இன்றைய சூழலில் மனித நேயம்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  இருக்கின்ற அன்பு செயல்களின் வெளிப்பாடே மனித நேயம். இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் மனிதன் மனிதனை மதிப்பதும், அவனை  மாண்புடனே நடத்துவதுமே மனிதநேயம். முற்காலங்களில்  பூமிப்பந்தில் மலிந்து கிடந்த மனிதநேயம் தற்போது தடம் மாறி நிற்பது வேதனைக்குரியதே.

அழிந்துவரும் மனிதநேயம்

முன் காலங்களில் மக்கள் ஒன்றாக இணைந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் . ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அந்த கிராமத்தில் வாழ்ந்துவரும் அனைவரும் உறவினர்களாகவே இருப்பார்கள். காரணம் ஒரு பெற்றோருக்கு குறைந்தது 12 பிள்ளைகளுக்கு மேல் இருந்தார்கள் என்பது வரலாறு.

ஒரு தாய் தந்தைக்கு பல பிள்ளைகள் இருந்த போதும், அவர்கள் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இணைந்து வாழ்ந்தார்கள். அங்கே ஒளிவு மறைவற்ற பகிர்தல் இருந்தது. விட்டுக் கொடுத்தல்  இருந்தது. சுயநலமற்ற ஒரு வாழ்வு இருந்தது.

ஒன்றாய் இணைந்து வாழ்வதால் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் இருந்தாலும் கதிரவனை கண்ட பனிபோல அவை சிறிது நேரத்தில் காணாமல் போனது. அன்றைய கால கட்டத்தில் ஒரு திருமண நடைபெறும் வீடென்றால் தூரத்து உறவென்றால் கூட உடனிருந்து பல உதவிகளை செய்வது வழக்கமாக இருந்தது.

அதுபோல ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் ஊரே கூடி அந்த குடும்பத்துக்கு உதவிசெய்து, ஆறுதலாகவும் இருப்பார். ஒருவருக்கு உடல்நலம் சரி இல்லை என்றால் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கூட அவர்களை சந்தித்து தனது உடனிருப்பை உணர்த்திய காலகட்டம் அன்று இருந்தது,

ADVERTISEMENT

நாகரிக வளர்ச்சியின் தாக்கம்

ஆனால் இன்றோ நிலைமை நேராக தலைகீழ் ஆகிவிட்டது. உலகம் நாகரிக வளர்ச்சியினால் ஒவ்வொருவரின் உள்ளம் கையிலும் சுருங்கிவிட்டது எனலாம். தாராளமாக பிள்ளைகளை பெற்றெடுத்த காலங்கள் மாற்றி இரண்டு அல்லது ஓன்று என மாறிவிட்டது. அதிலும் பலபேருக்கு அந்த பாக்கியமே இல்லாமல் போய்விட்டது.

கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த அந்த இன்பமான அனுபவம் மாறி  தனிக் குடித்தனம் என்கின்ற சுயநல கலாச்சாரம் அரங்கேறிவிட்டது. அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் எதுவும் தெரியாமல் போய்விட்டது. பண வசதி இருந்தாலும் தேவையில் இருக்கும் ஒருவர் உதவி என  கேட்டால் இல்லை என பதில் கூறும் அளவுக்கு மனங்கள் சுருங்கிவிட்டது.

ஒருவர் விபத்தில் அல்லது எதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டால் முன்வந்து உதவி செய்யும் காலங்கள் மாறி செல் போனில் அதை படம்பிடிக்கும் காலமாக மாறிவிட்டது. சுருங்கச் சொன்னால் மனிதநேயம் மரத்துப் போய்விட்டது.

நாகரிக வளர்ச்சியின் தாக்கத்தால் மனித நேயம் அழிந்து கொண்டே வருகின்றது. ஆனாலும் ஆங்காங்கே ஒருசில மனிதநேய செயல்கள் நடைபெறுவது மனித நேயம்  முழுமையாக அழிந்து போகவில்லை என்பதை உணர்த்துகின்றது.

குடும்பங்களில் துவங்கும் மனிதநேயம்

மனித நேயம் என்பது ஏதோ கடையில் வாங்கக் கூடிய ஒரு பொருள் அல்ல. அது உணர்வு தொடர்பானது. ஆபத்தில் இருக்கும் ஒரு நபர் எனக்கு யாராவது உதவி செய்யமாட்டார்களா  என ஏங்கி தவிக்கும் நேரம், அவரது உணர்வை இன்னொருவர் புரிந்துகொண்டு, அந்த நபரை காப்பாற்ற உதவி செய்வது தான் மனித நேயம்.

