மாமியார் மருமகள் உறவு சிறக்க

மாமியார் மருமகள் உறவு சிறக்க என்ற இந்த பதிவில், குடும்ப உறவில் கணவன் மனைவி உறவிற்கு  அடுத்த நிலையில் உயர்ந்து நிற்பது மாமியார் – மருமகள் உறவே !. இந்த உறவு இன்று பல குடும்பங்களில் கேள்விக்குறியாகவும், அதே வேளையில் ஒரு சில குடும்பங்களில் தாய் – மகள் போன்றும் இருக்கின்றது.

மாமியார் உறவு எப்படி இருக்கவேண்டும்?

மாமி –  யார்?.  இது பல மருமகள்களின் கேள்விக் கணையாக  மாறியிருக்கின்றது. இந்த சூழ்நிலை இன்று நாடு, மொழி, மதம், இனம் கடந்து பரவலாக காணப் படுகின்றது. இதற்கெல்லாம் என்ன காரணம்? சிந்தித்துப் பார்த்தோம் என்றால், மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் காணப்படும் வயது இடைவெளி ஒரு மிக முக்கிய காரணிகளுள் ஒன்றாக  அமைந்து விடுகின்றது. உங்கள் மருமகளை குழந்தை போன்று பார்ப்பதை நிறுத்துங்கள். மாமியார்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

மருமகள் என்பவள்  உங்களது மகனை பத்திரமாக பராமரிக்க வந்த ஒரு புனிதமான உறவு. அது மட்டும் அல்ல, உங்களது  வாரிசுகளை இந்த உலகிற்க்கு அறிமுகம் செய்து வைக்க வந்துள்ள தேவதை. உங்கள் மகள் செல்லும் இடத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பது உண்டல்லவா? அது போல எனது மகன் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இடையில் உறவுச் சிக்கல்கள் நிகழாது. மாமியார் உடைத்தால் மண் குடம். அதையே மருமகள் உடைத்தால் பொன் குடம்.

இந்த  மனநிலையை அறவே விட்டொழியுங்கள். மருமகள் – இவளுக்கு இங்கு என்ன உரிமை?  இது பல மாமியார்களின் கேள்வி. கேள்வியை விடுங்கள். தீடீர் என ஒரு நாள்  உங்களது வாழ்க்கை  முடிந்து போனால்  மகனை யார் பராமரிக்க முடியும்  உங்கள் மருமகளைத் தவிர? இதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். உங்களது மகன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று தானே திருமணம் செய்து வைத்தீர்கள்? பின்னர் நீங்களே ஏன் அவர்களின் வாழ்க்கைக்கு  தடையாய் இருக்கின்றீர்கள்?

மருமகள் உறவு எப்படி இருக்கவேண்டும்?

ஒரு பெண் தன்னை ஏற்றுக் கொள்ளும் கணவனுக்கு மனைவியாக, மாமனார், மாமியாருக்கு மருமகள் என்ற உணர்வோடு  வீட்டிற்குள் முதல் அடியை எடுத்து வைக்கும்போது ஆயிரம் கனவுகளை சுமந்து வருவாள். உதாரணமாக தனது கணவனுக்கு விதம் விதமாக சமைத்து கொடுக்க வேண்டும். கணவனோடு வெளியில் செல்ல வேண்டும். தான் அந்த இல்லத்தை நிர்வகிக்க வேண்டும் போன்ற கனவுகள் மிஞ்சி நிற்கும். இப்படி பல ஏதிர்பார்புகளோடு வரும் பெண்ணுக்கு பல இடங்களிலும் மறுநாளே அந்த கனவுகள் உடையத் தொடங்கும்.

ADVERTISEMENT

காரணம்,  மருமகள் நினைப்பதை விட அந்த மாமியார் வேறு பல எண்ணங்களை தனது மனதில் வைத்திருக்கின்றார். அதாவது வரும் மருமகளை ஒரு குழந்தையாக பாவிக்கின்றனர். எனவே அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் மாமியார்களுக்கு தவறாகவே தெரியும். எதை செய்தாலும் அதை செய்யாதே இதை செய்யாதே என்று பலரும் மருமகள் சுதந்திரத்தில் தலையிடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அவர்களது வயதுக்  கோளாறுதான் காரணம் என்பதை மருமகள் புரிந்து கொண்டால் அங்கே உறவு சிறக்கும்.

