மனிதர்களுக்கு இடையில் காணப்படும் உறவு என்பது மிகவும் உன்னதமானது. மனித உறவுகளின் முக்கியத்துவம் என்பது இன்று பல இடங்களில் புரிதல்களுக்கு அப்பாற்பட்டு நிற்கின்றது. உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த பதிவில் காண்போம்.
உறவின் அடித்தளம் நம்பிக்கை
உறவுகள் உறுதிபெற அடிப்படை நம்பிக்கை. நம்பிக்கை இல்லை என்றால் இந்த உலகம் என்றோ சின்னாபின்னம் ஆகியிருக்கும். நாம் எல்லோரும் ஒரு விதத்தில் பிறரை சார்ந்தே வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். பொதுவாக உறவு என்பது மகழ்ச்சியுடன் தான் ஆரம்பிக்கின்றது. காலங்கள் செல்ல செல்ல பல உறவுகளும் கசந்து விடுகின்றன.
கணவனுக்கு தனது மனைவி மேல் நம்பிக்கை இல்லை. மனைவிக்கு கணவன் மேல் நம்பிக்கை இல்லை. பெற்றோருக்கு குழந்தைகள் மேல் நம்பிக்கை இல்லை. உடன் பிறப்புகளுக்கு இடையில் நம்பிக்கை இல்லை.ஏன் நண்பனுக்கு கூட தனது சக நண்பனை நம்பிக்கை இல்லை. இவைகள் உதாரணங்கள் தான். இப்படித்தான் 90% உறவுகளும் இன்று காணப்படுகின்றது.
இப்படி அடிப்படை நம்பிக்கை தகர்ந்து போனால் உறவுகள் எப்படி நிலைத்து நிற்கும்? இந்த நம்பிக்கை இன்மைக்கு காரணம் ஒரு விதத்தில் சுயநலம் கூட காரணமாய் இருக்கின்றது. உதாரணமாக தனது மனைவி, தன்னை தவிர வேறு எந்த ஆணுடனும் பேசவோ அல்லது பார்க்கவோ கூடாது என்பது சுயநலம் அல்லவா?
அல்லது தனது கணவன் வேறு எந்த பெண்ணையும் பார்க்கவோ,பேசவோ கூடாது என்பது சுயநலம் தானே? சரியான புரிதல் இருந்தால் தான் உறவுகள் வலுப் பெறும்.
தவறான புரிதலால் வரும் பிரிதல்கள்
இதற்கு காரணம், சரியான புரிதல் இல்லாமையினால் தான். புரிதல் நன்றாக இருந்தால் தான் நம்பிக்கை வலுப்பெறும். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை. இவை அனுபவ மொழிகள். நமது தவறான புரிந்து கொள்தலால் அன்புக்குரிய பல நபர்களை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.
குறிப்பாக குடும்பம் என்ற அழகான பூந் தோட்டத்தில் கணவன், மனைவி என்ற புனிதமான உறவுகள், ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாததால் இன்று நீதி மன்ற வாசலில் விவாகரத்து கோரி நிற்கின்றன. இப்படி கணவன் என்ற உறவை மனைவியும் மனைவி என்ற உறவை கணவனும் எதோ ஒரு வேகத்தில் இழந்துவிட்டு நிம்மதி இன்றி தவிப்பவர்கள் ஏராளம்.
அது போல மாமியர் மருமகள் உறவு என்பது இன்று ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. பல இளம் பெண்கள் மாமியார்களின் சர்வாதிகார பிடியில் சிக்கி அந்த உறவில் இருந்து விலகி இருக்கின்றனர். அது போல பல மருமகள்களும் மாமியாரின் வயது கோளாறை புரிந்து கொள்ளாமல் அவர்களுடன் மல்லுக்கட்டி தாய் மகன் இடையே இருக்கும் உறவை சிதைக்க காரணமாய் இருக்கின்றனர்.
அது போல உடன் பிறப்புகளுக்கு இடையில் பல காரணங்களுக்காக தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றனர். அது சாதாரண மோதல்கள் அல்ல. ஒருவர் மற்றவர் உயிரை பறிக்கும் அளவுக்கு நிலைமைகள் தலை கீழாக சென்று கொண்டு இருக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் உறவுகளை கையாள தெரியாத நிலை தான். உறவுகளை பேணுவது என்பது ஒரு அற்புதமான கலையே.
