இந்தியாவின் விடிவெள்ளி இளைஞர்களே

”இளைஞர்களே தூங்கியது போதும் துயில் எழுந்து வாருங்கள்! மயங்கியது போதும் புதியபாதை காண வாருங்கள்! தயங்கியது போதும் தடைகளைத் தாண்டி வாருங்கள்!” இந்த அழைப்பு குரல்கள் இன்று இளைஞர்களை பார்த்து நான்கு திசைகளிலும் கேட்ட வண்ணமே உள்ளது. ஆம்! இந்தியாவின் விடிவெள்ளி இளைஞர்களே! இளைஞர்களின் சக்தி மகத்தானது.

ஆற்றல் மிகு இளைஞர்கள்

“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது, சிறுத்தையே! வெளியே வா ! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுவில் புலியென செயல்  செய்ய புறப்படு வெளியில்!!’ இது இன்றைய இளைஞர்களுக்கு மிகவே பொருந்தும்.

இளைஞர்களின் சக்தி  மிகவும் ஆற்றல் வாய்ந்தது. இதனை காட்டாற்று வெள்ளத்துக்கும் ஒப்பிடலாம். இளைஞர்களின் சக்தி மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்து செல்லக் கூடியது. இந்த சக்தியை அதிகார பலத்தால் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அன்பு என்ற அணை கட்டி இவர்களின் சக்தியை நெறிப்படுத்த முடியும்.

இளைஞர்களின் சக்தியை ஒரு சமூகம் அல்லது நாடு எப்படி பயன் படுத்துகிறது என்பதில்தான்  அந்த நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. இளைஞர் சக்தியை ஒருங்கிணைத்து அவர்களை முறையாக பயன்படுத்தினால் பெரிய மாற்றங்களை இந்த சமூகம் காணும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தாழ்வு மனப்பான்மையினால் பாதிப்பு

பொதுவாக இளைஞர்கள் என்பவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பெரும்பான்மையான இளைஞர்கள்  தாழ்வு மனப்பான்மையினால் தங்களது சக்தியை உணர்ந்து கொள்ளாமல் ஓய்ந்திருப்பதையும் ஆங்காங்கே காண முடிகின்றது.

ADVERTISEMENT

அதாவது பொறியில் சிக்குண்ட எலி போல மாட்டிக் கிடக்கின்றார்கள். ஏன் அப்படி சொல்கின்றேன் என்றால் சாதாரணமாக ஒரு எலியால் மரத்தை அதன் கூரிய  பற்களால் துளையிட முடியும். காரணம் அது எந்தவித பதட்டமும் இல்லாமல்  தான் நினைத்ததை நடத்திக் காட்டுகின்றது.

அதே நேரம் அந்த எலி ஒரு பொறியில் மாட்டிக் கொண்டால்  அதன் வழி அடைபட்டதை உணர்ந்து கொண்டு  அதிலிருந்து எப்படி தப்பிப்பது என வழி தெரியாமல் பதட்டத்துடன் அங்கும் இங்குமாக உலாவிக்கொண்டு இருக்கும்.

பொருளாதார பாதிப்பின் தாக்கம்

இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், பதட்டம் காரணமாக  மரத்தை துளையிடும் கலையை அது மறந்துவிட்டது. வசமாய் மாட்டிவிட்டது. இது போல்தான் இன்றைய பல இளைஞர்களும் தான் வாழும் அல்லது வளரும் குடும்பத்தின் அல்லது சமூகத்தின் பொருளாதார பாதிப்புகளினால் சிக்குண்டு தனது திறமையை உணராமல் சக்தியை பயன்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றர்கள்.

இன்னும் இதுபோன்ற பல காரணங்களுக்காய் சுயத்தை இழந்து வாடி நிற்கின்றர்கள். இப்படிப்பட்ட  இளைஞர்களை இனம் கண்டு  அவர்களின் நெருக்கடி மத்தியிலும்  தங்களது  திறமையியை உணரவைத்து  ஆற்றல் மிகுந்த  இளைஞர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இந்த சமூகத்துக்கும், அரசுக்கும் உண்டு.

யார் இளைஞர்கள் ?