பெரும்பாலும் இந்த உறவுச் சிக்கல் சமையல் அறையில் தான் ஆரம்பம் ஆகின்றது. பல குடும்பங்களில். இதுவரை தனது பாணியில் சமைத்துக் கொண்டிருந்த அந்த தாய், தனது மருமகள் சமையல் செய்வதை பெரும்பாலும் விரும்புவதில்லை. இதை மீறி மருமகள் சமைத்தாலும் அதில் ஆயிரம் குற்றங்களை கண்டுபிடித்து அந்த உணவை உண்ணாமல் தவிர்க்கும் மாமியார்கள் ஏராளம். இதுவரை தனது சமையலை உண்டு வந்த தனது கணவனும், மகனும் மற்ற உறுப்பினரும் தனது சமையலை வெறுப்பர்களோ என்ற பயம் காரணமாய் இருக்கலாம்.

எது எப்படியோ நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே. அவ்வாறு நீங்கள் விட்டுக் கொடுத்தாலும் நீங்கள் வேலை ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும்  வரும்தான். அதாவது செய்தாலும் குற்றம் செய்யாவிட்டாலும் குற்றம் என்ற நிலைதான் இங்கே காணப்படும். எனவே அவர்களால் முடியும் காலம் வரைக்கும் அவர்களே செய்யட்டும் என்று  கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே.

விட்டுக்குக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை. இது ஒரு அனுபவ மொழி. விட்டுக் கொடுங்கள். இந்த விஷயத்தில் காதிருந்தும் செவிடியாய் கண்ணிருந்தும் குருடியாய் இருந்தால் மாமியார் மருமகள் உறவு சிறக்கும். இந்த கருத்து மாமியாருக்கு  மட்டும் அல்ல மருமகளுக்கும் பொருந்தும்.

எமது முந்தய பதிவை வாசிக்க:இல்லற வாழ்வில் வெற்றி பெற

ADVERTISEMENT

மாமியார் மருமகள் உறவு மேம்பட

கீழ் காணும் ஆலோசனைகளை சற்று கடைபிடித்தால்  மாமியார் மருமகள் இடையே உள்ள உறவு புத்துயிர் பெறும். குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். இது மாமியாருக்கும் பொருந்தும். மருமகளுக்கும் பொருந்தும்.

ஈகோ வேண்டாம்

இன்று அனேக பிரச்சனைகளுக்கு ஈகோ ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது. நான்தான் பெரியவள். எனது சொற்படிதான் எல்லாம் நடக்கவேண்டும். எனது விருப்பத்துக்கு மாறாக எதுவும் இங்கு நடக்கக்கூடாது. எல்லாம் என்னை கேட்டுத்தான் செய்யவேண்டும். இது போன்ற எண்ணங்கள் உங்களுள் இருந்தால் அறவே அதை மாற்றிவிடுங்கள். உங்கள் உறவு பூந்தோட்டமாய் மாறும்.

புரிதல் தேவை

எனது மகனை ஆயுள் முழுவதும் அன்பாய் வாழ வைக்க வந்தவள் எனது மருமகள். அவர்கள் வாழ்க்கையில் நான் குறுக்கிட விரும்பவில்லை. அவர்கள் மன மகிழ்ச்சியாய் வாழட்டும் என மாமியாரும், அவர்கள் வயது கோளாறால் ஏதோ தவறுதலாக சொல்லி என்னை காயப்படுத்தி விட்டார்கள். மற்றபடி அவர்கள் நல்லவர்கள். இது போன்று ஒருவருக்கு ஒருவர் இடையில் சரியான புரிதல் மட்டும் இருந்துவிட்டால் வாழ்கை நந்தவனம் ஆகும்.

உதவி செய்தல்

உதவி என்பது எங்கு எப்போது யாருக்கு வேண்டுமானாலும் தேவைப்படலாம். ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் இருவரில் யாருக்காவது உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் பழையதை எதுவும் மனதில் வைக்காதவாறு ஓடோடி சென்று உதவி செய்யுங்கள். அந்த உதவியினை ஏற்றுக் கொள்வதும், அல்லது ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில்  சில புரிதல்கள் ஏற்பட்டு உறவில் மற்றம் நிகழக்கூடும்.