எமது முந்தய பதிவை வாசிக்க:வேலை இல்லா திண்டாட்டமும் தீர்வும்
தவறுவது மனித இயல்பு
உறவுகள் பல நேரங்களில் சிதைந்து போவதற்கு மிக முக்கிய காரணம், மன தாங்கல்களை அல்லது பிறர் செய்த தவறை மன்னிக்கும் மனம் இல்லாதது தான். தவறுகள் செய்வது என்பது மனித இயல்பு. நமது நட்புகளில் அல்லது உறவுகளில் ஒருவர் நமது எதிர்பார்ப்புக்கு எதிராகவோ அல்லது நம் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் விதத்திலோ செயல்பட்டால் நமது மனம் காயப்படுவது உறுதி. அந்த நிகழ்வை நமது மனம் ஏற்றுக் கொள்ளாது.
உதாரணமாக உங்களது நண்பரின் மகனும், உங்கள் மகனும் இணைந்து ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தார்கள் என வைத்துக் கொள்வோம். நியாயமாக அது உங்கள் மகனுக்கு கிடைக்க வேண்டிய வேலை. அது உங்கள் மகனுக்கே கிடைக்கும் தருவாயில் இருகின்றது. அதை அறிந்து கொண்ட உங்கள் நண்பர் அந்த நிறுவனத்தை தெரிந்த நபர் வழியாக தொடர்பு கொண்டு அந்த வேலையினை தனது மகனுக்கு சொந்தம் ஆக்குகின்றார்.
இந்த செய்தி உங்கள் கவனத்துக்கு வருகின்றது. உங்கள் நெருங்கியே நண்பர், உங்கள் சுக மற்றும் துக்கங்களில் பங்கெடுத்தவர், தோளோடு தோள் கொடுத்து நின்றவர், தனது மகனது எதிர்காலம் என்றவுடன் இத்தனை காலம் உயிராய் நினைத்து வளர்த்து வந்த நட்புறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். உங்கள் உள்ளம் இந்த துரோகத்தை நினைத்து எந்த அளவுக்கு வேதனை படும் என்பது உங்களுக்கு தான் புரியும்.
இந்த வரலாற்று பிழையை உங்கள் நண்பர் செய்ததால் இதுவரை நீங்கள் பேணி வளர்த்து வந்த உறவு உடைத்து விட்டது. இப்போது நீங்கள் அவர் பல்வேறு நன்மை தனங்களில் ஈடு பட்டதை மறந்து அவரை சபிக்க தொடங்குவீர்கள். அவரை உங்கள் ஜென்ம விரோதியாய் அல்லவா நீங்கள் பார்க்கத் தொடங்குவீர்கள். அவர்களை நீங்கள் மறந்தாலும் மன்னிக்கமாட்டீர்கள் அல்லவா ? இது போன்ற சூழ்நிலைகளில் தான் உறவுச் சிக்கல்கள் நிகழ்கின்றன.
மன்னிப்பே உறவை வலுப்படுத்தும்
இது போன்ற சூழ்நிலைகளில் உறவுகளை வலுப்படுத்த ஒரே ஆயுதம் மன்னிப்பு ஓன்று தான். இது போன்ற நம்பிக்கை துரோகங்களை நாம் மன்னிப்பது என்பது மிகவும் கடினம் தான். ஆனால் தனது சொந்த பிள்ளைகள் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் செய்தாலும், அந்த வேதனைகளை மறந்து அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் ஏராளம்.
அது போல குடும்ப வாழ்வில் இருக்கும் கணவன் தனது மனைவிக்கு செய்யும் நம்பிக்கை துரோகத்தை மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனைவிகள் ஏராளம் உண்டு. இன்னும் கணவனுக்கு எதிராக துரோகம் செய்யும் மனைவியை மனதார மன்னித்து உறவுக்கு உயிர் கொடுக்கும் கணவர்களும் அனேகம் உண்டு. தனது பிள்ளைகள் தங்களுக்கு கொடுக்கும் துன்பங்களை மறந்தும்,மன்னித்தும் அவர்களை மனதார வாழ்த்தும் பெற்றோருக்கும் பஞ்சம் இல்லை.