15 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட திருமணமாகாத  ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இளைஞர்களே! என ஐ.நா சபை அறிவித்துள்ளது.  இந்தியாவில் இன்று இந்த வயது வரம்பிற்குள் இருக்கக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை  50 சதவீதம் ஆகும்.

ADVERTISEMENT

காலில் மிதிபடும் கற்கள் எல்லாம் சிலைகளாக மிளிர்வதில்லை. செம்மையாக செதுக்கப்படும் கற்களே சிலைகளாக மிளிரும்.  அதேப் போன்று தடைக்கற்களை உடைத்தெறிந்து சாதனை சிற்பங்களை  உருவாக்கக் கூடிய வல்லமை பெற்றவர்கள் தான் இளைஞர்கள்.

இந்த இளைஞர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு நாட்டின் பெரியவர்களுக்கு உண்டு. ஆனால் இன்று இளைஞர்கள் பல இடங்களில் ஒதுக்கி வைக்கப் படுகிறார்கள். ஓரங்கட்ட படுகிறார்கள். இளைஞர்கள் என்றாலே தீண்டத் தகாதவர்கள் போன்று ஒதுங்கி போகின்ற மனிதர்களும் உண்டு.

ஒரு நாடு இளைஞர்களின் சிந்தனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும், முக்கியத்துவம் வழங்கும் போது அந்த நாடு வலிமை பெற்ற நாடாக திகழும் என்பது நாம் மறுக்க முடியாத உண்மை. இளைஞர்களின் சக்தி என்பது ஒரு நாட்டிற்கு யானை பலம் போன்றது.

இந்த இளைஞர்களின் சக்தியை ஆக்க சக்தியாகவும் பயன்படுத்தலாம். அழிவின் சக்தியாகவும் பயன்படுத்தலாம். ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் மிகப்பெரிய சொத்து இளைஞர்களே.

சிதறிக் கிடக்கும் இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தி வழி நடத்துவதற்கு இந்த சமூகம் தயார் என்றால் எல்லாத்துறைகளிலும்  மாபெரும் மாற்றத்தை ஒரு புரட்சியை இந்தியாவால் நிகழ்த்த முடியும்.

ADVERTISEMENT

ஏன், இந்தியாவை உலக அரங்கில் முதல் இடத்தில் கொண்டு வர முடியும். இளைஞர் சக்தி இணைந்தால் தான் இந்தியாவின் எதிர்காலம் வளமாக இருக்கும். எனவே இளைஞர்களும் ஒதுங்கி செல்லாமல் இந்தப் பொறுப்புகளை ஏற்க கூடிய விதத்தில் முன்வர வேண்டும்.

எமது முந்தய பதிவை வாசிக்க: மனதை தொடர்பு கொள்ள டெலிபதி

இன்றைய இளைஞர்களின் நிலை

இன்றைய காலகட்டத்தில் வாழும் இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை. பெரும்பாலும் இன்றைய ஆதிக்க சமூகம் இளைஞர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் உண்மை.

இளைஞர்கள் பல சாதனைகளை நிகழ்த்திய போதிலும் அவை இந்த சமூகத்தின் பார்வைக்கு இன்னும் வராமல் இருக்கின்றன. ஏனெனில் இளைஞர்களின் திறமை வெளியே வந்தால் ஆதிக்க மற்றும் பிற்போக்கு சக்திகளின் பல கண்டு பிடிப்புகள்  செயலற்றுப் போகும் என்ற ஒரு பயமே.

இன்று ஒவ்வொரு   நாட்டிலும்  தவிர்க்க முடியாத சக்தியாக மாறிக் கொண்டிருக்கின்றது இளைஞர் சக்தி. பல புதிய முயற்சிகளுக்கு சொந்தக்காரர்களாகவும், புதுமைகளை உள்வாங்கும் திறன் உடையவர்களாகவும், தளராத முயற்சி உடையவர்களாகவும் இன்றைய இளைஞர்கள் காணப் படுகின்றார்கள்.

ADVERTISEMENT

இவர்களது திறமைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமூக அமைப்பு இருக்கும்  என்றால் இவர்களின் சக்திகளை நெறிப்படுத்தி மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும். இவ்வாறு சாதனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காத இளைஞர்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

போதை பொருள்களின் தாக்கம்

இன்னொரு புறம் போதை மற்றும் ஒழுக்கக் கேடான பல   பழக்கங்களுக்கு அடிமை ஆகி தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள் பல  இளைஞர்கள். ஏன் இந்த நிலை?

