதாரம்,சமூகத்துடன் உறவு, இறைநம்பிக்கை, உடல் சார்ந்த உறவு என்ற நான்கு சக்கரங்கள் சரியாக உருள வேண்டும். அப்போது தான் இல்லறம் என்ற வண்டி இனிய பணயத்தை தொடர முடியும். எப்படி நான்கு சக்கரம் கொண்ட  வாகனத்தின் ஒரு சக்கரம் பழுது பட்டாலும் அந்த வாகனத்தால் சரியாக இயங்க முடியாதோ, அது போல மேற்கண்ட நான்கு காரணிகளில் ஓன்று குறைபாட்டாலும் அந்த இல்லறம் சிறப்புற அமையாது.

எனவே ஒருவருக்கு ஒருவர்  குற்றம் மற்றும் குறைகள் காண்பதை விட்டு விட்டு, கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் ரசித்து,அன்புசெய்து வாழ முன் வருவோம். அப்போது தான் இல்லறம் இனிமையாய் அமையும்.

எமது அடுத்த பதிவை படிக்க:மாமியார் மருமகள் உறவு சிறக்க

One comment

  1. மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு கணவன் மனைவி உறவு அன்பு பாராட்டு மற்றும் பல கருத்துக்களை இந்த பதிவில் மிக சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார் அருமை

Leave a Reply