இது போன்று நட்புக்குள்ளும் நிகழும் மன வருத்தங்களை நாமும் மன்னித்தோம் என்றால் உறவுகள் மறு உயிர் பெற்று எழும் என்பது தான் ஆணித்தரமான உண்மை. நிகழ்ந்து விட்ட தவறை திருத்த நினைப்பது மீண்டும் புதிய உறவுச் சிக்கல்களை உருவாக்கும். எனவே மாற்ற இயல்வதை மாற்றவும், மாற்ற இயலாததை முழுமையாய் ஏற்றுக் கொள்வதும் தான் உறவை மேலும் வளர்க்கும். எனவே தவறை யார் செய்தாலும் அவர்களை மனதார மன்னித்து ஏற்றுக் கொள்வது உறவை வலுவாகும்.
பகிர்தலால் நிலைக்கும் உறவுகள்
உறவுகளை மேலும் வளர்க்க பகிர்தல் என்பது மிக முக்கியமான காரணியாக திகழ்கின்றது. இந்த பிரபஞ்சம் எல்லையற்ற செல்வ வளங்களை உங்களுக்கு வழங்கியிருக்கின்றது என்றால் அதை பதுக்க அல்ல. மாறாக இல்லாதவர்களோடு, இயலாதவர்களோடு பகிர்வதற்கே. இந்த நியதி உங்களுக்கு புரிந்தால் உங்கள் செல்வ வளங்கள் மேலும் பெருகுவதோடு சமூகத்தில் மனிதர்களோடு உள்ள உறவுகள் உச்சம் பெறும்.
பகிர்தல் என்றவுடன் அது நாம் சம்பாதித்த பணத்தை பகிரவேண்டும் என்று அர்த்தமல்ல. பகிர்தல் என்பது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தேவையில் இருப்போருக்கு நம்மிடம் இருக்கும் செல்வங்களை பகிர்வது தான். செல்வம் என்றால் பலரின் மனதிலும் வருவது பணம் என்ற எண்ணம் தான். இது தவறான எண்ணம்.
நம்மிடம் இருக்கும் திறமைகள், நமது நேரம்,பொருட்கள் கல்வி அறிவு மற்றும் பணம் போன்ற அனைத்தும் நமது செல்வங்கள் தான். இவற்றில் நமது அடுத்திருப்போருக்கு என்ன தேவையோ அதை பகிர்தல் தான் உண்மையான பகிர்தல். உதாரணமாக நீங்கள் நன்கு கல்வி கற்று தேர்ந்த ஒரு நபர் என்றால், உங்களது கல்வி அறிவை தேவை படும் நபர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் வழியாக கல்வி அறிவை பகிர்ந்து கொள்ளலாம்.
அது போல உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நபர் மருத்துவ மனையில் தங்கி சிகிட்சை பெற வேண்டிய கட்டாயம். அவருக்கு தாராளம் பணம் இருக்கின்றது. ஆனால் அவருக்கு உடனிருந்து உதவி புரிய யாரும் இல்லை. இது போன்ற சூழ்நிலைகளில் உங்கள் பொன்னான நேரத்தை அவர்களுடன் செலவிடுவதன் வழியாக பகிர்தலில் பங்கேற்கலாம்.
அது போல உங்கள் நண்பருக்கு அல்லது தெரிந்த ஒரு நபருக்கு அவரது எதிரியால் உயிருக்கு ஆபத்து என நீங்கள் தெரிந்து கொள்கின்றீர்கள். அந்த நபருக்கு தனது எதிரியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சம்மாளிக்கவோ அல்லது எதிர் தாக்குதல் நடத்தவோ திறமை இல்லை.
ஆனால் இந்த திறமைகள் உங்களிடம் இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கிச் செல்லாமல் இந்த உதவியினை நீங்கள் முன் வந்து செய்தால் உங்கள் திறமையினை இங்கே பகிர்ந்தீர்கள் என்று அர்த்தம்.