ADVERTISEMENT

உதவி என்றவுடன் பண உதவி மட்டும் அல்ல. ஆளால் ஆன உதவியாக கூட இருக்கலாம். உதாரணமாக பக்கத்து நண்பர்  வீட்டில் நடு இரவில் ஒருவருக்கு திடீர் என கடுமையான உடல்நல பிரச்சனை என வைத்துக் கொள்வோம். உடனடியாக மருத்துவமனை கொண்டுச்  செல்லவேண்டும். உதவிக்கு யாரும் இல்லை.

அந்தநேரம் நீங்கள் உடல் களைப்பால் நல்ல தூக்கம். அப்போது உங்களுக்கு உதவி கோரி அழைப்பு வருகின்றது. அந்த நேரம், நான் இப்போது வர இயலாது. நீங்கள் வேறு யாரையாவது  அழைத்து செல்லுங்கள்.

இவ்வாறு நீங்கள் சொன்னால் மனித நேயத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுகின்றீர்கள் என அர்த்தம். மாறாக அந்த களைப்பையும் பொருள்படுத்தாமல் தன்னார்வத்தோடு  உதவ முன்வருவீர்கள் என்றால் நீங்கள் மனிதத்தை மதிக்கின்றீர்கள் என பொருள்.   இன்றைய கால கட்டத்தில் மனித நேயம் என்பது நாகரிக வளர்ச்சியின் காரணமாக குறுகிப் போய்விட்டது எனலாம்.

தனி குடும்பங்களின் நிலை

இன்றைய தனி குடும்பங்களில் கூட மனிதநேயம் துளிக் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது. உதாரணமாக, பெரும்பாலானவர்கள் வீட்டில் முதியவர்கள் இருப்பார்கள்.  மகன்,மகள், மருமக்கள் மற்றும் பேரப் பிள்ளைகள் போன்ற  உறவுகள் இந்த முதியவர்களுக்கு இருக்க வாய்ப்பு அதிகம்.

இதில் பல குடும்பங்களில் முதியவர்கள் மதிக்கப் படுவதில்லை. அவர்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப் படுவதில்லை. சில மகன்களும், மகள்களும், மருமகளும் பெரியவர்களின்  வயதான கால தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் இருப்பதின் வழியாக மனிதத்தை சிதைக்கின்றார்கள்.

ADVERTISEMENT

அந்த வீட்டில் உள்ள சிறுவர்கள் இவர்களுக்கு ஏதாவது உதவ முன் வந்தாலும்  தொடர்புடைய பெற்றோர்கள்  அவர்களை தடுப்பதன் வழியாக மனிதத்துக்கு எதிராக செயல்படுகின்றார்கள். வீட்டில் இருக்கும் இளைஞர்கள் சமூகத்தில் நடக்கும் மனித நேய மீறல் பிரச்சனைகளை காணும்போது அவர்கள்   குரல்கொடுக்க துணிகின்றார்கள்.

அப்போது  நமக்கு எதற்கு வம்பு? ஒழுங்காக வீட்டில் இரு. என தடை செய்யும் பெற்றோர்கள் மனிதநேயத்தை குழிதோண்டி புதைக்கும் பணியை செய்கின்றனர். இப்படித் தான்   குடும்பங்களில் இருந்து மனித நேய செயல்கள் உருவாக்கம் தடைபடுகின்றது. இந்த செயல்கள்  மாற்றம் பெற வேண்டும். சமூகத்திலோ அல்லது நாட்டிலோ அல்ல மனித நேய பணிகள் துவங்குவது.

மாறாக நாம் வாழும் குடும்பங்களில் இருந்து அந்த செயல் தொடங்கப்பட வேண்டும். முதலில் வீட்டில் உள்ளவர்களுடன் மனித நேயத்தை பேண வேண்டும். அப்போதுதான் சமூகத்தை மற்றும் நாட்டை குறித்த மனித நேய சிந்தனை மலரும்.

எமது முந்தய பதிவை வாசிக்க: இந்தியாவின் விடிவெள்ளி இளைஞர்களே

தானமும் மனித நேயமமும்

இயற்கை பலகோடி ஜீவ ராசிகளை படைத்திருந்த போதிலும்  அதில் மிகவும் சிறப்பான படைப்பே மனித குலம். மனிதம் என்பது நாடு, மொழி, இனம், மதம் போன்ற அடையாளங்களையும் தாண்டி மனதால் இணைந்து நிற்பதே. மனதை உடையவன் என்பதால் தான் மனிதன் என அழைக்கப்பட்டான். தேவையில் இருப்போருக்கு தேவையான நேரத்தில் சரியான உதவியை செய்வது தான் மனித நேயம்.