இந்த சீரழிந்த கலாச்சாரம் இப்படியே தொடர்ந்தால் அடுத்த தலைமுறைகளின் கதி என்ன? இவர்களின்  பாதச் சுவடைத் தானே புதிய தலைமுறை பின்பற்றும். இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம்   இளைஞர்களுக்கு தேவையான பயிற்சி கிடைக்கவில்லை என்பதே உண்மை.

முறையில் மாற்றங்கள்

இந்தியாவின் கல்வி முறையில் மாற்றங்கள் தேவை. மிக முக்கியமாக, வளர் இளம் பருவத்தில் முறையான, தெளிவான பாலியல் குறித்த கல்வி வழங்கப்பட வேண்டும். மற்றும் போதையினால் ஏற்படும் தாக்கங்கள் என்ன போன்ற தெளிவுகள் வழங்கப் படவேண்டும். இவ்வாறு தொடக்கத்தில் இருந்தே முறையான பயிற்சியை வழங்கினால் ஒரு உன்னதமான, ஆற்றல் மிக்க  இளைஞர் சமூகத்தை உருவாக்க முடியும்.

இளைஞர்களையே நம்பி இருக்கும் நாடுகள்

இன்று எந்த நாட்டை நீங்கள் எடுத்துக் கொண்டாலும், அந்த நாட்டில் இருக்கக்கூடிய காவல்துறை, ராணுவம் உட்பட பாதுகாப்பு துறைகளை நாம் பார்ப்போம் என்றால் எல்லா துறைகளிலும் இளைஞர்களையே பயன்படுத்துகின்றார்கள்.

ADVERTISEMENT

இதைத் தவிர வேலைவாய்ப்புகளை கொடுக்கக்கூடிய துறைகளாக இருந்தாலும் சரி, மற்ற எந்த துறைகளாக இருந்தாலும் சரி இன்றைய இளைஞர்களை நம்பியே அனைத்து துறைகளும்  செயல்படுகின்றன.

இந்த இளைஞர்கள் தான் நாட்டை இன்று வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் உண்மை.  ஆக எந்த நாட்டின் எந்தத் துறையும் முதியவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வதில்லை.

காரணம், இளைஞர்கள் தான் ஒரு நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். சில நாடுகள் தங்களது மக்கள் தொகையில் கணிசமான அளவு இளைஞர்களை கொண்டிருப்பது அந்த நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமே.

சர்வதேச  இளைஞர் தினம்

நமது இந்திய தேசத்திலும் 50 சதவீதத்திற்கு மேல் இளைஞர்கள் இருப்பது மிகவும் பெருமைக்குரியதே. நமது நாடு சுதந்திரம் அடைய காரணமாக இருந்ததும் அன்றைய இளைஞர்களே.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி சர்வதேச  இளைஞர் தினமாக  கொண்டாடப்பட்டு  வருகின்றது. பொதுவாக ஒரு நாட்டின் சொத்தாக கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி, அவர்களிடம் வெற்றி மனப்பான்மையை உருவாக்குவதே இத்தினத்தில் நோக்கம் ஆகும்.

ADVERTISEMENT

விவேகானந்தரின் சூளுரை

100   இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை தலைசிறந்த நாடாக மாற்றிக் காட்டுகின்றேன் என சூளுரைத்தார்  வீரத்துறவி விவேகானந்தர். இப்போது புரிந்திருக்கும்  இளைஞர்களின் சக்தி என்னவென்று. ஆம் இளைஞர்களின் ஆற்றல் அபரிமிதமானது.

இன்று பல  இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களது சக்தியியை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்திட துணிய வைக்கின்றர்களே! அந்த இளைஞர்களும் சாகத் துணிந்து  பல நாசகரமான செயல்களையும் செய்கின்றார்களே!  உயிரையே  கொடுக்கத் துணியும் அளவுக்கு   இளைஞர்களை  தயார்படுத்த முடியும் என்றால்,

இந்த சமூகம்  நினைத்தால், சரியான பயிற்சி வழங்கி அவர்களை சாதனை நாகயர்களாக உருமாற்ற முடியாதா? நிச்சயம் முடியும். அந்த வழிகாட்டலை அரசோ அல்லது அமைப்புகளோ முன்னடுக்குமாயின் அத்தோடு இணைந்து நமது பங்களிப்பையும் தருவது நமது கடமையாகும்.