இன்னும் ஒரு நபர் தனது வீட்டில் நடக்கும் திருமண நிகழ்வுக்கோ , வீடு கட்டும் நிகழ்வோ, தொழில் செய்வதற்கோ அல்லது வேறு எதாவது தேவைகளுக்கோ பணவசதி இன்றி தடுமாறி நிற்கும் சூழலை நீங்கள் கண்டால், அந்த நபருக்கு உதவும் அளவுக்கு கடவுள் உங்களுக்கு பணவசதி கொடுத்திருந்தால், தயவு செய்து அந்த பகிர்தலை நீங்கள் செய்யுங்கள். திருப்பி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கொடுக்காதீர்கள்.
உங்களது நிலைமை சீரடைந்தவுடன் எனக்கு இந்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என சொல்லி கொடுங்கள். இதற்கு பதிலாக இந்த பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வழங்குவதை நீங்கள் உணர்வீர்கள். அது போல உங்கள் அன்பை, பாசத்தை கூட நீங்கள் பகிரலாம். இவ்வாறு பகிர்தல் பணியில் உங்களை இணைத்துக் கொண்டால் மனித உறவுகள் மீண்டும் வலு பெறும் என்பதில் ஐயம் இல்லை.
உறவை வளர்க்கும் விருந்து
பகிர்ந்துண்ணும் பண்பு அல்லது திருமணம், புதுமனைப் புகுவிழா, பிறந்த நாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகள் முன் காலங்களில் உறவை வளர்க்க பயன்படுத்தப் பட்டது. அதாவது எந்த வணிக நோக்கமும் இல்லாமல் பிறரோடு உள்ள உறவை உறுதிப்படுத்த உருவாக்கப் பட்டவை. ஆனால் இன்று பணம் சம்பாதிக்கும் ஒரு நிகழ்வாக இவைகள் மாறி விட்டன.
எனது நண்பன் வீட்டு திருமணத்துக்கு நான் 1000 ரூபாய் மொய் கொடுத்தால் அவன் எனது வீட்டு நிகழ்வுக்கு வரும்போது அதை பல மடங்காக திருப்பி தரவேண்டும் என்ற எண்ணம் குடிகொள்கின்றது. அது போல 1 சவரன் தங்கம் நான் பரிசாய் கொடுத்தால் அது அதிகமாக திருப்பி கிடைக்க வேண்டும் என்ற சிந்தனைகளும் வருகின்றது.
இதில் எதாவது குறைபாடு ஏற்ப்பட்டால் அல்லது திருப்பி கொடுக்க முடியாவிட்டால் அந்த மனிதர்களோடு உள்ள உறவு முறிக்கின்றது. இந்த எதிர்பார்ப்பு இல்லாத பகிர்தல் இன்று பல வழிபாட்டுத் தலங்களில் காணப்படுகின்றது. அன்னதானம் அல்லது அன்பின் விருந்து, சமபந்தி போன்ற பெயர்களில் உணவுப் பகிர்தல் நடக்கின்றது.
உண்மையான பகிர்தல் விருந்து என்பது, எனது மகிழ்ச்சியில் நீயும் பங்குகொள் என அழைத்து எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பகிர்வது தான்.
முடிவுரை
ஒரு ஆரோக்கியமான சமூகம் மலர மனித உறவு என்பது மிகவும் முக்கியமானது. மனித உறவுகளை பேணி பாதுகாக்க இயற்கை நமக்கு அருளிய அனைத்து செல்வங்களையும் பாதுக்காமல் பகிரவேண்டும் என்பதே எனது கருத்து.
உள்ளதை உண்மையாய் பகிர்ந்தால் நம்மை சார்ந்த மனித சமூகம் நல்ல உறவோடு வாழும்.நாமும் மன நிறைவோடு வாழலாம். எனவே மனித உறவுகளின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்படுவோம்.
எமது அடுத்த பதிவை படிக்க: இல்லற வாழ்வில் வெற்றி பெற
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.
Super sir
எதை மற்றவர்களுக்கு செய்தாலும் அதை எதிர்பார்ப்புடன் செய்யக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அது குடும்பங்கள் இருந்துதான் முதலில் ஆரம்பமாகிறது அருமையான பதிவு