விட்டுக் கொடுத்தல்

வீட்டில் மருமகளுக்கு என்று சில உரிமைகள் உண்டு . அதே நேரம் மாமியாருக்கும் சில உரிமைகள் உண்டு. தனது கணவனை முழுவதும் பராமரிக்கும் உரிமை உங்களது மருமகளுக்கே உரியது. அதே நேரம் வயதில் முதியவர் என்ற முறையில் அந்த வீட்டை பாதுகாப்பது, சில ஆலோசனைகளை சொல்வது போன்ற உரிமை மாமியாருக்கும் உண்டு. ஒருவேளை இதில் ஒரு அத்துமீறல் நிகழ்ந்தால் சற்று விட்டுக் கொடுங்கள். உங்கள் உறவை உலகே மெச்சும்.

ADVERTISEMENT

மதித்தல்

மதிப்பு என்பது மனிதப் பிறவி எடுத்த அனைவரும் எதிர்பார்க்கும் ஓன்று. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மதிக்கப்பட வேண்டும் என விரும்பினால் நீங்கள் பிறரை மதியுங்கள். ஒன்றை கொடுத்தால்தான் இன்னொன்று கிடைக்கும் என்பது இயற்கையின் விதி. ஆதலால் மதிப்பை கொடுத்து மதிப்பை பெறுங்கள். உங்களை மற்றவர்கள் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் உரிய மதிப்பை கொடுங்கள்.காலப் போக்கில் எல்லாம் மாறும்.

அக்கரை மற்றும் கரிசனை

உங்கள் உடன் வாழ்பவர் உங்களுக்கு என்ன தீங்கு செய்தாலும் பதிலுக்கு நீங்கள் தீங்கு செய்யாதீர்கள். காரணம் தற்போது உங்களை புரிந்து கொள்ளும் சூழ்நிலையில் அவர்கள் இல்லை. எனவே பொறுமை உங்களுக்கு மிக அவசியம். அதே நேரம் அவர்கள் பிரச்னைகளால் பாதிக்கப் படும்போது அவர்கள் நலனில் அக்கரை காட்டிப்பாருங்கள். அவர்கள் மேல் நீங்கள் கரிசனை காட்டிப்பாருங்கள். அப்போது அவர்களுக்கு உங்கள் அன்பு புரியும். உங்கள் உறவும் உச்சம் பெறும்.

திறந்த மனதோடு உரையாடுங்கள்

பிரச்சனைகள் அதிகரிக்க காரணம், பல குடும்பங்களிலும் திறந்த மனதுடன் உரையாடல் இல்லாதது தான். உள் ஓன்று வைத்து புறமொன்று பேசுவது பிரச்சனைகளின் தன்மையினை கூட்டுகின்றது. எனவே எந்த உறவானாலும் சரி, அது நிலைக்கவேண்டும் எனில் உள்ளதை உள்ளபடியாக, அதே நேரம் பிறரின் மனம் காயப்படும் படி அல்லாமல், இலைமறைக் கனியாக சொல்லிவிடுங்கள். அந்த நேரத்தில் சில சலசலப்புகள் வந்தாலும் பிரச்சனைகள் ஓய்ந்து உறவுகள் மலரும்.

 மாமியார்களுக்கு 

மாமியார்களே கொஞ்சம் கேளுங்கள். உங்கள் மகளை எங்கே திருமணம் செய்து கொடுத்தாலும் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் எனத்தானே நீங்கள்  விரும்புகின்றீர்கள். அவர்களுக்கு ஒரு சிறு துன்பம் அவர்களது மாமியாராலோ  அல்லது மற்ற உறவினர்களாலோ  ஏற்பட்டால் உங்களால் பொறுக்க முடியுமா? இதுபோன்று தானே உங்களது மருமகளை பெற்ற தாய்க்கும் இருக்கும். உங்கள் மகளுக்கு ஒரு நீதி மருமகளுக்கு ஒரு நீதியா? மருமகளை உங்கள் சொந்த மகளாக பாருங்கள். உங்கள் உறவில்  நறுமணம் கமழும்.