இந்தியாவின் வளர்ச்சியில்  இளைஞர்கள்

இளைஞர்களே நீங்கள் மிகவும் சக்தி மிகுந்தவர்கள். உங்களால் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்த முடியும். இந்திய தாய்த்திரு நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் இன்னும் அதிகமாக செய்ய முடியும். அரசுத் துறைகளில் இணைந்து மட்டுமல்ல, பல தனியார் துறைகளிலும் இணைந்து உங்களது பங்கேற்பை நீங்கள் நமது தேசத்திற்கு  வழங்க முடியும்.

ஒரு நிறுவனம் வளர்கிறது என்றால் அதில் பல தொழிலாளர்கள் வாழ்வார்கள். அந்த நிறுவனத்தின் சேவையால் நாட்டிற்கும் வரி கிடைக்கும். நாடும் வளரும். அதுபோல் நீங்கள் சுய தொழில்களை செய்கின்றவர்கள் ஆக இருந்தால் நீங்களும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவி செய்கின்றவர்களே.

ADVERTISEMENT

எப்படி என்றால், நீங்கள் ஒரு தொழிலை ஆரம்பித்து உள்ளீர்கள் எனக் கொள்வோம். ஆரம்பத்தில் அந்த தொழிலை நீங்கள் மட்டும் மேற்கொண்டாலும் நாளடைவில் அந்த தொழிலை விரிவுபடுத்தும் போது உங்களுக்கென பல பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

ஆக பல புதிய நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழில் விரிவடைய கூடிய காலகட்டங்களில் தொழிலை நடத்தக் கூடிய உங்களுக்கு லாபம் கிடைக்கும். அதிலிருந்து நிச்சயமாக ஒரு பகுதி அரசுக்கு வரியாக செலுத்துவீர்கள்.அந்த வரிப்பணம் ஆனது நாட்டின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு உதவி புரிகிறது.

இதனால் தான் சொன்னேன் மறைமுகமாக நீங்கள் நாட்டிற்கு உதவி செய்கின்றீர்கள் என்று. அதுபோல  கொரோனா  பேரிடர் காலகட்டங்களில் எல்லாம் நமது பாரத நாடு, தொழில் துறைகளின் வீழ்ச்சியால் மிகக் கடுமையான  பொருளாதார பேரழிவை  சந்தித்த போதிலும், இளைஞர் சக்தி பல புதிய சிந்தனைகளை புகுத்தி, தொழில் ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்தி,

உதாரணமாக டிஜிட்டல் துறையில் சாதனைகளை நிகழ்த்தி  இந்தியாவின் பொருளாதாரத்தை  மீட்டெடுத்ததையும்  இந்தியாவிற்கு மறு வாழ்வு கொடுத்ததை வரலாறு ஒரு நாளும் மறக்காது. உலகில் கண்டுபிடிக்கப் பட்ட அனைத்து படைப்புகளும் இளைஞர்களின் கைவண்ணமே.

அன்றய சாதனைகளானாலும்  சரி இன்றய கண்டு பிடிப்புகளானாலும் சரி அனைத்துக்கும் சொந்தக் காரர்கள் இளைஞர்களே . ஆக நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ தாராளம் கிடைத்துக்கொண்டு இருக்கின்றது என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.

ADVERTISEMENT

இறுதியாக சில வரிகள்

நாம் வாழும் வீட்டிலும்  இளைஞர்கள்  இருக்கக் கூடும் . முதலில் நாட்டை மாற்றும் செயலை விட்டுவிட்டு நமது வீட்டில்  இருக்கும் இளவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அவர்கள் கருத்தை மதிப்போம். பாதை தவறும் பட்ச்சத்தில் பக்குவமாய் வழி காட்டுவோம். இளைஞர்களை உருவாகும் பணி நமது இல்லத்தில் இருந்தே துவங்கட்டும்.

எமது அடுத்த பதிவை படிக்க: இன்றைய சூழலில் மனித நேயம்

 

 

Leave a Reply