உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்
இந்த உலகில் அக்கிரமம் செய்பவர்கள் எல்லாம் நன்றாக வாழ்கின்றர்களே” ஆம் இது பலரின் ஆதங்கம். இதனால் இறைவனின் மீது நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்
உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்
உப்பு தின்னவன் தண்ணி குடித்துதான் ஆகவேண்டும். அதாவது தப்பு செய்தவன் தண்டனையை நிச்சயம் அனுபவிப்பான். இதோ அதற்கு ஒரு சிறு உதாரணம்.
ஒரு நாட்டின் அரசன் தனது மக்களுக்கு நலப்பணிகளை அதிகம் செய்ய மூன்று மக்கள்நலப் பணியாளர்களை நியமித்து அவர்கள் சிறப்பாக செயல்பட எல்லா அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்கினான். மூவருக்கும் சமமான ஊதியத்தையும், ஒரு அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினான்.
நாட்கள் செல்லச் செல்ல, மக்கள் நலப்பணிகளில் ஊழல்கள் நடப்பதாக அரசனுக்கு தகவல்கள் குவிந்தன. எனவே புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அந்த மூன்று அதிகாரிகளையும் அழைத்து விசாரணை நடத்தினான் மன்னன்.
விசாரணையின் போது அதிகாரிகள், இல்லை மன்னா, மக்கள் பொறாமையால் உங்களை தூண்டி விட்டிருகிறார்கள். இந்த நாட்டு மக்களுக்காகவே எங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று முறையிட்டனர். மன்னன் அவர்களை அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
ஊழலை யாரும் கண்டு பிடிக்காதவாறு மிகவும் திறமையாக செய்திருக்கின்றார்கள். உண்மையிலேயே இவர்கள் மூவரும் சேர்ந்துதான் ஊழல் செய்தார்களா? இல்லை ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து செய்தார்களா? இதை உடனே கண்டுபிடிக்க வேண்டுமே… என்று நினைத்தான்.
அரசனின் திட்டம்
ஒரு வாரம் தாண்டி மூன்று அதிகாரிகளும் மீண்டும் அரசவைக்கு அழைக்கப்பட்டார்கள். உங்கள் மூவருக்கும் மக்கள் நலப்பணி இன்னும் எவ்வாறு சிறப்பாக செய்யவேண்டும் என ஒரு பயிற்சி தரப்போகின்றேன். அதை செய்ய உடனே உங்களை அனுப்பி வைக்கப் போகின்றேன்.
உங்களிடம் சில சாக்கு பைகள் தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நமது நாட்டின் அருகில் உள்ள காட்டுக்கு செல்லுங்கள். உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்கும் பைகளில் காய்கள், கனிகள், கிழங்குகள், தானியங்கள், விதைகள் போன்றவற்றால் நிரப்பி விடுங்கள்.
அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை கொண்டு ஒரு மனிதன் ஒரு மாதம் சாப்பிட வேண்டும். ஆனால் நீங்கள் கொண்டு வரும் பொருட்களை நங்கள் யாரும் சோதனை செய்யமாட்டோம். அதை அப்படியே சில ஏழை மக்களுக்கு கொடுத்து விடுவோம்.
அவர்கள் அதை உண்டு நிறைவாய் உங்களை வாழ்த்த வேண்டும். எனது இந்த திட்டம் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் அனேக மக்கள் நலப் பணியாளர்களை பணியில் அமர்த்தி நமது மக்களின் பசியை போக்கலாம்.
மேலும் வாசிக்க: நகைச்சுவை கதையும் நல்வாழ்வுக்கான கருத்தும்
காட்டுக்கு அனுப்பப்படல்
மறுநாள் மூன்று அதிகாரிகளும் வெவ்வேறு காட்டுப்பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள். காட்டில் காய்கள், கனிகள், கிழங்குகள், தானியங்கள், விதைகள் போன்றவை தாராளமாக கிடைக்கும்தான். ஆனாலும் என்ன செய்வது?