மருமகள்களுக்கு

மருமகள்களே எதற்கெடுத்தாலும் உங்கள் மாமியாரை குறை கூறவேண்டாம். அவர்கள் உங்களைக் குறித்து அவதூறு பரப்பினாலும், நீங்கள் அவர்களில் கண்ட நல்ல குணங்களை மட்டுமே மற்றவர்களிடம் சொல்லுங்கள். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”  அதாவது உங்களுக்கு துன்பம் தருபவர்களுக்கு அவர்கள் வெட்கப் படும்படி அவர்களுக்கு நன்மையை செயுங்கள் என்கின்றது குறள். இதுவே அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய தண்டனை ஆகும்.   இதை புரிந்து கொண்டால் உங்கள் உறவு செழிக்கும்.

ADVERTISEMENT

பொறுமை காக்கவேண்டும் 

குடும்பத்தில் இருக்கும் மாமியார் தனது மருமகளை மகளாக பார்க்கும் நிலை உருவானால் அங்கே சண்டை சச்சரவுகள் இருக்காது. அது போல மருமகளும் தனது மாமியாரை தனது சொந்த தாயாக பார்த்தால் உறவுகளில் சிக்கல் இருக்காது. இங்கே மருமகள்கள் பொறுமையாய் போனாலே பல குடும்பங்கள் நிம்மதியாய் வாழ்ந்திருக்கும். தனது இளமைக்கு எங்கே இழுக்கு வந்துவிடுமோ எனக்  கருதி மருமகள்கள் எதிர்ப்பை பலமாக பதிவு செய்வதால் தான் உறவுகள் உடைகின்றன. எனவே மருமகள்களே பொறுமையினை கையாளுங்கள். உறவுக்கு உயிர்கொடுங்கள்.

கணவனின் பரிதாபம் 

மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையில் நடக்கும் பனிப்போரில் என்னமோ மிகவும் பாதிக்கப்படுவது அந்த வீட்டில் வாழும் கணவன்தான். அவனுக்கு தன்னை பெற்று ஆளாக்கிய  தாயும் வேண்டும். தனது எதிர்கால தூணான மனைவியும் வேண்டும். தாயையும் பகைக்க முடியவில்லை. மனைவியையும் பகைக்க முடியவில்லை. அம்மாவுக்கு ஆதரவாக நின்றதால் மனைவி என்ற உறவை இழந்தவர்கள் ஏராளம்.

மனைவிக்கு துணையாய் நின்றதால் அம்மா என்ற உறவை இழந்தவர்கள் ஏராளம். ஒரு நபரை அவரது உறவிலிருந்து பிரிப்பது மிகப்பெரிய துரோகம். உதாரணமாக மனைவி தனது  சுய நலத்துக்காக கணவனை தனது தாயிடம் இருந்து பிரிப்பது  இயற்கைக்கு எதிராக செயும் துரோகம் அல்லவா ?. அந்த அன்னை இந்த மகனை பெற்றதால் அல்லவா உங்களுக்கு  ஒரு அருமையான கணவன் கிடைத்தான். பின்னர் ஏன் இந்த நன்றி கெட்டத்தனம்?

அதுபோல மகன் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அல்லவா நீங்கள் திருமணம் செய்து வைத்தீர்கள்? பின்னர் ஏன் நீங்கள் உரிமை கொண்டாடி உங்கள் மகனை மருமகளிடம் இருந்து பிரிக்க நினைக்கின்றீர்கள்? இது நீங்கள் பெற்ற மகனுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் அல்லவா? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் வாழ்வது ஏதோ கொஞ்சம் காலமே. வாழும் நாட்கள் நரகமாய் போய் விட்டால் சொர்க்கத்தை என்று அனுபவிப்பது? நான் என்ற அகந்தையை விட்டொழித்து ஆனந்தமாய் வாழ முன்வருவோம்.

எமது அடுத்த பதிவை படிக்க:வெற்றிக்குத் தேவை இலட்சியமே 

ADVERTISEMENT

Leave a Reply