ADVERTISEMENT

பணமோ, பொருளோ நிறைவாக உள்ளவர்கள் இந்த உதவியை செய்யலாம். அந்த வசதி வாய்ப்புகள் இல்லாத நாங்கள்  என்ன செய்ய முடியும்? என நீங்கள் உணரக் கூடும். உதவி என்று வரும்போது பணம் அல்லது பொருள் கொடுத்து உதவுவது மனித நேயத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், இதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன.

குறிப்பாக பல்வேறு நோய்களினால் பாதிக்கப் பட்டு மருத்து வமனையில் இரத்தம் தேவை படுவோருக்கு, உங்களால் முடிந்தால் அந்த உதவியை நீங்களோ அல்லது தகுதி உள்ளவர்களை இனம் கண்டு அந்த உதவியை செய்யலாம்.

அது போல கண் தானம் போன்ற உடல் உறுப்பு தானங்களை மேற்கொள்ளலாம். இன்னும் சாலை விபத்துகளில் சிக்குண்டு தவிக்கும்  நபர்களை கண்டால் அவர்களை பக்கத்து மருத்து வமனையில் கொண்டு சேர்த்து உதவலாம்.

மனிதாபிமான உதவி

இயற்கையால் ஏற்படும் பேரிடர்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நமது நேரத்தை செலவு செய்து  சில அடிப்படை உதவிகளை செய்யலாம். மற்றும் கல்வி அறிவில்லாதவர்கள் வங்கி போன்ற இடங்களில் உதவி கேட்டு நிற்கும்போது அவர்களுக்கு உதவலாம்.

இன்னும் இவ்வாறு அடுக்கிக் கொண்டே செல்லலாம். சுருங்கக் கூறின் சக மனிதனுக்கு உதவி எந்த வடிவத்தில் தேவைப் பட்டாலும் அதை நிறைவான மனநிலையோடு செய்வதே மனித நேயம்.

ADVERTISEMENT

உடன்வாழும் மனிதகுலம் நன்றாய் வாழ வேண்டும் என்பதற்காக சிறை செல்வது அல்லது உயிரையே கொடுக்கும் செயல்கள் மனித நேயத்தின் உச்சக் கட்டம் எனலாம். இப்படிப் பட்ட மனித நேய செயல்களும் எங்கோ சில இடங்களில் நடப்பது மனித நேயம் இன்னும் உயிரோடு இருக்கின்றது என்பதற்கு சான்றாக அமைகின்றது.

அரும்புக்களின் ஆழ்மனதில் மனிதநேயம்

இன்றைய சமூகத்தில் மனித நேயம் குறைந்து காணப் படுவதற்கு மிக முக்கிய காரணம் குடும்பங்களில் இருக்கும் பெற்றோர்கள் தான்.  குழந்தைகளின் மனதில் இத்தகைய சிந்தனைகளை விதைக்காததன் காரணமாக மனித நேய செயல்கள் மறக்கடிக்கப் பட்டு மனிதம் சிதைக்கப் படுகின்றது.

குழந்தைகள் பிறந்து வளர்ந்து வரும் குடும்பங்களில் இருந்தே மனிதத்தை போற்றி பாதுகாக்கும் செயல்கள் துவங்கப்பட வேண்டும். உதாரணமாக நமது வீட்டில் பிச்சை கேட்பதற்காக ஒரு நபர் வருகின்றார் என வைத்துக் கொள்வோம். பெரும்பான்மையான வீட்டில் அந்த குழந்தைகள் முன்னிலையில் இருந்தே பெற்றோர், உதவி கேட்டு வந்த நபரிடம், உனக்கு கை, கால் நன்றாகத்தானே இருக்கின்றது.

நீ உழைத்து பிழைத்துக் கொள் என கூறி பலரும் அந்த நபரை விரட்டுகின்றனர். அல்லது என்னும் எதாவது காயப்படுகின்ற வார்த்தைகளால் திட்டி அனுப்பி விடுகின்றனர். அல்லது காது கேட்காதது போல் நடிக்கின்றனர். அது போல எதாவது அவசர பண தேவைக்காக ஒருவர் இவர்களை அணுகும்போது பண வசதி இருந்தாலும் ஒரே வார்த்தையில் இல்லை  என மறுக்கின்றனர்.