அரண்மனை போன்ற வீட்டில் சுகமாய் வாழ்ந்து பழகியவர்களுக்கு, அலைந்து திரிந்து பொருட்களை சேகரிப்பது என்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது.
மட்டுமல்ல இந்த பொருள்களை சேகரிக்கும் வரை அவர்களும் பழங்களையும், காய்களையும் தான் சாப்பிடவேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமானதாகத்தான் இருந்தது.
முதல் அதிகாரி
முதல் அதிகாரி யோசித்தார். நாம் சற்று துன்பப்பட்டாலும் பரவாயில்லை. அரசரின் இந்த திட்டம் வெற்றி பெற்றால் நாட்டு மக்கள் பசியாறுவர்களே. நாமும் நாட்டுக்கு நன்மை செய்தோம் என்ற திருப்தி கிடைக்கும் என்று தனக்கு தானே எண்ணிக் கொண்டார்.
எனவே இரண்டு நாட்கள் போராடி தான் கொண்டுவந்த சாக்குகளில் முதல்தரமான காய்கள், கனிகள், கிழங்குகள், தானியங்கள், விதைகள் போன்றவை தேர்வு செய்து அவற்றை சேகரித்தார். பின்னர் அரண்மனையில் கொண்டு சேர்த்தார்.
இரண்டாவது அதிகாரி
இரண்டாவது அதிகாரியும் யோசித்தார். ஆனால் குறுக்கு வழியில் அவரது சிந்தனை சென்றது. நாம் கொண்டு வரும் சாக்குகளை யாரும் சோதிக்கமாட்டார்கள் என மன்னர்தான் சொல்லிவிட்டாரே ..
ஒருவேளை சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். எனவே எல்லாச் சாக்கிலும் முக்கால் பங்கு கையில் கிடைக்கும் அழுகிய பழங்களை போட்டு நிரப்புவோம். மேலே மட்டும் கொஞ்சம் நல்ல பொருள்களையும் சேகரித்துவிட்டு இன்றே அதை கொண்டு அரசவையில் சேர்த்து விடுவோம்.
பின்னர் வீட்டில் சென்று நிம்மதியாய் படுத்து உறங்கலாம் என தனக்குத்தானே சூளுரைத்துக் கொண்டார். அவர் தீர்மானித்த படியே அன்று இரவோடு தனது பணியை முடித்துவிட்டு சென்றுவிட்டார்.
மூன்றாவது அதிகாரி
மூன்றாவது அதிகாரி மிகவும் சுலபமாக சிந்தித்து ஒரு முடிவை மேற்கொண்டார். பைக்குள் என்ன இருக்கின்றது என்று யாரும் பார்க்கப் போவதில்லை.
எனவே காய்ந்த இலைகளையும், தரையில் தனது கண்ணுக்கு பட்ட தேவைற்ற எல்லா பொருட்களையும் தனது சாக்கு பைகளில் அடைத்துவிட்டு சில மணி நேரத்திற்குள் அதை அரண்மனைக்குள் கொண்டு சேர்த்துவிட்டு தனது இல்லத்தில் சென்று ஓய்வடுத்துக் கொண்டார்.
மேலும் வாசிக்க: இந்தியாவின் விடிவெள்ளி இளைஞர்களே
மன்னனின் அழைப்பு
மூன்றாவது நாள் மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தன். அவர்கள் முனிலையில் தனது காவலர்களை வரவழைத்தார். காவலர்களுக்கு இவ்வாறு கட்டளை பிறப்பித்தான்.
இந்த மூவரையும் தனித்தனியாக பாதாளச்சிறையில் அடையுங்கள். அவரவர் கொண்டுவந்த சாக்குப்பைகளை அவரவரிடமே வைத்துவிடுங்கள். இரண்டு வாரங்கள் இவர்கள் சிறையில் இருக்கட்டும். இந்த இரண்டு வாரங்களுக்கு எந்த உணவும் இவர்களுக்கு வழங்க வேண்டாம்.
அவர்கள் காட்டிலிருந்து ஏழைகளுக்கு என சேகரித்துவந்தவற்றை மட்டுமே அவர்கள் உண்ணட்டும். இவ்வாறு சொல்லிவிட்டு மன்னர் சென்றுவிட்டார். காவலர்களும் உத்தரவை நிறைவேற்றினர்.
வேலையின் கூலி
மூன்றாம் அதிகாரியால் தான் கொண்டுவந்த சருகுகளை உண்ணமுடியாமல், தனது சோம்பறித்தனத்தை நினைத்து, நினைத்து அழுது புலம்பி பசியின் கொடுமையால் ஒருவாரத்தில் இறந்துபோனார்.
இரண்டாவது அதிகாரியோ, தான் சேகரித்து வந்த சில நல்ல பொருட்களையும், அழுகிய காய் கனிகளையும் உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.
ஆனால் அவரது உடலும், மனமும் மிகவும் பாதிப்புக்குள்ளானதால் அவரை மன்னர் பணிநீக்கம் செய்த்துவிட்டார்.
முதலாம் அதிகாரி தான் சேகரித்து வந்த தரமான காய்கள், கனிகள், கிழங்குகள், தானியங்கள், விதைகள் ஆகியவற்றை நிறைவாக உண்டு, இரண்டு வாரங்களையும் தனிமை சிறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு ஆரோக்கியமாக வெளியே வந்தார்.
மன்னரோ .. அவரை அன்புடன் வரவேற்று பல பரிசுகளை வழங்கி அவரை பாராட்டி தனது நாட்டில் மிக முக்கியமான பதவியில் அமர்த்தினார்.
தினை விதைப்பவன் தினை அறுப்பான்
ஆம் நட்புக்களே! இந்த அருமையான கதை உணர்த்துவது என்ன என்பதை புரிந்து கொண்டீர்களா? தினை விதைப்பவன் தினை அறுப்பான். வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்ற பழமொழி இதற்காகத்தான் சொல்லி வைக்கப்பட்டது.
மாணவர்கள் என்றாலும் சரி, வேலை மற்றும் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, குடும்பத்தை, நாட்டை வழிநடத்தும் தலைவர்களாக இருந்தாலும் சரி. தனது கடமையை உணர்ந்து சரியாக செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் நல்ல வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
கடமையை செய்யாமல் கடமைக்கு செய்தால் வாழ்வில் துன்பங்களை அனுபவித்து சாகவேண்டிவரும். உப்பை தின்றவன் தண்ணி குடித்துதான் ஆகவேண்டும்.
நீங்கள் உங்கள் பைகளில் பழங்களை சேகரிக்கின்றீர்களா? அல்லது அழுகிய பழங்களையும், சருகுகளையும் சேகரிக்கின்றீர்களா? என யாரும் உங்களை கண்காணிப்பது இல்லை.
இயற்கையின் நியதி
ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள் சாப்பிடவேண்டும் என்பதே இயற்கையின் நியதி என்பதை எல்லோரும் நினைவில் வைத்திருப்போம். இந்த உலகில் அக்கிரமம் செய்பவர்கள் எல்லாம் நன்றாக வாழ்கின்றர்களே என்று நீங்களும் நினைத்து ஆண்டவன் மீது நம்பிக்கை இழக்காதீர்கள்.
அக்கிரமம் செய்பவன் இப்போது அழுகிய பழங்களையும், காய்ந்த சருகுகளையும் தனது பையில் சேகரித்துக் கொண்டிருக்கின்றான். ஒரு நாள் இயற்கையின் விதிப்படி அவனும் தனிமைச்சிறையில் அடைக்கப்படுவான்.
அப்போது அவனுக்கு பசியும், கொடுமையான மரணமும் பரிசாக கிடைக்கும். இது இயற்கையின் சட்டம். எனவே நாம் அனைவரும் நல்லதை செய்வோம்.அதை இன்றே செய்வோம். மகிழ்ச்சியாய் வாழ்வோம்.
மேலும் வாசிக்க: வெற்றிக்குத் தேவை இலட்சியமே