இந்த செயலை எல்லாம் அந்த பிஞ்சு குழந்தைகள் அமைதியாக கவனித்து வருகின்றனர். இந்த செயல்களை உள்வாங்கி வளரும் குழந்தைகள் மனதிலும் யாருக்கும் எந்த உதவியும் செயக் கூடாது  என்ற எண்ணம் துளிர் விடுகின்றது. ஆக இங்கிருந்துதான் மனிதத்தை சிதைக்கும் செயல்கள் ஆரம்பம் ஆகின்றன.

ADVERTISEMENT

குழந்தைகளை பயிற்றுவிப்போம்

மேற் சொன்னது  போல பிச்சை கேட்டு  வரும்போது, இருப்பதில் ஒரு சிறு தொகையினை அந்த குழந்தையின் கையில் கொடுத்து அந்த நபரிடம் கொடுக்கலாம். ஏற்பதும் மறுப்பதும் அதை பெறுபவர் விருப்பம். அல்லது எதாவது உதவி கேட்டு வரும் நபருக்கு நம்மால் இயன்றதை நமது குழந்தைவழியாக அந்த நபரிடம் கொடுக்கலாம்.

எதாவது உணவுப் பண்டங்களை உண்ணும் போது வீட்டில் இருபவர்களோடு பகிர்ந்து உண்ண பயிற்றுவிக்கலாம். இவ்வாறு அடுத்தவர்கள் நலனில் அக்கரை கொள்ளும் செயல்களை ஊக்கப் படுத்தினால் குழந்தைகளின் ஆழ்மனதில், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் முளைக்கும். இவ்வாறு பலகு டும்பங்கள் முயிற்சியினை முன்னெடுக்கும் போது வரும் காலங்கள் மனிதத்தை பேணி பாதுகாக்கும் பாதுகாவலர்கள் உருவாகுவது உறுதி.

மனிதநேயம் மலரட்டும்

இந்த பதிவை வாசிக்கும் நாம் எத்தைகைய மனநிலை படைத்தவர்களாக இருக்கின்றோம் என சிந்திப்போம். வாடும் மனிதத்தை கண்டால் ஓடோடிச் சென்று  கட்டி அணைத்து, பயப்பட வேண்டாம். நான் உதவுகிறேன் என ஆறுதல் கூறும் வகையை சார்ந்தவர்களா நீங்கள்? இல்லை அதையும் தாண்டி பொறுப்பை ஏற்றுக் கொண்டு யாரையும் எதிர் பார்க்காமல் மனமுவந்து உதவிக் கரம் நீட்டும் ரகமா நீங்கள் ?

அல்லது என் வழி எனக்கு. நான் உண்டு. எனது குடும்பம் உண்டு. எனக்கு வம்பெதற்கு? என ஒதுங்கிச் செல்லும் நபரா நீங்கள்?   முதல் இரண்டு வகையில் நீங்கள் இருந்தால் நீங்கள் பாராட்டுக்கு உரியவர்கள். மூன்றாவது வகையில் இருந்தால் உங்கள் மனதை கொஞ்சம் மாற்றிக் கொள்வது சிறப்பு. காரணம் துன்பங்கள், வேதனைகள் மற்றவர்களுக்கு மட்டும் அல்லவே! காலச் சக்கரம் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

இன்று வேறு ஒருவர் கையில் இருக்கும் வசதிகளும், வாய்ப்புகளும் அல்லது துன்பங்களும் அவருக்கு நிரந்தரம் அல்ல. அது பல மடங்காக நம்மிடம் ஒரு நாள் வந்தே தீரும். வசதி வாய்ப்புகள் வந்தால் சரி. துன்பம் வந்தால்….. ஒரு மனிதர் கூட உதவ முன் வரமாட்டார். கவனம் தேவை. ஏனெனில் இந்த பிரபஞ்சம் நாம் உலகுக்கு எதை கொடுக்கின்றோமோ அதை ஒருநாள் பல மடங்காக திருப்பிக் கொடுத்துவிடும்.

ADVERTISEMENT

எனவே பிறருக்கு இயன்ற அளவு உதவி செய்வோம். பல்வேறு கலாச்சாரம் கொண்ட நமது நாட்டில் மனித நேயம் மலர நம்மை அர்ப்பணிக்க முன் வருவோம். அதனால்மனித நேயம் மலரட்டும்.     ­­­­

எமது அடுத்த பதிவை படிக்க: இயற்கையின் முக்கியத்துவம்

 

 

One comment

  1. இந்த பதிவை வாசிக்கும் போது என்னால் உணரமுடிகிறது எனக்குள் இருக்கும் மனித நேயத்தை

Leave a Reply